கோவை : கோவை குனியமுத்தூர் ஆத்துப்பாலம் அருகே உள்ள சுண்ணாம்பு காளவாய் பகுதியில் மழைநீருடன் கலந்து அதிக அளவில் வெண்மையான நுரை பொங்கி வருவது அப்பகுதி மக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. காற்றில் பறக்கும் நுரை குடியிருப்புப் பகுதிகளுக்குள் பரவி வருவதால், உடல்நலப் பாதிப்புகள் ஏற்படுமோ என பொதுமக்கள் கவலை அடைந்துள்ளனர்.
கோவை மாநகரப் பகுதியில் கடந்த 3 நாட்களாகப் பெய்த கனமழையால் பல்வேறு இடங்களில் மழைநீர் பெருக்கெடுத்து ஓடுகிறது. இந்நிலையில், குனியமுத்தூர் ஆத்துப்பாலம் அருகே உள்ள சுண்ணாம்பு காளவாய் பகுதியில் மழைநீருடன் அதிக அளவில் வெண்மையான நுரை கலந்து பாய்ந்து செல்கிறது. இதனால் அந்தப் பகுதி முழுவதும் பனிப்பொழிவுபோல் காட்சியளிக்கிறது.
அப்பகுதியில் செயல்படும் சில தொழிற்சாலைகள் அல்லது நிறுவனங்கள் மழைநீருடன் ரசாயனக் கழிவுகளைக் கலந்துவிட்டிருக்கலாம் எனப் பொதுமக்கள் சந்தேகம் தெரிவிக்கின்றனர். எனினும், நுரை உருவானதற்கான காரணம் இதுவரை உறுதிப்படுத்தப்படவில்லை.
மழைநீரின் வேகம் மற்றும் பலத்த காற்று காரணமாக நுரை அருகிலுள்ள குடியிருப்புப் பகுதிகளுக்கும் வீடுகளுக்குள்ளும் பரவி வருவதாகக் கூறப்படுகிறது. இதனால் குழந்தைகள் உள்ளிட்டோருக்கு சுவாசப் பிரச்சினைகள், சரும ஒவ்வாமை மற்றும் கண் எரிச்சல் போன்ற பாதிப்புகள் ஏற்படுமோ எனக் குடியிருப்புவாசிகள் அச்சமடைந்துள்ளனர்.
Video
மேலும், ரசாயனக் கழிவுகள் கலந்த நீர் நிலத்தடி நீரில் கலந்தால் குடிநீரின் தரம் பாதிக்கப்படக்கூடும் என்றும் பொதுமக்கள் கவலை தெரிவிக்கின்றனர். இதனால், நுரை உருவாவதற்கான காரணத்தைக் கண்டறிந்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என அவர்கள் வலியுறுத்துகின்றனர்.
தமிழ்நாடு மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் மற்றும் கோவை மாநகராட்சி அதிகாரிகள் சம்பவ இடத்தில் நேரில் ஆய்வு செய்து, நீரின் மாதிரிகளைச் சேகரித்து பரிசோதனை நடத்த வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். ரசாயனக் கழிவுகள் கலக்கப்பட்டிருப்பது உறுதி செய்யப்பட்டால், அதற்குக் காரணமான நிறுவனங்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், நுரை குடியிருப்புப் பகுதிகளுக்குப் பரவுவதைத் தடுக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளனர்.






