கோவை: கோவையில் ஒன்றரை வயது குழந்தையின் விரல் இட்லி தட்டில் சிக்கிக்கொண்ட நிலையில், தீயணைப்பு வீரர்கள் துரிதமாகச் செயல்பட்டு, குழந்தைக்கு எவ்வித பாதிப்பும் ஏற்படாமல் விரலைப் பத்திரமாக மீட்டனர்.
கோவையில் இன்று காலை ஒன்றரை வயது குழந்தை ஒன்று வீட்டில் இருந்த இட்லி தட்டைக் கையில் வைத்திருந்தபோது, எதிர்பாராதவிதமாக அதன் துளையில் குழந்தையின் விரல் சிக்கிக்கொண்டது.
இதனால் அதிர்ச்சியடைந்த பெற்றோர், குழந்தையின் விரலை வெளியே எடுக்க முயன்றுள்ளனர். ஆனால், விரலை எடுக்க முடியாததால் பதற்றமடைந்த அவர்கள், கோவை தெற்கு தீயணைப்பு நிலையத்தைத் தொடர்புகொண்டு உதவி கோரியுள்ளனர்.
இதையடுத்து, தீயணைப்பு வீரர்களின் உதவியைப் பெறுவதற்காகக் குழந்தையை இட்லி தட்டுடன் பெற்றோர் தீயணைப்பு நிலையத்திற்கு அழைத்து வந்தனர்.
Also Read: மருதமலை சாலை சீரமைப்புப் பணிகள்- அமைச்சர் சம்பத்குமார் ஆய்வு…
அங்கு பணியில் இருந்த தீயணைப்பு மற்றும் மீட்புப் பணித் துறையினர், குழந்தையின் விரலில் சிக்கியிருந்த இட்லி தட்டை ஆய்வு செய்தனர். பின்னர், குழந்தைக்கு எந்தவிதக் காயமும் ஏற்படாத வகையில் மிகுந்த கவனத்துடன் இட்லி தட்டை அறுத்து அகற்றினர்.
தீயணைப்பு வீரர்களின் துரிதமான மற்றும் நிதானமான நடவடிக்கையால் குழந்தையின் விரல் எவ்வித பாதிப்புமின்றிப் பத்திரமாக மீட்கப்பட்டது.
VIDEO
இதனால் நிம்மதியடைந்த பெற்றோர், உரிய நேரத்தில் உதவி செய்து குழந்தையைப் பாதுகாப்பாக மீட்ட தீயணைப்பு வீரர்களுக்கு நன்றி தெரிவித்தனர்.
மேலும், சிறு குழந்தைகள் விளையாடுவதற்காக வழங்கப்படும் பொருட்களில் விரல்கள், கைகள் அல்லது கால்கள் சிக்கிக்கொள்ளும் வகையில் துளைகள் இருந்தால், அவற்றைக் குழந்தைகளிடம் கொடுப்பதைத் தவிர்க்க வேண்டும். குழந்தைகள் பயன்படுத்தும் பொருட்களின் பாதுகாப்பை பெற்றோர் உறுதி செய்ய வேண்டும் எனத் தீயணைப்புத் துறையினர் அறிவுறுத்தியுள்ளனர்.





