உஷார்: GPay மூலம் 112 பேரிடம் மோசடி; கோவையில் காதல் தம்பதி கைது!

கோவை: GPay மூலம் பணம் அனுப்பியதாகக் கூறி 112 பேரிடம் நூதன மோசடியில் ஈடுபட்ட காதல் தம்பதியை போலீசார் கைது செய்துள்ளனர்.

தெலுங்கு பாளையத்தைச் சேர்ந்தவர் சக்திவேல். இவர் சங்கனூர்-நல்லாம்பாளையம் சாலையில் இறைச்சிக் கடை நடத்தி வருகிறார்.

கடந்த 15ம் தேதி பிற்பகல் 3 மணிக்கு வியாபாரம் முடித்த சக்திவேல், கடையை மூட தயாராகிக் கொண்டு இருந்தார். அப்போது அவருடைய கடைக்கு பைக்கில் ஒரு ஆணும், பெண்ணும் வந்தனர்.

அவர்கள் சக்திவேலிடம், “தம்பதிகளான நாங்கள் இங்குள்ள மருத்துவமனைக்கு வந்தோம். ஏ.டி.எம் கார்டு இருப்பதால் பணம் எடுத்துக் கொள்ளலாம் என்று நினைத்து அவசரத்தில் பணம் எடுக்காமல் வந்து விட்டோம். இங்கு ஏ.டி.எம்., மையத்தில் பணம் எடுக்கச் சென்ற போது எங்களது கார்டு வேலை செய்யவில்லை. தற்போது மருத்துவமனையில் சிகிச்சை பெற அவசரமாக ரூ.2,000 தேவைப்படுகிறது. உங்களிடம் கையில் இருக்கும் பணத்தைக் கொடுத்தால் எங்களது செல்போனில் இருந்து ஜி.பே மூலம் பணம் அனுப்பி விடுகிறோம்” என்று கூறியுள்ளனர்.

மருத்துவமனையில் அவசரம் எனக் கூறியதை நம்பி சக்திவேல் அவர்களிடம் ரூ.2,000ஐ கொடுத்தார். அதை வாங்கிக் கொண்டவர்கள் ஜி.பே மூலம் பணத்தை அனுப்பி விட்டதாகக் கூறி தங்களது செல்போனில் இருந்து குறுஞ்செய்தியை சக்திவேலிடம் காண்பித்தனர்.

மருத்துவ உதவிக்காகப் பணம் கேட்டதால் அவர்கள் காட்டிய ஆவணத்தை முழுமையாகப் பரிசோதிக்காமல், பணம் வந்து விட்டதாகக் கருதினார் சக்திவேல். தொடர்ந்து அந்த தம்பதியினர் மேலும். ரூ.2,000 கொடுத்தால் அதையும் ஜி.பே மூலம் அனுப்பி விடுவதாகக் கூறினார்.

அதை நம்பி சக்திவேல் மீண்டும் ரூ.2,000 பணத்தை எடுத்து அவர்களிடம் கொடுத்தார். மீண்டும் அவர்கள் ஜி.பே மூலம் அனுப்பி விட்டதாகக் கூறி செல்போனில் குறுஞ்செய்தியைக் காண்பித்து விட்டுச்சென்றனர்.

நீண்ட நேரத்துக்குப் பிறகு சக்திவேல் தனது வங்கிக் கணக்கைப் பார்த்தபோது அந்த தம்பதி அனுப்பிய பணம் வரவில்லை என்பதும், அவர்கள் மோசடி செய்ததும் தெரிய வந்தது.

மனமுடைந்த அவர், கவுண்டம்பாளையம் போலீசில் அளித்த புகாரில் வழக்குப் பதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தினர்.

இதைத் தொடர்ந்து, மோசடி தம்பதியைப் பிடிக்க தனிப்படை அமைக்க காவல் ஆணையர் சரவண சுந்தர் உத்தரவிட்டார். தனிப்படை போலீசார் அங்குள்ள சி.சி.டி.வி கேமிராவில் பதிவான காட்சிகள் அடிப்படையில் விசாரணை நடத்தி மோசடி தம்பதி வந்த பைக்கின் பதிவு எண்ணைக் கண்டறிந்தனர்.

அப்போது அவர்கள் சுகுணாபுரம் பழைய பள்ளிவாசல் தெருவைச் சேர்ந்த முகமது ரிஸ்வான். அவருடைய மனைவி சர்மிளா பானு என்பதும் அவர்கள் இரண்டு பேரும் காதலித்து ஒன்றரை மாதத்திற்கு முன்பு திருமணம் செய்து கொண்டதும் தெரியவந்தது.

அந்த தம்பதியை மடக்கிப் பிடித்து கைது செய்த போலீசர் விசாரித்ததில், அவர்கள் இதேபோல் 112 பேரிடம் ரூ.2 லட்சத்துக்கு மேல் பண மோசடி தெரிய வந்தது. தொடர்ந்து அவர்களை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

இது குறித்து போலீசார் கூறியதாவது:-

கைதான ரிஸ்வான் கால் டாக்ஸி டிரைவராக வேலை பார்த்து வந்துள்ளார். அப்போது ஒரு டிரைவர் நூதன முறையில் பணத்தை இழந்ததாகக் கூறினார்.

அதாவது, ஜி.பே மூலம் பணம் அனுப்பும் போது, Pay மற்றும் Request என்ற இரண்டு குறியீடுகள் வரும், அதில் Pay என்று குறியீட்டை அழுத்தினால் பணம் மற்றவருக்குச் சென்றடையும், Request என்று அழுத்தினால் பணம் போகாது.

மாறாக உங்களிடம் பணம் கேட்கிறார், என்று Notification மட்டும் வரும். இதை சிலர் சரியாக கவனிக்காமல் பணம் வந்து விட்டதாக நினைத்து விடுகிறார்கள்.

இதைத் தெரிந்து கொண்டு ரிஸ்வான் தனது காதல் மனைவியுடன் சேர்ந்து பலரிடம் நூதன முறையில் மோசடியை அரங்கேற்றியுள்ளனர்.

பணம் இழந்தவர்கள் செல்போனில் தொடர்பு கொண்டதால் உடனே அவர்கள் தொடர்பு கொள்ள முடியாதபடி அந்த எண்ணை பிளாக் லிஸ்டில் போட்டு வைத்து உள்ளனர்.

சிறிய தொகை தானே என்று பலரும் புகார் செய்யாமல் இருந்து உள்ளனர். இதனால் அவர்கள் தொடர்ந்து பலரிடம் மோசடியை அரங்கேற்றியதோடு போலீசிலும் சிக்காமல் தப்பி வந்து உள்ளனர்.

வாடகை வீட்டில் வசித்து வந்த காதல் தம்பதி மோசடி செய்த பணத்தை சொகுசு பொருள்கள் வாங்கி உல்லாசமாக இருந்துள்ளனர்.

கோவையில் இதுபோன்ற மோசடிகள் அதிகரித்து வரும் நிலையில், பொதுமக்கள் மற்றும் வியாபாரிகள் உஷாராக இருக்க வேண்டும்.

முகம் தெரியாத ஒரு நபர் பணம் அனுப்பியதும், அந்த பணம் வங்கிக்கணக்கிற்கு வந்துவிட்டதா என்ற கட்டாயம் பரிசோதிக்க வேண்டும். அதுவரை அவர்களிடம் காத்திருக்கச் சொல்லி வேண்டுகோள் வைப்பதில் எந்த தவறும் இல்லை.

இவ்வாறு போலீசார் கூறினர்.

Sathiya Priya
Sathiya Priyahttp://newscloudscoimbatore.com
Sathiya priya is an experienced journalist with 8 years of experience across various media platforms, and for the past 5 years she has been working with NewscloudsCoimbatore (NCC). She specializes in civic affairs, social issues, and people-centric reporting with a strong focus on accuracy and credibility.

Recent News

இடையில் வந்த தொல்லைகள்- புதிய கட்சிகளை விமர்சித்த கெளதமி…

கோவை: விளாத்திகுளம் பள்ளி மாணவி விவகாரத்தில் கனிமொழி எம்.பி-யின் பேச்சு மனிதத்தன்மையற்றது என நடிகை கௌதமி குற்றம் சாட்டியுள்ளார். கோவையை அடுத்த பச்சாபாளையத்தில் நேற்று நடைபெற்ற அதிமுக மகளிர் தின விழாவில் கலந்துகொண்ட அக்கட்சியின்...

Video

கோவையில் CRPF வளாகத்திற்குள் நுழைந்து திருப்தியாக சாப்பிட்டு சென்ற யானை…

கோவையில் CRPF வளாகத்திற்குள் நுழைந்த காட்டு யானை சமையலறையில் இருந்த அரிசி, மாவு உள்ளிட்ட உணவுப் பொருட்களை சாப்பிட்டு சென்ற வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.