ஆர்டர் வந்த போட்டோ ஷூட்- நம்பி என்ற போட்டோகிராபருக்கு நேர்ந்த சோகம்…

கோவை: போட்டோ ஷூட் என ஏமாற்றி இளைஞர் கொலை செய்யப்பட்டு தண்டவாளத்தில் வீசப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

கோவை தடாகம் அருகே காணாமல் போன புகைப்படக் கலைஞர் பிரவீன், ரயில் மோதி உயிரிழந்ததாகக் கருதப்பட்ட வழக்கில் அதிரடித் திருப்பமாக, அவர் முக்கோணக் காதல் விவகாரத்தில் காரில் வைத்துத் திட்டமிட்டுக் கழுத்தை நெரித்துக் கொலை செய்யப்பட்டு, தண்டவாளத்தில் வீசப்பட்டது அம்பலமாகி உள்ளது. இக்கொடூரச் செயலில் ஈடுபட்ட கரூர் காதலன் உட்பட இருவர் இன்று கோவை நீதிமன்றத்தில் சரணடைந்தனர்.


கோவை, தடாகம் அடுத்த மடத்தூர் பகுதியைச் சேர்ந்தவர் பிரவீன் (24). புகைப்படக் கலைஞரான இவர், கடந்த வாரம் வியாழக்கிழமை தனக்குப் புதிய புகைப்பட ஆர்டர் ஒன்று வந்து இருப்பதாகக் கூறி விட்டு ஒட்டன்சத்திரத்திற்குப் புறப்பட்டுச் சென்று உள்ளார். ஆனால், அதன்பின் அவர் வீடு திரும்பாததால், பதற்றம் அடைந்த குடும்பத்தினர் தடாகம் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். போலீஸார் வழக்குப் பதிவு செய்து அவரைத் தீவிரமாகத் தேடி வந்தனர்.

Advertisement

​இதற்கு இடையில், கோவை கிணத்துக்கடவு அருகே உள்ள ஏ.பி.சி (ABC) தியேட்டர் பின்புறமுள்ள ரயில்வே தண்டவாளத்தில் வாலிபர் ஒருவர் ரயிலில் அடிபட்டு உடல் துண்டான நிலையில் சடலமாகக் கண்டெடுக்கப்பட்டார்.

போத்தனூர் ரயில்வே போலீஸார் உடலைக் கைப்பற்றிச் சந்தேக மரண வழக்காகப் பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். அது காணாமல் போன பிரவீன் தான் என்பது உறுதி செய்யப்பட்டது. பிரவீன் ரயிலில் பாய்ந்து தற்கொலை செய்து கொண்டதாகவே அனைவரும் நினைத்தனர்.

​இந்நிலையில், இவ்வழக்கில் யாரும் எதிர்பாராத அதிரடித் திருப்பமாக, இன்று கோவை ஜே.எம்.1 (JM 1) நீதிமன்றத்தில் கரூரைச் சேர்ந்த மனோஜ் மற்றும் அவரது நண்பர் கார்த்திகேயன் ஆகியோர் ஆஜராகி, “நாங்கள் தான் பிரவீனைத் திட்டமிட்டுக் கொலை செய்து தண்டவாளத்தில் வீசினோம்” எனக் கூறி சரண் அடைந்தனர்.

அவர்களிடம் நடத்தப்பட்ட முதற்கட்ட விசாரணையில் கொலையின் பின்னணியில் உள்ள திடுக்கிடும் தகவல்கள் வெளியாகின.

​கரூரைச் சேர்ந்த மனோஜ்குமார் என்பவரும், கோவை சாய்பாபா காலனியைச் சேர்ந்த ஒரு பெண்ணும் கடந்த 4 வருடங்களாக இன்ஸ்டாகிராம் மூலமாகக் காதலித்து வந்து உள்ளனர். இதற்கிடையே, அந்தப் பெண் மடத்தூரைச் சேர்ந்த புகைப்படக் கலைஞர் பிரவீனுடனும் நெருக்கமாகப் பழகி வந்து உள்ளார். இந்த விபரம் கடந்த பிப்ரவரி மாதம் காதலன் மனோஜுக்குத் தெரியவந்தது. தங்களது காதலுக்குப் பிரவீன் இடையூறாக இருப்பதாகக் கருதிய மனோஜ், அவரைத் தீர்த்துக்கட்ட வஞ்சகமாகத் திட்டம் தீட்டினார்.

​பிரவீனின் இன்ஸ்டாகிராம் ஐ.டி யைக் கண்டறிந்த மனோஜ், கடந்த வாரம் வியாழக்கிழமை அவரைத் தொடர்பு கொண்டு, “ஒட்டன்சத்திரத்தில் ஒரு பெரிய போட்டோ ஷூட் இருக்கிறது, உடனே வாருங்கள்” என ஆசை வார்த்தை கூறி வரவழைத்து உள்ளார். அதை நம்பி அங்கு வந்த பிரவீனிடம், “இரவு நேரமாகிவிட்டது, நாளை காலை போட்டோ ஷூட் வைத்துக் கொள்ளலாம். இன்று இரவு என் வீட்டிலேயே தங்குங்கள்” எனக் கூறி, மனோஜும் அவரது நண்பர் கார்த்திகேயனும் சேர்ந்து பிரவீனுக்கு அளவுக்கு அதிகமாக மது வாங்கிக் கொடுத்துக் குடிக்க வைத்து உள்ளனர்.

​பிரவீன் முழுமையாகப் போதையானதும், “வீட்டிற்குச் செல்லலாம்” எனக் கூறி அவரைத் தங்களது காரின் முன் இருக்கையில் உட்கார வைத்து உள்ளனர். கார் நள்ளிரவில்சென்று கொண்டு இருந்த போது, காரின் பின்புறம் இருந்த மனோஜும், கார்த்திகேயனும் திடீரெனத் தாங்கள் மறைத்து வைத்து இருந்த கயிற்றால், முன்னால் அமர்ந்து இருந்த பிரவீனின் கழுத்தை வேகத்தில் இறுக்கினர். இதில் பிரவீன் காரின் உள்ளேயே மூச்சுத்திணறிப் பரிதாபமாக உயிரிழந்தார்.

​பிரவீன் இறந்ததை உறுதி செய்த கொலையாளிகள், கொலையைத் தற்கொலையாக மாற்றத் திட்டமிட்டனர். இதற்காகப் பிரவீனின் சடலத்தைக் காரில் ஏற்றி வந்து, கிணத்துக்கடவு பகுதியில் போத்தனூர் ரயில்வே எல்லைக்கு உட்பட்ட ஏ.பி.சி தியேட்டர் பின்புறம் உள்ள ரயில் தண்டவாளத்தில் தூக்கிப் போட்டனர்.

​அப்போது அவ்வழியாக வந்த அதிவேக ரயில் பிரவீனின் உடல் மீது ஏறியதில், அவரது உடல் துண்டாகி சிதறியது. தடாகம் போலீஸாரும், போத்தனூர் ரயில்வே போலீஸாரும் தங்களை நெருங்குவதை உணர்ந்த கொலையாளிகள் இருவரும் இன்று நீதிமன்றத்தில் சரணடைந்தனர்.

காதலி வேறொருவருடன் பழகியதால், இளம் புகைப்படக் கலைஞரைக் காரில் வைத்துத் துடிதுடிக்கக் கொலை செய்து ரயில் தண்டவாளத்தில் வீசிய இச்சம்பவம் கோவையில் பெரும் பரபரப்பையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தி உள்ளது.

Prakash N
Prakash Nhttps://www.newscloudscoimbatore.com
Prakash is a journalist with 4 years of experience in the media field. Passionate about journalism, he has been working with Newsclouds Coimbatore for the past 2 years, focusing on Coimbatore-centric news. His reporting emphasizes ground-level stories, accuracy, and issues that directly impact the local community.

Recent News

திருமணம் முடிந்த கையோடு மாட்டு வண்டியில் புறப்பட்ட தம்பதி- கோவையில் சுவாரஸ்யம்…

கோவை: கோவையில் புதுமண தம்பதியினர் மாட்டுவண்டியில் பயணம் செய்தது பலரது கவனத்தை ஈர்த்துள்ளது. கோவை மாவட்டம் கிணத்துக்கடவு அடுத்த சொலவம்பாளையம் பகுதியைச் சேர்ந்த அருண் விக்ரம் கோவையை சேர்ந்த விகாஷினி இருவருக்கும் கிணத்துக்கடவு பகுதியில்...

Video

திருமணம் முடிந்த கையோடு மாட்டு வண்டியில் புறப்பட்ட தம்பதி- கோவையில் சுவாரஸ்யம்…

கோவை: கோவையில் புதுமண தம்பதியினர் மாட்டுவண்டியில் பயணம் செய்தது பலரது கவனத்தை ஈர்த்துள்ளது. கோவை மாவட்டம் கிணத்துக்கடவு அடுத்த சொலவம்பாளையம் பகுதியைச் சேர்ந்த அருண் விக்ரம் கோவையை சேர்ந்த விகாஷினி இருவருக்கும் கிணத்துக்கடவு பகுதியில்...