கோவை : கோவையில் தனியார் டிரான்ஸ்போர்ட் நிறுவன அலுவலகத்தில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 630 கிலோ தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பைகளை மாநகராட்சி அதிகாரிகள் பறிமுதல் செய்து, ரூ.25 ஆயிரம் அபராதம் விதித்தனர்.
கோவை மாநகர பகுதிகளில் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்கள் விற்பனை செய்யப்படுகிறதா என்பது குறித்து மாநகராட்சி சுகாதாரத்துறை அதிகாரிகள் தொடர்ந்து ஆய்வு நடத்தி வருகின்றனர். இதன் ஒரு பகுதியாக, மாநகராட்சி கமிஷனர் கட்டா ரவி தேஜா உத்தரவின் பேரில், மத்திய மண்டல சுகாதார அலுவலர் குணசேகரன் தலைமையில் அதிகாரிகள் நேற்று காட்டூர் ராம் நகர் மற்றும் அன்சாரி வீதி பகுதிகளில் ஆய்வு மேற்கொண்டனர்.
அப்போது, அன்சாரி வீதியில் உள்ள தனியார் டிரான்ஸ்போர்ட் நிறுவன அலுவலகத்தில் அதிகாரிகள் சோதனை நடத்தினர். அங்கு மாநகர பகுதிகளில் உள்ள கடைகளில் விற்பனை செய்வதற்காக தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பைகள் அதிகளவில் பதுக்கி வைக்கப்பட்டிருந்தது தெரியவந்தது.
இதையடுத்து அங்கு வைக்கப்பட்டிருந்த 630 கிலோ பிளாஸ்டிக் பைகளை மாநகராட்சி அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். மேலும், சம்பந்தப்பட்ட நிறுவனத்திற்கு ரூ.25 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது.
கோவை மாநகரில் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்களின் பயன்பாடு மற்றும் விற்பனையை கட்டுப்படுத்த தொடர்ந்து ஆய்வுகள் நடத்தப்படும் என மாநகராட்சி அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
கோவையில் தனியார் டிரான்ஸ்போர்ட் அலுவலகத்தில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 630 கிலோ தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பைகளை மாநகராட்சி அதிகாரிகள் பறிமுதல் செய்து ரூ.25 ஆயிரம் அபராதம் விதித்தனர்.






