கோவை: அவினாசி சாலை மேம்பாலத்தில் முழுமையடையாத ரேம்ப் பணிகளால் வாகன ஓட்டிகள் தொடர்ந்து சிரமத்தை சந்தித்து வருகின்றனர்.
திருச்சி சாலை மற்றும் காந்திபுரம் பகுதிகளில் இருந்து அவினாசி சாலைக்கு செல்லும் வாகனங்கள், அண்ணா சிலை சந்திப்பு அருகே ரேம்ப் வசதி இல்லாததால் உப்பிலிபாளையம் சென்று மேம்பாலத்தில் ஏற வேண்டிய நிலை உள்ளது. அண்ணா சிலை அருகே திட்டமிடப்பட்ட ரேம்ப் அமைக்கப்பட்டிருந்தால், இந்த தேவையற்ற சுற்றுப்பாதையை தவிர்க்க முடியும்.
தற்போது பீளமேடு அருகே மேம்பாலத்தில் ஏறும் ரேம்ப் செயல்பாட்டில் உள்ளது. ஆனால் அண்ணா சிலை அருகே அமைக்கப்பட வேண்டிய மற்றொரு ரேம்ப் பணிகள் இன்னும் நிறைவு பெறவில்லை.
இந்த ரேம்ப் தொடர்பான பணிகளில் ஏற்கனவே சர்ச்சை ஏற்பட்டுள்ளது. மேம்பாலத்தின் அசல் வடிவமைப்பு மற்றும் வரைபடத்தில் மாற்றம் செய்யப்பட்டு தூண்கள் வேறு இடங்களில் அமைக்கப்பட்டதாக எழுந்த புகாரை சென்னை உயர்நீதிமன்றம் கடந்த 2025 மே 22-ஆம் தேதி விசாரித்தது.
தூண்கள் மாற்றியமைக்கப்பட்ட விதத்தில் கடுமையான முறைகேடுகள் இருப்பதாகக் குறிப்பிட்ட நீதிமன்றம், இந்த மாற்றம் தனியார் நலனுக்காக செய்யப்பட்டதாகவும், முடிவு நியாயமற்றதும் பாரபட்சமானதுமாக இருப்பதாகவும் தெரிவித்தது.
இதையடுத்து, அசல் வடிவமைப்பின்படி ரேம்புக்கான தூண்களை அமைக்கவும், மாற்றப்பட்ட இடங்களில் கட்டப்பட்ட தூண்களை அகற்றவும் நெடுஞ்சாலைத் துறைக்கு நீதிமன்றம் உத்தரவிட்டது.
இந்த உத்தரவை எதிர்த்து தமிழக அரசு மேல்முறையீடு செய்திருந்தாலும், தனி நீதிபதியின் உத்தரவுக்கு இதுவரை தடை எதுவும் பிறப்பிக்கப்படவில்லை. மேல்முறையீட்டு வழக்கும் நீண்ட காலமாக நிலுவையில் உள்ளது.
இதனால், ஒரு முக்கியமான பொதுமக்கள் பயன்பாட்டு திட்டத்தின் ஒரு பகுதி, நீதிமன்ற வழக்கு காரணமாக தொடர்ந்து முடங்கிக் கிடக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.
Also Read: காயமடைந்த முதியவர் மீது காலால் எட்டி உதைத்து… தண்ணீர் ஊற்றி விரட்டிய கொடூரம்!
அண்ணா சிலை அருகே ரேம்ப் அமைக்கப்பட்டால் திருச்சி சாலை, காந்திபுரம் உள்ளிட்ட பகுதிகளில் இருந்து வரும் வாகனங்கள் நேரடியாக அவினாசி சாலையை அடைய முடியும். இதனால் உப்பிலிபாளையம் நோக்கி தேவையில்லாமல் செல்ல வேண்டிய வாகன நெரிசலும் குறைய வாய்ப்புள்ளது.
எனவே, நிலுவையில் உள்ள சட்ட விவகாரத்துக்கு விரைந்து தீர்வு காணப்பட்டு, நீதிமன்ற உத்தரவின்படி பணிகளை நிறைவு செய்வதா அல்லது மேல்முறையீட்டை விரைந்து முடிப்பதா என்பதில் அரசு உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டிய கட்டாயத்தில் உள்ளது.





