கோவை: கோவையில் வீட்டு வரி விதிப்பதற்காக ரூ.40 ஆயிரம் லஞ்சம் கேட்டதாக, மாநகராட்சி வடக்கு மண்டல பில் கலெக்டரை லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் கையும் களவுமாகப் பிடித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
கோவை இடையர்பாளையம் காந்தி நகரைச் சேர்ந்த சந்தோஷ் (25), கட்டிட ஒப்பந்ததாரராகப் பணியாற்றி வருகிறார்.
இவர் வெள்ளக்கிணறு பகுதியைச் சேர்ந்த சீனிவாசன் என்பவருக்கு வீடு கட்டிக் கொடுத்துள்ளார். அந்த வீட்டுக்கு வரி விதிக்கக் கோரி கோவை மாநகராட்சி வடக்கு மண்டல அலுவலகத்தில் விண்ணப்பித்துள்ளார்.
இந்த விண்ணப்பத்தைப் பரிசீலித்த பில் கலெக்டர் பிரதீப் குமார் (34), வீட்டு வரி விதிப்பதற்காக சந்தோஷிடம் ரூ.40 ஆயிரம் லஞ்சம் கேட்டதாகக் கூறப்படுகிறது. லஞ்சம் கொடுக்க விரும்பாத சந்தோஷ், இதுகுறித்து கோவை மாவட்ட லஞ்ச ஒழிப்புத்துறை போலீசாரிடம் புகார் அளித்தார்.
இதையடுத்து, லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் ரசாயனம் தடவிய பணத்தை சந்தோஷிடம் கொடுத்து அனுப்பினர். கூடுதல் காவல் கண்காணிப்பாளர் ராஜேஷ் தலைமையிலான போலீசார், வடக்கு மண்டல அலுவலகம் அருகே மறைந்திருந்து கண்காணித்தனர்.
அப்போது, சந்தோஷிடம் இருந்து லஞ்சப் பணத்தைப் பெற்றதாகக் கூறப்படும் பிரதீப் குமாரை போலீசார் கையும் களவுமாகப் பிடித்தனர்.
தொடர்ந்து அவரிடம் விசாரணை நடைபெற்று வருகிறது. இந்தச் சம்பவம் மாநகராட்சி அலுவலகப் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.






