கோவை: கடை முன்பு வாக்குவாதத்தில் மாற்றுத்திறனாளியை தாக்கிய நபரை போலீசார் கைது செய்த சம்பவம் கோவையில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சாய்பாபா காலனி அருகே உள்ள என். எஸ் .ஆர் .ரோட்டை சேர்ந்தவர் முகைதீன் (50). பார்வையற்ற மாற்றுத்திறனா ளியான, இவர் அதே பகுதியில் செல்போன் கடை நடத்தி வருகிறார். இவரது கடையில் ரூபா என்ற பெண் ஊழியராக வேலை பார்த்து வருகிறார்.
நேற்று மதியம் முகைதீன் மற்றும் ரூபா ஆகியோர் கடையில் இருந்த போது ராஜீவ் நகரை சேர்ந்த சதீஷ் ( 34) என்பவர் அங்கு வந்தார். அப்போது அவர் முகைதீன் கடை முன்பு மோட்டார் சைக்கிளை நிறுத்தியதாக கூறப்படுகிறது.
கடை முன்பு மோட்டார் சைக்கிளை நிறுத்தியதால், ரூபா சத்தம் போட்டு உள்ளார். அப்போது இருவருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இதைக் கேட்ட முகைதீன் வாக்கிங் ஸ்டிக்குடன் கடைக்கு வெளியில் வந்து ரூபாவுக்கு ஆதரவாக பேசியுள்ளார்.
இதனால் ஆத்திரமடைந்த சதீஷ் முகைதீன் வைத்திருந்த வாக்கிங் ஸ்டிக்கை பறித்து அவரை கைகளால் தாக்கியதாக கூறப்படுகிறது.
இதில் காயமடைந்த முகைதீன் கோவை அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைகு சேர்க்கப்பட்டார். சம்பவம் குறித்து அவர் அளித்த புகாரின் பேரில் சாய்பாபா காலனி போலீசார் வழக்கு பதிவு செய்து சதீஷை கைது செய்தனர்.


