கோவை: பெங்களூரில் இருந்து கோவைக்கு கடத்தி வரப்பட்டதாகக் கூறப்படும் 2,100 போதை மாத்திரைகள் மற்றும் ஒரு கிலோ கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்து, 2 பேரை கைது செய்தனர்.
கோவை மாநகரில் போதைப்பொருள் கடத்தல் மற்றும் விற்பனையைத் தடுக்க தனிப்படை போலீசார் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். இதன் ஒரு பகுதியாக, பெங்களூரில் இருந்து கோவைக்கு கடத்தி வரப்பட்டதாகக் கூறப்படும் 2,100 போதை மாத்திரைகள் மற்றும் ஒரு கிலோ கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்து, இருவரை கைது செய்துள்ளனர்.
சில நாட்களுக்கு முன்பு குனியமுத்தூர் பகுதியில் போதைப்பொருள் வழக்கில் சர்புதீன் என்பவர் கைது செய்யப்பட்டார். அவரிடம் நடத்தப்பட்ட விசாரணையில், கோவையைச் சேர்ந்த மேலும் இருவர் போதை மாத்திரைகளை வாங்குவதற்காக பெங்களூரு சென்றிருப்பது போலீசாருக்கு தெரியவந்ததாக கூறப்படுகிறது.
இதையடுத்து, சம்பந்தப்பட்ட இருவரையும் தனிப்படை போலீசார் ரகசியமாகக் கண்காணித்து வந்தனர். இந்நிலையில், நேற்று காலை குனியமுத்தூர் பகுதியில் போலீசார் வாகனத் தணிக்கையில் ஈடுபட்டிருந்தபோது, பைக்கில் வந்த இருவரை தடுத்து நிறுத்தி விசாரணை மேற்கொண்டனர்.
Also Read: காரமடையில் அதிர்ச்சி: மகனை காப்பாற்ற முயன்ற தாய், மகள் நீரில் மூழ்கி பலி!
விசாரணையில் அவர்கள் கோவையைச் சேர்ந்த மணிகண்டன் (26), சக்திவேல் (25) என்பது தெரியவந்தது. இருவரும் பெங்களூரில் இருந்து போதை மாத்திரைகளை கோவைக்கு கடத்தி வந்து, மாநகரின் பல்வேறு பகுதிகளில் சப்ளை செய்து வந்ததாக போலீசார் தெரிவித்துள்ளனர்.
இதையடுத்து இருவரையும் சோதனை செய்தபோது, போதை மாத்திரைகள் மற்றும் கஞ்சாவை மறைத்து வைத்திருந்தது கண்டுபிடிக்கப்பட்டதாக கூறப்படுகிறது. அவர்களிடமிருந்து 2,100 போதை மாத்திரைகள் மற்றும் ஒரு கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது. பறிமுதல் செய்யப்பட்ட போதைப்பொருட்களின் மொத்த மதிப்பு ரூ.6 லட்சத்துக்கும் மேல் இருக்கும் என போலீசார் தெரிவித்துள்ளனர்.
தொடர்ந்து மணிகண்டன் மற்றும் சக்திவேல் ஆகிய இருவரையும் கைது செய்த செல்வபுரம் போலீசார் , அவர்களிடம் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
இன்ஸ்டாகிராம் மூலம் தகவல் பரிமாற்றம்
போதை மாத்திரைகளை விற்பனை செய்யும் கும்பல் பெங்களூரில் செயல்பட்டு வருவதாக போலீசார் தெரிவித்துள்ளனர். ஆன்லைன் மூலம் பணம் செலுத்திய பின்னர், குறிப்பிட்ட இடத்தில் போதை மாத்திரைகளை வைத்துவிட்டு, அந்த இடம் தொடர்பான தகவல் வாங்குபவருக்கு தெரிவிக்கப்படுவதாக கூறப்படுகிறது.
இதற்காக இன்ஸ்டாகிராம் உள்ளிட்ட சமூக வலைதளங்கள் மூலம் தகவல் பரிமாறிக் கொள்வதாகவும் போலீசார் தெரிவித்துள்ளனர். இந்த கும்பலின் முக்கிய நபர்களை அடையாளம் கண்டு கைது செய்வதற்கான நடவடிக்கைகள் தொடர்ந்து நடைபெற்று வருவதாகவும் கூறப்பட்டுள்ளது.





