கோவை: காரமடை அருகே நீர்பாசன குட்டையில் மூழ்கிய மகனை காப்பாற்ற முயன்றபோது தாய் மற்றும் மகள் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
கோவை மாவட்டம் காரமடை அடுத்த ஆதிமாதையனூர் தெற்கு தோட்டம் பகுதியைச் சேர்ந்தவர் சண்முகம் (60). இவரது மனைவி ராஜாமணி (50). இவர்களுக்கு விக்னேஸ்வரி (35) என்ற மகளும், சரவணகுமார் (30) என்ற மகனும் உள்ளனர். குடும்பத்தினர் விவசாயம் செய்து வருகின்றனர்.
இந்நிலையில் சென்னையில் வசித்து வந்த விக்னேஸ்வரி, தனது குடும்பத்தினருடன் பெற்றோர் வீட்டிற்கு வந்திருந்தார். அதேபோல் சரவணகுமாரும் தனது குடும்பத்தினருடன் வந்திருந்தார். நேற்று அனைவரும் விவசாய நிலத்தில் பயிரிடப்பட்டிருந்த தக்காளியை பறிக்கும் பணியில் ஈடுபட்டிருந்தனர்.
அப்போது சரவணகுமார், தோட்டத்தில் சுமார் 12 அடி ஆழத்தில் தார்ப்பாலின் பதிக்கப்பட்டு அமைக்கப்பட்டிருந்த நீர்பாசன தண்ணீர் சேமிப்பு குட்டையில் குளிக்கச் சென்றுள்ளார். எதிர்பாராதவிதமாக அவருக்கு மூச்சுத்திணறல் ஏற்பட்டு, காப்பாற்றுமாறு சத்தமிட்டுள்ளார்.
அவரது அலறல் சத்தம் கேட்டு தாய் ராஜாமணி மற்றும் சகோதரி விக்னேஸ்வரி ஆகியோர் அங்கு விரைந்து சென்றனர். மகனை மீட்க ராஜாமணி கையை நீட்டியபோது எதிர்பாராதவிதமாக குட்டைக்குள் தவறி விழுந்துள்ளார்.
தாயை மீட்க முயன்ற விக்னேஸ்வரியும் குட்டைக்குள் தவறி விழுந்துள்ளார். இதனால் மூவரும் தண்ணீரில் தத்தளித்தனர். இதனைப் பார்த்த விக்னேஸ்வரியின் மூத்த மகள் உடனடியாக காரமடை போலீசார் மற்றும் மேட்டுப்பாளையம் தீயணைப்புத் துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளார்.
தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் மற்றும் தீயணைப்புத் துறையினர் மூவரையும் மீட்டனர். பின்னர் அங்கு வந்த 108 ஆம்புலன்ஸ் மருத்துவக் குழுவினர் பரிசோதனை செய்ததில், ராஜாமணி மற்றும் விக்னேஸ்வரி ஆகிய இருவரும் ஏற்கனவே உயிரிழந்தது தெரியவந்தது.
இதையடுத்து இருவரது உடல்களையும் மீட்ட காரமடை போலீசார், பிரேதப் பரிசோதனைக்காக மேட்டுப்பாளையம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். உயிருடன் மீட்கப்பட்ட சரவணகுமார் சிகிச்சைக்காக அதே மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார். அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு தற்போது நல்ல நிலையில் இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த சம்பவம் குறித்து காரமடை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். தண்ணீர் சேமிப்பு குட்டையில் மகனை மீட்க முயன்ற தாய் மற்றும் மகள் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.





