கோவை: கணுவாய் அருகே நள்ளிரவில் தோட்டத்து வீட்டிற்குள் புகுந்த ஒற்றைக் காட்டு யானை, காவல் நாய் தொடர்ந்து குரைத்தும் அதனைக் கண்டுகொள்ளாமல் கிணற்றை எட்டிப் பார்த்து, சமையல் பாத்திரங்களில் உணவு தேடிய சுவாரஸ்யமான சிசிடிவி காட்சிகள் இணையத்தில் வைரலாகி வருகின்றன.
கோவை மாவட்டம் கணுவாயில் இருந்து தாளியூர் செல்லும் சாலையில் மலர்விழி என்பவருக்குச் சொந்தமான தோட்டத்து வீடு அமைந்துள்ளது. வனப்பகுதியை ஒட்டியுள்ள இந்தப் பகுதியில் அவ்வப்போது காட்டு யானைகள் நடமாட்டம் காணப்படுவது வழக்கம்.
இந்த நிலையில், நேற்று நள்ளிரவில் வனப்பகுதியில் இருந்து வெளியேறிய ஒற்றைக் காட்டு யானை, மலர்விழியின் தோட்டத்து வீட்டிற்குள் நுழைந்துள்ளது.
வீட்டிற்குள் யானை நுழைந்ததைக் கண்ட அங்கிருந்த காவல் நாய், தொடர்ந்து சத்தமாகக் குரைத்து எச்சரிக்கை எழுப்பியுள்ளது. ஆனால், நாய் குரைப்பதைச் சற்றும் பொருட்படுத்தாத யானை, எந்தவித ஆக்ரோஷமும் இன்றி வீட்டின் முற்றத்திற்குள் மெதுவாக நடந்து சென்றுள்ளது.
Also Read: வங்கிக் கணக்கு தொடங்க ரூ.10,000 வரை! கோவை ஆன்லைன் மோசடி வழக்கில் இருவர் கைது
அப்போது வீட்டிற்கு வெளியே இருந்த கிணற்றின் அருகே சென்ற யானை, தனது தும்பிக்கையை உயர்த்தி கிணற்றை எட்டிப் பார்த்துள்ளது. தண்ணீர் கிடைக்குமா என ஆராய்வதுபோல கிணற்றின் அருகே சிறிது நேரம் நின்றுள்ளது.
அதனைத் தொடர்ந்து, வீட்டின் சமையலறை அருகே அடுக்கி வைக்கப்பட்டிருந்த பாத்திரங்களின் அருகே சென்ற யானை, தனது தும்பிக்கையால் அவற்றை ஒவ்வொன்றாக முகர்ந்து பார்த்துள்ளது. பாத்திரங்களில் உணவு ஏதேனும் இருக்கிறதா எனத் தேடுவதுபோல யானையின் செயல்பாடுகள் அமைந்திருந்தன.
ஒருபுறம் காவல் நாய் விடாமல் குரைத்துக் கொண்டிருக்க, மறுபுறம் அதைப் பற்றிச் சிறிதும் கவலைப்படாமல் யானை உணவு மற்றும் தண்ணீரைத் தேடி வீட்டின் முற்றத்தில் சுற்றித் திரிந்தது.
சிறிது நேரம் அங்கிருந்த யானை, வீட்டிற்கோ, கிணற்றிற்கோ அல்லது அங்கிருந்த சமையல் பாத்திரங்களுக்கோ எந்தவித சேதமும் ஏற்படுத்தாமல் அமைதியாகத் திரும்பிச் சென்றுள்ளது.
VIDEO
இந்தக் காட்சிகள் அனைத்தும் தோட்டத்து வீட்டில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி கேமராவில் பதிவாகியுள்ளன. குறிப்பாக, நாய் தொடர்ந்து குரைத்தும் அலட்டிக்கொள்ளாமல் கிணற்றை எட்டிப் பார்ப்பதும், சமையல் பாத்திரங்களை முகர்ந்து பார்ப்பதுமான யானையின் செயல்பாடுகள் பார்ப்பவர்களின் கவனத்தை ஈர்த்துள்ளன.
தற்போது இந்த சுவாரஸ்யமான சிசிடிவி வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
Also read: மாசுக்கட்டுப்பாட்டு வாரிய அனுமதி எங்கே… கோவை மாநகராட்சியின் குட்டு அம்பலம்
இதனிடையே, கணுவாய் மற்றும் அதனைச் சுற்றியுள்ள வனப்பகுதியை ஒட்டிய கிராமங்களில் இரவு நேரங்களில் காட்டு யானைகள் குடியிருப்புப் பகுதிகளுக்குள் நுழைவதால் பொதுமக்களும் விவசாயிகளும் அச்சமடைந்துள்ளனர்.
இந்தச் சம்பவத்தில் யானை எந்தச் சேதத்தையும் ஏற்படுத்தாமல் சென்றிருந்தாலும், இதுபோன்ற நிகழ்வுகளின்போது மனிதர்களுக்கும் யானைகளுக்கும் ஆபத்து ஏற்பட வாய்ப்புள்ளதாக அப்பகுதி மக்கள் கவலை தெரிவிக்கின்றனர்.
எனவே, வனப்பகுதியை ஒட்டியுள்ள குடியிருப்புகளில் காட்டு யானைகள் நுழைவதைத் தடுக்கவும், இரவு நேரக் கண்காணிப்பு மற்றும் ரோந்துப் பணிகளைத் தீவிரப்படுத்தவும் வனத்துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனப் பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.





