கோவை: கோவை மத்திய சிறையில் அடைக்க அழைத்துச் சென்ற கைதி மீண்டும் தப்பியோடியதால், எஸ்.ஐ. உட்பட 4 போலீசார் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர்.
ஈரோடு மாவட்டம் பவானியைச் சேர்ந்தவர் ராகவன் என்ற கோழிக்காரன் (25). இவர் மீது பல்வேறு மாவட்டங்களிலும், பிற மாநிலங்களிலும் திருட்டு, வழிப்பறி மற்றும் கொள்ளை வழக்குகள் உள்ளதாக போலீசார் தெரிவித்துள்ளனர். ஈரோட்டில் பதிவான திருட்டு வழக்கு ஒன்றில் கைது செய்யப்பட்ட இவர், கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டிருந்தார்.
இதனிடையே, பெங்களூரில் பதிவான திருட்டு வழக்கு தொடர்பாக ராகவனைத் தேடி வந்த கர்நாடக போலீசாருக்கு, அவர் கோவை மத்திய சிறையில் இருப்பது தெரியவந்தது. இதையடுத்து, கடந்த ஜூன் மாதம் கோவை வந்த கர்நாடக போலீசார், அவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துவதற்காக வேனில் அழைத்துச் சென்றனர்.
சத்தி சாலையில் அன்னூர் அருகே சென்றபோது, சிறுநீர் கழிக்க வேண்டும் என ராகவன் கூறியுள்ளார். இதனால் போலீசார் அவரை வேனில் இருந்து கீழே இறக்கி அழைத்துச் சென்றபோது, திடீரென அவர்களைத் தள்ளிவிட்டு இருட்டில் தப்பியோடியுள்ளார். போலீசார் விரட்டிச் சென்றும் அவரைப் பிடிக்க முடியவில்லை.
இதுகுறித்து கர்நாடக போலீசார் அளித்த புகாரின் அடிப்படையில், அன்னூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து ராகவனைத் தேடி வந்தனர். இந்நிலையில், அவர் பவானியில் பதுங்கியிருப்பதாக போலீசாருக்குத் தகவல் கிடைத்தது.
அதன்பேரில், அன்னூர் காவல் நிலைய எஸ்.ஐ. அப்துல் முத்தலீப், காவலர் ரஞ்சித் மற்றும் ஆயுதப்படை காவலர்கள் தினேஷ், கார்த்திக் ஆகியோர் பவானிக்குச் சென்று ராகவனைப் பிடித்தனர். அக்டோபர் 30-ம் தேதி இரவு சுமார் 11 மணியளவில் அவரைக் கோவைக்கு அழைத்து வந்து, விரைவு நீதிமன்ற நீதிபதி முன்பு ஆஜர்படுத்தினர். அவரை நீதிமன்றக் காவலில் சிறையில் அடைக்க நீதிபதி உத்தரவிட்டார்.
இதையடுத்து, அக்டோபர் 31-ம் தேதி அதிகாலை சுமார் 12.40 மணியளவில் ராகவனை கோவை மத்திய சிறையில் அடைப்பதற்காக போலீசார் அழைத்துச் சென்றனர். நஞ்சப்பா சாலையில் உள்ள சிறை நுழைவாயில் வழியாக அழைத்துச் சென்றபோது, அவரது கைவிலங்கு அகற்றப்பட்டதாகக் கூறப்படுகிறது. அந்தச் சந்தர்ப்பத்தைப் பயன்படுத்திய ராகவன், போலீசாரைத் தள்ளிவிட்டு மீண்டும் தப்பியோடியுள்ளார்.
அதிர்ச்சியடைந்த போலீசார், சிறை வளாகம் மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் தேடியும் அவரைக் கண்டுபிடிக்க முடியவில்லை. இதையடுத்து, சிறை காவலர்கள் மற்றும் உயர் அதிகாரிகளுக்குத் தகவல் தெரிவிக்கப்பட்டது.
உயர் அதிகாரிகளின் அறிவுறுத்தலின்பேரில், எஸ்.ஐ. அப்துல் முத்தலீப் ரேஸ்கோர்ஸ் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். காவல் கட்டுப்பாட்டு அறை மூலம் பிற காவல் நிலையங்களுக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டு, கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டது.
தப்பியோடிய ராகவனைப் பிடிக்க, உயர் அதிகாரிகளின் மேற்பார்வையில் கோவை மாநகரில் 3 தனிப்படைகளும், மாவட்டத்தில் 3 தனிப்படைகளும் என மொத்தம் 6 தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளன. டிரோன் கண்காணிப்பு, சிசிடிவி காட்சிகள் ஆய்வு மற்றும் தீவிர வாகனச் சோதனைகள் மூலம் தேடுதல் நடைபெற்று வருவதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.
மேலும், சுற்றுவட்டாரப் பகுதிகளில் உள்ள அனைத்து காவல் பிரிவுகளும் உஷார்படுத்தப்பட்டுள்ளன. கைதியை அழைத்துச் சென்றபோது கவனக்குறைவாகச் செயல்பட்டதாக எஸ்.ஐ. அப்துல் முத்தலீப், காவலர் ரஞ்சித் மற்றும் ஆயுதப்படை காவலர்கள் தினேஷ், கார்த்திக் ஆகிய 4 பேரும் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர்.
ஏற்கெனவே கர்நாடக போலீசாரிடம் இருந்து தப்பியவரை மீண்டும் பிடித்த நிலையில், கோவை மத்திய சிறையில் அடைப்பதற்கு முன்பே அவர் மறுபடியும் தப்பியோடிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.






