கோவை: நீலாம்பூர் விபத்தில் 29 பேர் காயமடைந்த நிலையில், அதே தனியார் பேருந்து மீண்டும் அதிவேகமாக இயக்கப்படுவதாகவும், ஏர் ஹாரன் பயன்படுத்தப்படுவதாகவும் புகார் எழுந்துள்ளது.
கடந்த ஜூன் 19 அன்று திருப்பூரில் இருந்து கோவை நோக்கி 70 பயணிகளுடன் வந்த தனியார் பேருந்து நீலாம்பூர் பைபாஸ் மேம்பாலத்தில் தலைகீழாக கவிழ்ந்தது. 29 பேர் பலத்த காயமடைந்தனர். அப்போது முதற்கட்ட விசாரணையில் ஓட்டுநரின் அஜாக்கிரதையே காரணம் என தெரியவந்தது.
நீலாம்பூர் போலீசார் உடனடியாக நடவடிக்கை எடுத்தனர். பேருந்தின் ஓட்டுநர் சுகுமார் மற்றும் நடத்துநர் மேகநாதன் ஆகிய இருவர் மீதும் வழக்குப்பதிவு செய்து கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி இருவரையும் நீதிபதி உத்தரவின்படி சிறையில் அடைத்தனர்.
ஆனால் இப்போது நடக்கும் காட்சிதான் அதிர்ச்சி அளிக்கிறது!
அதே கேஎம்எஸ் பேருந்து மீண்டும் வழக்கம்போல் இயக்கப்படுகிறது. இன்று மாலை கோவையிலிருந்து திருப்பூர் நோக்கிச் சென்ற அந்தப் பேருந்து, ஓட்டுநர் சினிமா பாட்டின் மெட்டிற்கு ஏற்ப ஏர் ஹாரன்களை அடித்தபடி அதிவேகமாக பறந்தது. மற்ற வாகன ஓட்டிகளுக்கு பெரும் இடையூறு ஏற்பட்டது. பொதுமக்கள் பயத்தில் நடுங்கினர்.
“ஒருமுறை 29 பேரைக் காயப்படுத்திய பேருந்து மீண்டும் இதே அபாயகரமான ஓட்டத்தில் இருக்கிறது. இது வெறும் போக்குவரத்து விதிமீறல் அல்ல… மக்களின் உயிருக்கு எதிரான குற்றம்!” என சமூக ஆர்வலர்கள் கொதித்து எழுந்துள்ளனர்.
Video
கருமத்தம்பட்டி பைபாஸ் சாலையில் போக்குவரத்துத் துறை மற்றும் காவல் துறை உடனடியாகப் பறக்கும் படை அமைத்துத் திடீர் தணிக்கை நடத்த வேண்டும் என அவர்கள் வலியுறுத்துகின்றனர்.
ஏர் ஹாரன் பொருத்தியுள்ள பேருந்துகளின் தகுதிச் சான்று (FC) ரத்து செய்யப்பட வேண்டும். கடுமையான அபராதம் விதிக்கப்பட வேண்டும் என பொதுமக்களும் சமூக ஆர்வலர்களும் கோரிக்கை விடுத்துள்ளனர்.
நீலம்பூர் விபத்து இன்னும் காயங்களை ஆற்றவில்லை. ஆனால் அதே பேருந்து மீண்டும் சாலையில் ‘சினிமா ஸ்டைலில்’ பறப்பது மக்களுக்கு பயத்தை விதைக்கிறது. அதிகாரிகள் விழிப்புடன் செயல்படாவிட்டால்… அடுத்த விபத்து வெகு தொலைவில் இல்லை என்று பொதுமக்கள் தெரிவித்துள்ளனர்.





