கோவை: கோவையில் கல்லூரி மாணவர் அமுதன் தாக்கிக் கொல்லப்பட்ட சம்பவம் ஏற்படுத்திய அதிர்வலைகள் ஓய்வதற்குள், செட்டிபாளையம் அருகே 4-ம் ஆண்டு பார்மசி கல்லூரி மாணவரை, முன்பின் அறிமுகம் இல்லாத ஜூனியர் மாணவர் ஒருவர் வழிமறித்து தாக்கிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் அருகே உள்ள கம்மாபட்டி பகுதியைச் சேர்ந்தவர் செல்வகுமார். இவரது மகன் உதயராஜ் (22). இவர் கோவை செட்டிபாளையம் அருகே மயிலேறிபாளையத்தில் உள்ள தனியார் பார்மசி கல்லூரியில் B.Pharm 4-ம் ஆண்டு படித்து வருகிறார். கல்லூரி படிப்பிற்காக ஒத்தக்கால்மண்டபம் அருகே வேலாந்தாவளம் சாலையில் சக மாணவர்களுடன் அறை எடுத்து தங்கியுள்ளார்.
இந்த நிலையில், சம்பவத்தன்று உதயராஜ் ஒத்தக்கால்மண்டபம் சூப்பர் மார்க்கெட் அருகே நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது இருசக்கர வாகனத்தில் வந்த வாலிபர் ஒருவர், உதயராஜை அருகில் வருமாறு அழைத்துள்ளார்.
அந்த நபர் யார் என்பது உதயராஜுக்கு தெரியாததால், அவர் அருகில் செல்லாமல் தொடர்ந்து நடந்து சென்றதாக கூறப்படுகிறது. இதனால் ஆத்திரமடைந்த அந்த வாலிபர், தனது மோட்டார் சைக்கிளை உதயராஜின் குறுக்கே நிறுத்தி வழிமறித்துள்ளார்.
தொடர்ந்து, உதயராஜை ஆபாச வார்த்தைகளால் பேசி திடீரென தாக்கியதாக கூறப்படுகிறது. இந்த தாக்குதலில் உதயராஜின் உதட்டில் பலத்த காயம் ஏற்பட்டது. இதையடுத்து அவர் மருத்துவமனைக்கு சென்று சிகிச்சை பெற்றார்.
பின்னர் சம்பவம் தொடர்பாக உதயராஜ் செட்டிபாளையம் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின் பேரில் சப்-இன்ஸ்பெக்டர் பாலாஜி வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டார்.
போலீசார் நடத்திய விசாரணையில், உதயராஜை தாக்கியவர் தஞ்சாவூர் மாவட்டம் அதிராம்பட்டினத்தைச் சேர்ந்த கவிவர்மன் (18) என்பது தெரியவந்தது. அவர் அப்பகுதியில் உள்ள கல்லூரியில் B.Sc IT 2-ம் ஆண்டு படித்து வருவதும் தெரியவந்தது.
முன்பின் அறிமுகம் இல்லாத சீனியர் மாணவரை வழிமறித்து தாக்கியதாக கூறப்படும் ஜூனியர் மாணவர் கவிவர்மன் மீது செட்டிபாளையம் போலீசார் 2 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
கோவையில் சமீபத்தில் கல்லூரி மாணவர் அமுதன் தாக்கிக் கொல்லப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருந்த நிலையில், தற்போது மற்றொரு கல்லூரி மாணவர் வழிமறித்து தாக்கப்பட்ட சம்பவம் மாணவர்கள் மற்றும் பெற்றோர் மத்தியில் கவலையை ஏற்படுத்தியுள்ளது.





