கோவை: காலை 8 மணிக்கு தபால் வாக்குகள் எண்ணிக்கை தொடங்கி 8:30 முதல் EVM வாக்குகள் கணக்கிடப்படுகின்றன. கடும் பாதுகாப்பு மற்றும் கட்டுப்பாடுகள் அமல்படுத்தப்பட்டுள்ளன
கோவை மாவட்டத்தில் இன்று வாக்கு எண்ணிக்கை காலை 8:00 மணிக்கு தபால் வாக்குகளை எண்ணுவதன் மூலம் தொடங்குகிறது.
அதன் பின்னர் காலை 8:30 மணி முதல் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களில் பதிவான வாக்குகள் எண்ணப்பட உள்ளன. இந்த தேர்தலில் மொத்தம் 23,25,011 வாக்குகள் பதிவாகி 84.72 சதவீத வாக்குப்பதிவு இடம்பெற்றுள்ளது.
கோவை மாவட்டத்தில் உள்ள 10 சட்டமன்ற தொகுதிகளில் மொத்தம் 20,265 தபால் வாக்குகள் பதிவாகியுள்ளன. தபால் வாக்குகளை எண்ணுவதற்காக ஒவ்வொரு தொகுதியிலும் பிரத்யேக வாக்கு எண்ணும் மேசைகள் அமைக்கப்பட்டுள்ளன.
இந்த வாக்கு எண்ணிக்கை உதவி தேர்தல் அதிகாரியின் மேற்பார்வையில் நடைபெறுகிறது.
தேர்தல் ஆணையத்தின் வழிகாட்டுதல்களின் அடிப்படையில் வாக்கு எண்ணும் உதவியாளர்கள் மற்றும் நுண் கண்காணிப்பாளர்கள் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். சேவை வாக்குகளை எண்ணுவதற்கும் தனி ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
மேலும் வேட்பாளர் முகவர்கள் வாக்கு எண்ணிக்கை மையத்திற்கு அனுமதிக்கப்பட்ட பொருட்களை மட்டுமே கொண்டு செல்ல அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
வாக்கு எண்ணும் மையத்திற்கு 17C படிவம், நோட் பேட் மற்றும் எழுதும் நோட்டு புத்தகங்கள் மட்டுமே அனுமதிக்கப்படுகின்றன. செல்போன், கால்குலேட்டர், ப்ளூடூத் இயர்போன், ஸ்மார்ட் வாட்ச் போன்ற மின்னணு சாதனங்களும் சிகரெட், மது, இ-சிகரெட் போன்றவற்றுக்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது.
வாக்கு எண்ணிக்கை மையத்தில் முகவர்களுக்கு காலை உணவு வழங்கும் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
இட்லி, பொங்கல், ஊத்தப்பம், கேசரி, உளுந்து வடை உள்ளிட்ட உணவுகள் வழங்கப்படுகின்றன. முகவர்களுக்கு முன்கூட்டியே டோக்கன்கள் வழங்கப்பட்டுள்ள நிலையில், அந்த டோக்கன்களை காட்டினால் மட்டுமே உணவு வழங்கப்படுகிறது.
மேலும் மையம் முழுவதும் சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் வசதிகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.
மருத்துவ அவசர நிலைகளை கருத்தில் கொண்டு மருத்துவ முகாம்களும் அமைக்கப்பட்டுள்ளன. அந்த முகாம்களில் ஓஆர்எஸ் கரைசல்கள் வைக்கப்பட்டுள்ளன.
மருத்துவ உதவிக்காக படுக்கைகள் மற்றும் ஈசிஜி பரிசோதனை செய்யும் வசதிகளும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.



