கோவை: பொதுமக்கள், பேருந்து ஊழியர்களுக்கு ஏற்படும் வாக்குவாதங்களை தவிர்க்க, ஓட்டுநர், நடத்துனர்களுக்கு பயிற்சி அளிக்கப்படும் அமைச்சர் சிவசங்கர் தெரிவித்துள்ளார்.
தமிழ்நாடு போக்குவரத்து துறை அமைச்சர் சிவசங்கர் கோவை கொடிசியா மைதானத்தில் நடைபெற்ற விழாவில் 100 புதிய அரசு பேருந்துகளை கொடி அசைத்து இயக்கத்தில் தொடங்கி வைத்தார்.
இந்நிகழ்ச்சியில் கோவை மாவட்ட ஆட்சியர் பவன்குமார், மாநகராட்சி ஆணையாளர் சிவகுரு பிரபாகரன், பாராளுமன்ற உறுப்பினர் கணபதி ராஜ்குமார், துணை மேயர் வெற்றிச் செல்வன், மாநகர் மாவட்ட செயலாளர் நா.கார்த்திக் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
Advertisement

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் சிவசங்கர்,
கோவை அரசு போக்குவரத்து கழகத்திற்கு 2024-25 ஆண்டில் மொத்தம் 321 புதிய பேருந்துகள் ஒதுக்கப்பட்டு உள்ளன என்றும், இதில் 155 பேருந்துகள் ஏற்கனவே சேவையில் உள்ளன. தற்போது 100 பேருந்துகள் பயன்பாட்டிற்கு வந்து உள்ளதாகவும், இதில் 96 விடியல் பயணப் பேருந்துகள், பெண்கள் கட்டணமின்றி பயணிக்கக் கூடிய இந்த திட்டம் மக்கள் மத்தியில் மிகுந்த வரவேற்பைப் பெற்று உள்ளது எனவும், மீதமுள்ள நான்கு பேருந்துகள் புறநகர் சேவைக்கு பயன்படுத்தப்படும். மேலும் 66 பேருந்துகள் விரைவில் பொதுமக்கள் சேவைக்காக அறிமுகப்படுத்தப்பட உள்ளன என்றும் தெரிவித்தார்..
2025-26 ஆண்டுக்காக கூடுதலாக 252 புதிய பேருந்துகள் கோவைக்கு வழங்க திட்டமிடப்பட்டு உள்ளது என்றும், கடந்த ஆண்டுகளில் புதிய பேருந்துகள் வாங்கப்படாமல் இருந்த நிலையில், தற்போதைய தி.மு.க அரசின் கீழ் 11,000 பேருந்துகள் வாங்க உத்தரவிடப்பட்டு உள்ளதாக கூறினார். அந்த திட்டத்தின் ஒரு பகுதியாக இப்பேருந்துகள் கொண்டு வரப்பட்டு உள்ளன. ஒரே நேரத்தில் 100 பேருந்துகள் சேவைக்கு வருவது கோவைக்கு பெருமை சேர்க்கும் நிகழ்வாகும்.
சென்னையில் EV (மின்) பேருந்துகள் பயன்படுத்தப்படுவது போலவே, கோவை மற்றும் மதுரை நகரங்களுக்கு EV பேருந்துகள் விரைவில் வர உள்ளதாகவும், அதற்கான 500 பேருந்துகளுக்கான டெண்டர் முடிவடைந்து பரிசீலனையில் இருப்பதாகவும் அமைச்சர் தெரிவித்தார். தொடர்ந்து இதில் கோவைக்கு 80 பேருந்துகள், மதுரைக்கு மின்னணுப் பேருந்துகள் ஒதுக்கப்பட உள்ளன.
மின்கட்டண உயர்வைத் தொடர்ந்து தொழிலதிபர்கள் தெரிவிக்கும் கவலையைப் பற்றிய கேள்விக்கு,
ஏழை, எளிய மக்கள் மற்றும் சிறு, குறு தொழில்களுக்கு பாதிப்பு ஏற்படாத வகையில் மின் கட்டணம் உயர்த்தப்பட்டு உள்ளது என்றும், தொழில் துறையினரின் கருத்துகளும் கவனத்தில் கொண்டு, அதற்கான நடவடிக்கைகள் விரைவில் எடுக்கப்படும் என்றார்.
சோலார் மின்சாரம் தொடர்பான கட்டண விவகாரத்தில், இந்திய அளவில் நடைமுறைப்படி நெட்வொர்க்கிங் சார்ஜ் வசூலிக்கப்படுகிறது.
இந்த நடைமுறை எதிர்காலத்தில் மாற்றத்திற்கு உள்ளாகும் என்றார்.
பொதுமக்கள் மற்றும் பேருந்து ஊழியர்களுக்கு இடையே ஏற்படும் மனக்கசப்புகள் குறித்த கேள்விக்கு பதிலளித்த அமைச்சர்,
ஓட்டுநர்கள் மற்றும் நடத்துநர்களுக்கு பயிற்சி வகுப்புகள் நடைபெற்று வருகின்றன.
பயணிகளிடம் மரியாதையுடன் பழக அறிவுறுத்தப்படுகிறது. சிலர் செய்யும் தவறுகளுக்கு உடனடி நடவடிக்கை எடுக்கப்படுகிறது என்றார்.