கோவை: கோவையில் வங்கி பெயரில் வந்த APK பைலை கிளிக் செய்த தனியார் நிறுவன ஊழியரின் வங்கி கணக்கில் இருந்து ரூ.5.38 லட்சம் மோசடி செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் அய்யப்பா நகரைச் சேர்ந்த சுரேஷ் (44), தனியார் நிறுவனத்தில் பணியாற்றி வருகிறார். இவரது செல்போனுக்கு சில நாட்களுக்கு முன்பு தனியார் வங்கி பெயரில் ஒரு குறுந்தகவல் (SMS) வந்துள்ளது. அந்தச் செய்தியில் வங்கி சேவையைப் புதுப்பிப்பது தொடர்பான ‘APK’ பைல் லிங்க் இணைக்கப்பட்டிருந்தது.
அந்த குறுந்தகவலை உண்மையான வங்கி அறிவிப்பு என நம்பிய சுரேஷ், அதில் இருந்த லிங்கை கிளிக் செய்து APK பைலை பதிவிறக்கம் செய்துள்ளார். சில நிமிடங்களிலேயே அவரது செல்போன் ஹேக் செய்யப்பட்டதாகக் கூறப்படுகிறது. பின்னர், அவரது வங்கி கணக்கில் இருந்து ரூ.5,38,664-ஐ மர்ம நபர்கள் பல்வேறு பரிவர்த்தனைகள் மூலம் மோசடி செய்துள்ளனர்.
வங்கி கணக்கில் இருந்து பணம் எடுக்கப்பட்ட தகவலை அறிந்த சுரேஷ் அதிர்ச்சியடைந்து, உடனடியாக கோவை மாவட்ட சைபர் குற்றப்பிரிவு காவல்துறையில் புகார் அளித்தார். புகாரின் பேரில், போலீசார் வழக்குப்பதிவு செய்து, பணம் மாற்றப்பட்ட வங்கி கணக்குகள் மற்றும் அதில் தொடர்புடைய மர்ம நபர்களை கண்டறியும் பணியில் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.
இந்த சம்பவம் குறித்து சைபர் குற்றப்பிரிவு போலீசார் பொதுமக்களுக்கு முக்கிய எச்சரிக்கையும் விடுத்துள்ளனர். வங்கி கணக்கு புதுப்பித்தல், கே.ஒய்.சி. (KYC) சரிபார்ப்பு, பரிசுத் தொகை, மானியம் அல்லது அரசு உதவி போன்ற பெயர்களில் வரும் சந்தேகத்திற்கிடமான குறுந்தகவல்கள், APK பைல்கள் மற்றும் தெரியாத லிங்குகளை எக்காரணம் கொண்டும் கிளிக் செய்யக்கூடாது என அறிவுறுத்தியுள்ளனர்.
மேலும், இதுபோன்ற மோசடிகள் நடந்தால் உடனடியாக தேசிய சைபர் மோசடி உதவி எண் 1930-ஐ தொடர்புகொள்ளவோ அல்லது சைபர் குற்றப்பிரிவு காவல்துறையில் புகார் அளிக்கவோ வேண்டும் என்றும் போலீசார் வலியுறுத்தியுள்ளனர்.





