கோவை: கோவையில் நள்ளிரவில் ஸ்கூட்டரில் சென்ற வாலிபர் ஒருவர் கட்டுப்பாட்டை இழந்து கீழே விழுந்து உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
கோவை பாப்பநாயக்கன்பாளையம் ஜெயசிம்மபுரம் பகுதியைச் சேர்ந்தவர் விக்னேஸ்வரன் (32). இவர் நேற்று அதிகாலை தனது ஸ்கூட்டரில் அவிநாசி சாலை வழியாக ரேஸ்கோர்ஸ் நோக்கி சென்று கொண்டிருந்தார்.
அப்போது எல்.ஐ.சி. சிக்னல் அருகே வந்தபோது, எதிர்பாராத விதமாக ஸ்கூட்டர் கட்டுப்பாட்டை இழந்ததால் சாலையில் கீழே விழுந்தார்.
இந்த விபத்தில் அவரது தலையின் பின்பகுதியில் பலத்த காயம் ஏற்பட்டது. மேலும், மூக்கு மற்றும் காதுகளில் இருந்து ரத்தம் வெளியேறியது.
இதைக் கண்ட அப்பகுதியினர் உடனடியாக அவரை மீட்டு ஆம்புலன்ஸ் மூலம் கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
ஆனால், அவரை பரிசோதித்த மருத்துவர்கள், விக்னேஸ்வரன் ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாக தெரிவித்தனர்.
இதுகுறித்து தகவலறிந்த கிழக்கு போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று விசாரணை நடத்தினர்.
விக்னேஸ்வரனின் மனைவி அஞ்சலிதேவி அளித்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.


