கோவை: கோவை கணியூர் நிலத் தகராறு விவகாரத்தில் பொய் வழக்கு பதிவு செய்ததாக குற்றம்சாட்டி, பெண் ஒருவர் குடும்பத்துடன் எஸ்.பி. அலுவலகம் முன்பு தர்ணாவில் ஈடுபட்டது பரபரப்பை ஏற்படுத்தியது.
திருப்பூர் மாவட்டம் தெக்கலூர் பகுதியை சேர்ந்த சித்ரா என்பவருக்கு கோவை கணியூர் பகுதியில் நிலம் உள்ளது. இந்த நிலம் தொடர்பாக ராஜேந்திரன் என்பவருடன் நீண்டநாள் தகராறு இருந்து வருகிறது.
இந்நிலையில், கடந்த மாதம் 24-ந் தேதி ராஜேந்திரன் மற்றும் ராஜா ஆகியோர் 10-க்கும் மேற்பட்ட நபர்களுடன் வந்து, கத்தி மற்றும் கம்பு உள்ளிட்ட ஆயுதங்களால் தாக்குதல் நடத்தியதாக சித்ரா தரப்பினர் குற்றம்சாட்டியுள்ளனர்.
மேலும், அங்கிருந்த சிசிடிவி கேமரா, டிவிஆர், சிலிண்டர் உள்ளிட்ட பொருட்களையும் சேதப்படுத்தி எடுத்துச் சென்றதாக கூறப்படுகிறது.
Read news:கோவையில் குப்பை கொட்டிய தகராறு; மூதாட்டி வெட்டிக்கொ*!
இதுகுறித்து புகார் அளித்தும் போலீசார் நடவடிக்கை எடுக்காமல், மாறாக எதிர்தரப்பினர் அளித்த புகாரின் அடிப்படையில் சித்ரா தரப்பினர்மீதே வழக்குப்பதிவு செய்துள்ளதாக அவர்கள் தெரிவித்துள்ளனர்.
இதுதொடர்பாக கதிர்வேல், பூபதி குமார் உள்ளிட்டோர் முன்ஜாமீன் கோரி நீதிமன்றத்தை அணுகியுள்ளனர்.
மேலும், கடந்த 30-ந் தேதி ஜமுனாதேவி என்பவரிடம் தகராறு செய்ததாக மீண்டும் பொய் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளதாக சித்ரா குற்றம்சாட்டினார்.
அன்று தங்களது குடும்பத்தில் கருப்பு காரியம் நடைபெற்றதாகவும், மேட்டுப்பாளையத்தில் சடங்குகளை முடித்துவிட்டு வீட்டிலேயே இருந்ததாகவும் அவர் தெரிவித்தார்.
Read news: பாரதியார் பல்கலைக்கழகத்தில் யு.ஜி., பி.ஜி. சேர்க்கைக்கு அவகாசம் நீட்டிப்பு
“வீட்டில் துக்க நிகழ்ச்சி நடந்த நாளில் எப்படி நிலத்திற்குச் சென்று தகராறு செய்ய முடியும்?” என்று கேள்வி எழுப்பிய அவர், அக்கம் பக்கத்தினரிடம் விசாரணை நடத்தினாலே உண்மை தெரியவரும் என்றார்.
தங்கள் மீது பொய் வழக்குப் பதிவு செய்த காவல் அதிகாரிகள் மீது துறை ரீதியான நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி, சித்ரா தனது குடும்பத்தினருடன் கோவை எஸ்.பி. அலுவலகம் முன்பு தரையில் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.


