கோவை: கோவை பாலமலை அரங்கநாதர் கோவில் சித்திரை திருவிழா திருத்தேரோட்டம் வெகுவிமரிசையாக நடைபெற்றது.
கோவை பெரியநாயக்கன்பாளையத்திற்கு அடுத்துள்ள மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் அமைந்துள்ள பிரசித்தி பெற்ற 100 ஆண்டுகளுக்கு மேல் பழமையான பாலமலை ஸ்ரீ அரங்கநாதர் திருக்கோவில் சித்திரைத் தேர்த்திருவிழா கடந்த ஏப்ரல் 24ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது.
இதில் பெருமாள் அன்னவாகனத்திலும், அனுமந்த வாகனத்திலும், கருட வாகனத்திலும் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்புரிந்தார். தொடர்ந்து செங்கோதையம்மன் அழைப்பு விழாவும், செங்கோதை, பூங்கோதை தாயார்களுடன் பெருமாளுக்கு திருக்கல்யாண உற்சவமும் நடைபெற்றது.
முக்கிய நிகழ்ச்சியான திருத்தேர் வைபவம் தொடங்கியது. இதில் முதலில் யானை வாகன உற்சவம், சின்னத் தேரு உற்சவம் நடைபெற்றது. அதனைத் தொடர்ந்து பெருமாள் தேரில் எழுந்தருளி கோயிலின் மாடவீதிகளில் வலம் வந்தார்.
இந்த நிகழ்ச்சியில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு திருத்தேர் வடம் பிடித்தனர். அப்போது பக்தர்கள் “கோவிந்தா, கோவிந்தா” என விண்ணை பிளக்கும் அளவிற்கு கோஷங்களை எழுப்பினர்.
அதன்பிறகு அரங்கநாதர் சிறப்பு அலங்காரத்தில் அருள்புரிந்தார். தொடர்ந்து அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது.
மேலும், பள்ளி மற்றும் கல்லூரி மாணவிகள் பங்கேற்ற நாட்டியாஞ்சலி, பல்வேறு ஊர்களைச் சேர்ந்த நாமசங்கீர்த்தன கோஷ்டியினரின் பஜனைகளும் நடைபெற்றன.
கோவில் விழாவிற்காக கோவை மாவட்ட நிர்வாகம் கோவை மற்றும் மேட்டுப்பாளையம் பகுதிகளிலிருந்து சிறப்பு பேருந்து வசதிகளை ஏற்பாடு செய்திருந்தது. மேலும் காவல்துறை, வனத்துறை, தீயணைப்புத்துறை மற்றும் ஆம்புலன்ஸ் வசதி உள்ளிட்ட அனைத்து துறை அதிகாரிகளும் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்தனர்.
கோவிலை நடந்து ஏறுபவர்களுக்காக இடையிடையே இலவச நீர்மோர் பந்தல்களும் அமைக்கப்பட்டிருந்தன.
மேலும் பரிவேட்டை, குதிரை வாகன உற்சவம், சேஷ வாகன உற்சவம் மற்றும் சந்தன சேவை சாற்றுமுறை நிகழ்ச்சிகள் நடைபெறவுள்ளன. இதற்கான ஏற்பாடுகளை கோவில் பரம்பரை அறங்காவலர் ப. ஜெகதீசன் செய்திருந்தார்.



