கோவை: கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் அருகே பிரசித்தி பெற்ற வனபத்திர காளியம்மன் கோவில் எந்த ஊராட்சிக்கு உட்பட்டது என்பதில், தேக்கம்பட்டி மற்றும் புதிதாக உருவாக்கப்பட்ட ராமேகவுண்டன்புதூர் ஊராட்சிகளுக்கு இடையே உரிமைப் பிரச்னை எழுந்துள்ளது.
காரமடை ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட தேக்கம்பட்டி ஊராட்சி, முன்பு 26 குக்கிராமங்களுடன் செயல்பட்டு வந்தது. நிர்வாக வசதிக்காக இந்த ஊராட்சியை இரண்டாகப் பிரிக்கும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்ட நிலையில், 12 குக்கிராமங்கள் பிரிக்கப்பட்டு ராமேகவுண்டன்புதூர் என்ற புதிய ஊராட்சி உருவாக்கப்பட்டுள்ளது.
இந்த புதிய ஊராட்சிக்கு உட்பட்ட அம்மன் நகர் பகுதியில் வனபத்திர காளியம்மன் கோவில் அமைந்துள்ளது. இதனால், கோவில் அமைந்துள்ள பகுதி தங்களது ஊராட்சியின் எல்லைக்குள் வருவதால், கோவில் நிர்வாகம் மற்றும் அதனுடன் தொடர்புடைய உரிமைகள் தங்களுக்கே இருப்பதாக ராமேகவுண்டன்புதூர் ஊராட்சி தரப்பினர் தெரிவித்து வருகின்றனர்.
இதற்கு தேக்கம்பட்டி பகுதி மக்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். வனபத்திர காளியம்மனை தங்களது பகுதி மக்கள் பல தலைமுறைகளாக வழிபட்டு வருவதாகவும், கோவிலில் நடைபெறும் முக்கிய திருவிழாக்கள் மற்றும் வழிபாட்டு நிகழ்ச்சிகளில் தேக்கம்பட்டி மக்களுக்கு நீண்ட காலமாக தொடர்பு இருப்பதாகவும் அவர்கள் கூறுகின்றனர்.
குறிப்பாக, ஆண்டுதோறும் நடைபெறும் ஆடிக்குண்டம் திருவிழா உள்ளிட்ட முக்கிய நிகழ்ச்சிகள் தேக்கம்பட்டி பகுதி மக்களின் பங்களிப்புடன் நடத்தப்பட்டு வருவதாகவும், கோவிலுடனான தங்களது பாரம்பரிய தொடர்பை வெறும் ஊராட்சி எல்லையை வைத்து மாற்ற முடியாது என்றும் அப்பகுதி மக்கள் தெரிவித்துள்ளனர்.
இந்த விவகாரம் தொடர்பாக இரு ஊராட்சிகளிலும் நடைபெற்ற கிராமசபைக் கூட்டங்களில் பொதுமக்கள் சார்பில் மனுக்கள் அளிக்கப்பட்டுள்ளன. கோவில் எந்த ஊராட்சிக்கு உட்பட்டது என்பது தொடர்பாக இரு தரப்பினரும் தங்களது நிலைப்பாட்டை தெரிவித்துள்ள நிலையில், இதுகுறித்து தீர்மானம் நிறைவேற்றி மாவட்ட நிர்வாகத்திடம் தெரிவிக்கவும் முடிவு செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
இதனால், நிர்வாக ரீதியான ஊராட்சி எல்லை ஒருபுறமும், பல ஆண்டுகளாக இருந்து வரும் வழிபாட்டு மற்றும் பாரம்பரிய தொடர்பு மறுபுறமும் என வனபத்திர காளியம்மன் கோவில் விவகாரம் தற்போது முக்கியத்துவம் பெற்றுள்ளது.
கோவில் யாருடைய கட்டுப்பாட்டில் வர வேண்டும் என்பது தொடர்பாக மாவட்ட நிர்வாகம் உரிய விசாரணை நடத்தி, இரு தரப்பினருக்கும் ஏற்ற வகையில் தெளிவான முடிவை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.





