கோவை: கோவை வெள்ளியங்கிரி மலை அடிவாரத்தில் சித்திரை பௌர்ணமியை முன்னிட்டு நடைபெற்ற சிறப்பு பூஜையில் ஆயிரக்கணக்கான சிவபக்தர்கள் கலந்து கொண்டு பக்தி பரவசத்தில் ஆழ்ந்தனர்.
‘தென் கைலாயம்’ எனப் போற்றப்படும் கோவை வெள்ளியங்கிரி மலை அடிவாரத்தில் அமைந்துள்ள அருள்மிகு வெள்ளியங்கிரி ஆண்டவர் கோயிலில், சித்திரை மாத பௌர்ணமியை முன்னிட்டு நடைபெற்ற சிறப்பு அலங்கார பூஜை ஆயிரக்கணக்கான பக்தர்களை பக்திப் பரவசத்தில் ஆழ்த்தியது.
உலகம் முழுவதும் இருந்து திரண்ட சிவபக்தர்கள் உடுக்கை அடித்து ஆடிய நடனம் மெய்சிலிர்க்க வைத்தது.

சித்திரை மாதத்தில் நடைபெறும் வழிபாடுகளுக்குத் தனிச்சிறப்பு இருப்பதால், அதிகாலை முதலே மலை அடிவாரத்தில் பக்தர்கள் பெருமளவில் திரண்டனர்.
பௌர்ணமியை முன்னிட்டு, வெள்ளியங்கிரி ஆண்டவர் சுயம்பு லிங்கத்திற்குப் பல்வேறு அபிஷேக, பூஜைகள் நடத்தப்பட்டு, சிறப்பு அலங்காரத்துடன் மகா தீபாராதனை காட்டப்பட்டது. இதில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் ‘சிவ சிவ’ மற்றும் ‘வெள்ளியங்கிரி ஆண்டவரே போற்றி’ என முழக்கமிட்டு தரிசனம் செய்தனர்.
பூஜையின் ஒரு பகுதியாக பாரம்பரிய வாத்தியங்கள் ஒலிக்க, உடுக்கை மேளம் அதிர அதிர பக்தர்கள் மெய்மறந்து நடனமாடினர். பின்னர் பக்தர்களுக்கு பிரசாதங்கள் வழங்கப்பட்டது.
கோடை வெயிலையும் பொருட்படுத்தாமல் பௌர்ணமி பூஜையில் பங்கேற்று மலை ஏறும் பக்தர்களின் உற்சாகம், வெள்ளியங்கிரி பகுதியை முழுவதும் பக்தி பரவசத்தில் ஆழ்த்தியது குறிப்பிடத்தக்கது.



