கோவை: கோவை மாவட்டம் வால்பாறை அருகே மாங்காய் பறித்து தருவதாகக் கூறி 3 வயது சிறுமியை வீட்டிற்கு அழைத்துச் சென்று பாலியல் தொல்லை கொடுத்ததாக 15 வயது சிறுவன் மீது புகார் எழுந்துள்ளது. இதுதொடர்பாக அனைத்து மகளிர் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
வால்பாறை அருகே உள்ள கிராமத்தைச் சேர்ந்த தம்பதி விவசாய வேலை செய்து வருகின்றனர். இவர்களுக்கு ஒரு மகனும், 3 வயது மகளும் உள்ளனர். இவர்களது உறவினர்களும் அதே பகுதியில் வசித்து வருகின்றனர். அவர்களுக்கு 15 வயது சிறுவன் ஒருவர் உள்ளார்.
சம்பவத்தன்று உறவினர் வீட்டில் விளையாடிக் கொண்டிருந்த 3 வயது சிறுமியிடம், மாங்காய் பறித்து தருவதாகக் கூறி அந்த சிறுவன் தனது வீட்டிற்கு அழைத்துச் சென்றதாக கூறப்படுகிறது.
வீட்டிற்குள் சென்ற பின்னர், சிறுமியிடம் சிறுவன் பாலியல் ரீதியாக தொல்லை கொடுத்ததாகவும், இதனால் சிறுமி கதறி அழுததாகவும் புகாரில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அப்போது சிறுமியின் சகோதரர் தனது நண்பர்களுடன் வீட்டிற்கு வெளியே விளையாடிக் கொண்டிருந்ததாக கூறப்படுகிறது. வீட்டிற்குள் இருந்து தங்கையின் அழுகை சத்தம் கேட்டதால், அவர் உள்ளே சென்று பார்த்துள்ளார்.
அப்போது சிறுமியை டி.வி. பார்க்குமாறு கூறிவிட்டு, சிறுவன் எதுவும் நடக்காதது போல் படுக்கையில் அமர்ந்து டி.வி. பார்த்துக் கொண்டிருந்ததாக கூறப்படுகிறது. தங்கை ஏன் அழுதுகொண்டிருக்கிறார் என்று சிறுமியின் சகோதரர் கேட்டபோது, சிறுவன் ஒரு காரணத்தை கூறி சமாளித்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதையடுத்து சிறுமியை அழைத்துக் கொண்டு அவரது சகோதரர் வீட்டிற்கு திரும்பியுள்ளார். அப்போது, உறவினர் வீட்டில் நடந்த சம்பவத்தை சிறுமி தனது தாயிடம் அழுதபடி தெரிவித்ததாக கூறப்படுகிறது.
Also Read: மது அருந்த வராத நண்பன்… கோவையில் அதிர்ச்சி… வேலாண்டிபாளையத்தில் வழிப்பறி…
இதனால் அதிர்ச்சியடைந்த பெற்றோர், சிறுவனின் பெற்றோரிடம் சம்பவம் குறித்து கேட்டுள்ளனர். உறவினர்கள் என்பதாலும், சிறுமியின் எதிர்காலத்தை கருத்தில் கொண்டும் இந்த விவகாரம் வெளியில் தெரியாமல் இருக்க குடும்பத்தினர் அமைதியாக இருந்ததாக கூறப்படுகிறது.
இந்நிலையில், சம்பவம் நடந்து சுமார் ஒரு மாதத்திற்குப் பிறகு இந்த விவகாரம் வெளியே தெரியவந்துள்ளது. இதையடுத்து சிறுமியின் தாயார் வால்பாறை அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.
புகாரின் பேரில் இன்ஸ்பெக்டர் கஸ்தூரி வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டார். இந்த சம்பவம் தொடர்பாக 15 வயது சிறுவனிடம் மகளிர் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும், சம்பவம் தொடர்பான முழுமையான விவரங்களையும் போலீசார் விசாரித்து வருகின்றனர்.





