உங்கள் குரல்: அங்கேயும் கொட்டினால் எங்கு தான் விளையாடுவது? கோவை இளசுகள் வேதனை!

கோவை: விளையாட இருக்கும் ஒரே ஒரு மைதானத்திலும் குப்பைகளைக் கொட்டினால் எங்கு தான் விளையாடச் செல்வது என்று கோவை மாணவர்கள் மற்றும் இளைஞர்கள் (நியூஸ் க்ளவுட்ஸ் கோயம்புத்தூர் வாசகர்கள்) வேதனை தெரிவித்துள்ளனர்.

கோவை ஸ்மார்ட் சிட்டியாக தரமுயர்த்தப்பட்டது முதல் இங்கு பல்வேறு மேம்பாட்டுப் பணிகளை மாநகராட்சி நிர்வாகம் மேற்கொண்டு வருகிறது.

குளக்கரைகளை புனரமைத்தல், முக்கிய இடங்களை அலங்கரித்தல், நடைபாதைகள், சிறு பூங்காக்கள் உருவாக்குதல், தெருக்களில் எல்இடி வண்ண விளக்குகள் என்று கோவையை பொலிவுபடுத்தும் பணிகள் நடைபெற்றுள்ளன.

ஆனால், இளைஞர்களுக்கான புதிய விளையாட்டுத் திடல்கள் உருவாக்கப்படவில்லை. மாறாக இருக்கும் சில இடங்களையும் மற்ற உபயோகத்திற்காக பயன்படுத்துவது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

அந்த வகையில் பள்ளி, கல்லூரி மாணவர்கள் மற்றும் இளைஞர்கள் விளையாடுவதற்கு பயன்படுத்தி வரும் மைதானம் தற்போது குப்பைகளால் ஆக்கிரமிக்கப்பட்டு வருகிறது.

ஆர்.எஸ்.புரம் ரத்தின விநாயகர் கோவிலுக்கு பின்புறம் சாஸ்திரி மைதானம் அமைந்துள்ளது. ஆர்.எஸ்.புரம் பரியல் கிரவுண்ட் என்று அழைக்கப்படும் இந்த மைதானம், ஆர்.எஸ்.புரம் மட்டுமல்லாது காந்திபார்க், சாய்பாபா காலனி, வடவள்ளி, டவுன்ஹால் பகுதி மாணவர்களும், இளைஞர்களும் இந்த மைதானத்தை கிரிக்கெட், புட்பால் மற்றும் கோகோ உள்ளிட்ட பல்வேறு விளையாட்டுகளை விளையாட பயன்படுத்தி வருகின்றனர்.

இவர்கள் மட்டுமல்லாது தனியார் நிறுவன ஊழியர்களும் இந்த மைதானத்திற்கு வந்து விளையாடுவதோடு, நடைபயிற்சியும் மேற்கொண்டு வருகின்றனர்.

உடலுக்கும், மனதுக்கும் வலிமை கொடுக்கும் இந்த மைதானத்தை மேம்படுத்தும் பணிகளை மேம்படுத்தாத கோவை மாநகராட்சி நிர்வாகம், அங்கு குப்பைகளையும், கட்டடக் கழிவுகளையும் கொட்டி வருகிறது. இதனால் விளையாட வருவோர் வேதனையடைந்து வருகின்றனர்.

இதுகுறித்து விளையாடச் செல்லும் நியூஸ் க்ளவுட்ஸ் வாசகர்கள் கூறுகையில், “மாநகராட்சி குப்பை வண்டிகளில் குப்பைகளை ஏற்றி வரும் வாகனங்கள் இங்கு குப்பைகளைக் கொட்டிச் செல்கின்றன. இதுகுறித்து புகார் அளித்தாலோ, கேள்வி எழுப்பினாலோ, “கொட்டச்சொன்னதே மாநகராட்சி அதிகாரிகள்” தான் என்கின்றனர். விளையாட்டின் மூலம் இந்த மைதானம் பல இளைஞர்களை நல்வழிப்படுத்துகிறது.

பல விளையாட்டு வீரர்களுக்கு அடித்தளமாக இருக்கிறது. இதனை பாழ்படுத்தும் நடவடிக்கையைக் கைவிடுத்து, மேம்படுத்தும் நடவடிக்கையை மேற்கொள்ள வேண்டும். இல்லையென்றால் விளையாட்டு வீரர்கள் மற்றும் இளைஞர்களை திரட்டி பெரும் போராட்டம் நடத்துவோம்.” என்றனர்.

கோவை மாநகரை பொலிவுபடுத்தவும்,, மக்களின் பொழுதுபோக்கிற்கும் கோடிகளை இறைக்கும் மாநகராட்சி நிர்வாகம் விளையாட்டு வீரர்களை ஊக்கப்படுத்தும் நடவடிக்கையில் ஈடுபட வேண்டுமே தவிர, அவர்களுக்கென இருக்கும் ஒரு சில இடத்தையும் அபகரிக்க முயலக்கூடாது என்று பொதுமக்கள் கருத்துகளை தெரிவித்துள்ளனர்.

மாநகராட்சி நிர்வாகம் இந்த மைதானத்தை சுத்தப்படுத்தி, நம் ஊர் விளையாட்டு வீரர்களின் வேதனையைத் துடைக்குமா என்று பொறுத்திருந்து பார்ப்போம்.

Sathiya Priya
Sathiya Priyahttp://newscloudscoimbatore.com
Sathiya priya is an experienced journalist with 8 years of experience across various media platforms, and for the past 5 years she has been working with NewscloudsCoimbatore (NCC). She specializes in civic affairs, social issues, and people-centric reporting with a strong focus on accuracy and credibility.

Recent News

எஸ்.பி.வேலுமணியை புகழ்பாடிய நடிகை விந்தியா…

கோவை: கோவையில் நடைபெற்ற அதிமுக பொதுக்கூட்டத்தில் எஸ்.பி.வேலுமணியை நடிகை விந்தியா புகழ்ந்தார். கோவை, பேரூர், செட்டிபாளையம் பகுதியில் நடைபெற்ற அ.தி.மு.க-வின் பொதுக் கூட்டத்தில் கலந்து கொண்ட அக்கட்சியின் நட்சத்திரப் பேச்சாளரும், பிரபல நடிகையுமான விந்தியா,...

Video

கோவையில் CRPF வளாகத்திற்குள் நுழைந்து திருப்தியாக சாப்பிட்டு சென்ற யானை…

கோவையில் CRPF வளாகத்திற்குள் நுழைந்த காட்டு யானை சமையலறையில் இருந்த அரிசி, மாவு உள்ளிட்ட உணவுப் பொருட்களை சாப்பிட்டு சென்ற வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.