கோவையில் பெரியார் அறிவுலகம் எப்போது திறக்கப்படும்- அமைச்சர் எ.வ.வேலு கொடுத்த அப்டேட்…

கோவை: முதல்வரிடம் இசைவு பெற்று பிப்ரவரி 28ஆம் தேதிக்குள் பெரியார் அறிவுலகம் திறக்கப்படும் என அமைச்சர் எ.வ.வேலு தெரிவித்துள்ளார்.

கோவையில் பிப்ரவரி 28ஆம் தேதிக்குள் பெரியார் அறிவுலகம் திறக்க இருப்பதாக அதற்கான பணிகளை அமைச்சர் எ.வ.வேலு நேரில் பார்வையிட்ட பிறகு தெரிவித்துள்ளார்.

கோவை காந்திபுரம் பகுதியில் 300 கோடி ரூபாய் மதிப்பில் எட்டு தளங்களுடன் கூடிய பெரியார் அறிவுலகம் கட்டப்பட்டு வருகிறது. தேர்தலுக்குள் இதனை திறந்து வைப்பதற்கு முடிவெடுக்கப்பட்டுள்ள நிலையில் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன அந்த பணிகளை பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ.வேலு இன்று நேரில் பார்வையிட்ட ஆய்வு செய்தார். கட்டுமான பணிகள் எந்த அளவு நிறைவடைந்துள்ளது எத்தனை நாட்களில் பணிகள் நிறைவடையும் என்பது குறித்து ஒப்பந்ததாரரிடமும் பொறியாளரிடமும் கேட்டறிந்தார்.

தொடர்ந்து செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த அமைச்சர் எ.வ.வேலு, முதல்வர் திராவிட மாடல் ஆட்சி பொறுப்பேற்றவுடன் கல்விக்கு முக்கியத்துவம் அளிக்க கூடிய வகையில் எதிர்காலத்தில் அறிவுள்ள சமூகத்தை உருவாக்க முடியும் என்ற நம்பிக்கையில் நூலகங்கள் அமைத்து வருவதாகவும், அதன்படி மதுரையில் கலைஞர் நூற்றாண்டு நூலகம் கட்டப்பட்டு தெற்கு பகுதி மாவட்டங்கள் அனைத்தும் அந்த நூலகத்தை பயன்படுத்தி வருவதாக தெரிவித்தார்.

அதனைத் தொடர்ந்து கல்வியாளர்கள் அதிகமாக வசிக்கக்கூடிய கோவையில் இந்த நூலகம் அமைக்க 2024 ஆம் ஆண்டு முதல்வரால் அடிக்கல் நாட்டப்பட்டு கட்டப்பட்டு வருவதாக குறிப்பிட்டார். 1 லட்சத்து 98 ஆயிரம் சதுர அடியில் 8 தளங்களுடன் இந்த நூலகம் அமைய உள்ளதாகவும், இதற்காக அனைத்து அனுமதிகளும் பெறப்பட்டு இருப்பதாக தெரிவித்தார். அதுமட்டுமின்றி விமான நிலையத்தின் தடையில்லா சான்றுகளும் வாங்கப்பட்டிருப்பதாக தெரிவித்தார். 300 கோடி ரூபாய் திட்ட மதிப்பீட்டில் 245 கோடி ரூபாய் கட்டிடத்திற்கும், 5 கோடி ரூபாய் கணினி உள்ளிட்ட சாதனங்களுக்கும் 50 கோடி ரூபாய் புத்தகங்களுக்கும் ஒதுக்கப்படுவதாக தெரிவித்தார்.

ஒன்றிணைந்த கோவை மாவட்டத்தை சேர்ந்தவர் பெரியார் என தெரிவித்த அமைச்சர், இந்த சமுதாயத்திற்கும் இந்தியாவில் உள்ள பிற மாநிலங்களும் அவரை பின்பற்றக்கூடிய வகையில் பல்வேறு விழிப்புணர்வுகளை அவர் வழங்கி மாபெரும் தலைவராக இருப்பவர் பெரியார் என குறிப்பிட்டார். அதன் அடிப்படையிலேயே இந்த கட்டிடத்திற்கு பெரியார் அறிவுலகம் என்று பெயர் சூட்டப்பட்டு இருப்பதாகவும் தெரிவித்தார்.

இந்த கட்டிடத்தில் நான் ஒரு பேர் அமர்ந்து பார்க்கின்ற அளவிற்கு கலையரங்கம், டிஜிட்டல் உலகம், அறிவியல் மையம், குழந்தைகளின் உலகம், மாற்றுத்திறனாளிகளுக்கான தனிப்பிரிவு, தமிழ் நூல்களுக்கு தனிப்பிரிவு, ஆங்கில நூல்களுக்கு தனி பிரிவு, போட்டி தேர்விற்கு தனிப்பிரிவு, பருவ இதழ்கள் தினசரி பத்திரிகைகளுக்கு தனி பிரிவு, இது மட்டுமின்றி இதையெல்லாம் நிர்வாகிப்பதற்கு நூலகருக்கு நூலகர் அலுவலகம் அமைக்கப்படுகிறது என தெரிவித்தார். லிப்ட்கள், நகரும் படிக்கட்டுகள் வசதி, வாகனங்கள் நிறுத்துமிடம் மாலை நேரங்களில் இங்கு படிப்பவர்கள் வெளியில் அமர்ந்து படிப்பதற்கான வசதிகளும் ஏற்பாடு செய்யப்பட்டு இருப்பதாக தெரிவித்தார்.

தற்பொழுது ஆய்வு மேற்கொள்ளப்பட்டதன் அடிப்படையில், பிப்ரவரி பத்தாம் தேதிக்குள் பணிகள் நிறைவடைந்து விடும் என ஒப்பந்ததாரர் தெரிவித்திருப்பதாக கூறினார். திராவிட மாடல் ஆட்சி வந்த பிறகுதான் பொதுப்பணித்துறைக்காக கோவைக்கு தனி ரீஜியன் வந்தது என குறிப்பிட்ட அவர் மண்டல தலைமை பொறியாளர் நியமிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார். பத்தாம் தேதிக்குள் பணிகள் நிறைவடையும் பட்சத்தில் முதல்வரிடம் இசைவு பெற்று பிப்ரவரி 10 முதல் 28ஆம் தேதிக்குள் முதல்வரால் இந்த பெரியார் அறிவுலகம் திறக்கப்படும் என தெரிவித்தார்.

இங்கு அனைத்தும் தரத்துடன் கட்டப்பட்டு வருவதாக தெரிவித்த அவர் பிரத்தியேகமாக இதற்கென இன்ஜினியர்கள் இருப்பதாகவும் கட்டுமான பொருட்களை பரிசோதனை செய்வதற்கு பரிசோதனை கூடமும் இங்கு

அமைக்கப்பட்டு இருப்பதாக தெரிவித்தார். கோவையில் இந்த நூலகம் அமையப்பெற்ற உடன் பல்வேறு மாவட்டங்களில் இருந்தும் தங்கள் மாவட்டத்திற்கும் இது போன்ற நூலகம் வேண்டும் என்று முதல்வருக்கு கோரிக்கை விடுத்து வருவதாகவும் அதன் அடிப்படையில் திருச்சி திருநெல்வேலி கடலூர் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் முதல் கட்ட பணிகள் துவங்கி இருப்பதாக தெரிவித்தார். தமிழ்நாடு ஏற்கனவே விழிப்புணர்வு உள்ள மாநிலம் இன்னும் விழிப்புணர்வு தேவை என்றால் நூலகம் அவசியம் என்ற அடிப்படையில் தான் நூலகங்கள் அமைக்கப்பட்டு வருவதாகவும் தெரிவித்தார்.

செம்மொழிப் பூங்கா பணிகள் 30 சதவிகிதம் நிறைவடையவில்லை என்று கோவை தெற்கு சட்டமன்ற உறுப்பினர் வானதி சீனிவாசன் தெரிவித்திருந்தது குறித்தான கேள்விக்கு, இது போன்று பெரிய பணிகள் மேற்கொள்ளும் பொழுது குறிப்பிட்ட காலத்தை விட சில நாட்கள் நீட்டிக்கும், அது பூங்கா என்பதால் அதற்கான பணிகள் நடைபெற்று வருகிறது ஒரு சில வாரங்களில் அந்த பணிகள் அனைத்தும் முழுமை அடைந்து விடும் என தெரிவித்தார்.

மேற்கு புறவழிச் சாலை குறித்தான கேள்விக்கு, முதற்கட்ட பணிகள் 90% க்கு மேல் நிறைவடைந்துள்ளது என்றும் இரண்டாம் கட்ட பணிகள் 12.54 கிமீ தூரத்திற்கு 96 சதவிகிதம் நில எடுப்பு பணிகள் முடிவடைந்து விட்டது அதனைத் தொடர்ந்து 368 கோடி ரூபாய் மதிப்பில் பணிகளுக்கான நிர்வாக அனுமதி வேண்டி நிதித்துறைக்கு கோப்புகள் அனுப்பி வைக்கப்பட்டு இருப்பதாகவும் நிதித்துறை அனுமதி அளித்த உடன் முதலமைச்சரின் உத்தரவுடன் டெண்டர் கோரப்படும் என்றார்.

அவிநாசி மேம்பாலத்தில் ஐந்து இடங்களில் சுரங்க பாதைகள் அமைக்கப்படும் என்று ஏற்கனவே தெரிவித்திருந்தது தொடர்பான கேள்விக்கு, அவிநாசி மேம்பாலம் அமைந்த உடன் விரைந்து 10 கிலோமீட்டர் தூரத்தை கடந்து விடுவதாக கூறுகிறார்கள் என்றும், மேம்பாலத்திற்கு கீழ் உள்ள பகுதிகளில் ஆங்காங்கே Junction Improvement செய்து தர வேண்டும் என்று கோரிக்கை விடுக்கப்பட்டு இருப்பதாகவும் வரக்கூடிய நிதி ஆண்டில் அதற்கான பணிகளை மேற்கொள்ள இருப்பதாக தெரிவித்தார். அது செய்த பிறகும் போக்குவரத்து நெரிசல் ஏற்படும் பட்சத்தில் சுரங்க பாதைகள் அமைப்பது குறித்து ஆலோசிக்கப்படும் என்றார்.

நீலாம்பூர் வரை மேம்பாலம் நீட்டிப்பது தொடர்பான கேள்விக்கு அது குறித்து ஆலோசிக்கப்பட்டு வருவதாகவும் அதே சமயம் மெட்ரோ ரயில் திட்டம் குறித்தும் கடிதம் அனுப்பப்பட்டு இருப்பதாகவும் அறிவிக்கப்பட்டதை நாங்கள் கட்டாயம் செய்து விடுவோம், மத்திய அரசு கோவைக்கு மெட்ரோ ரயில் திட்டம் கிடையாது என்று தெரிவித்திருப்பதால் மீண்டும் அதனை வலியுறுத்தி இருப்பதாகவும் அது ஒரு முடிவுக்கு வரும் பொழுது இந்த பணிகளையும் நாங்கள் மேற்கொண்டு விடுவோம் என தெரிவித்தார். எனவே கட்டாயமாக நீலாம்பூர் வரை அவிநாசி மேம்பாலம் நீட்டிக்கப்படும் எனவும் தெரிவித்தார்.

அவிநாசி மேம்பாலத்திற்கு திட்டமதிபீடு நிதி அதிகரிக்கப்பட்டுள்ளது அதற்கு முறையான திட்டமிடல் இல்லாததுதான் காரணம் என்று பலரும் கருத்து தெரிவித்து வருவது தொடர்பான கேள்விக்கு, திட்ட மதிப்பீடு எல்லாம் சென்ற கால ஆட்சியாளர்கள் தான் செய்தார்கள், திட்ட மதிப்பீடு செய்தது டெண்டர் விட்டது எல்லாம் முந்தைய அரசாங்கம் தான் எனக் குறிப்பிட்டார்.

இந்த மேம்பாலத்திற்கு 98 சதவிகிதம் நிதியை நாங்கள் தான் ஒதுக்கினோம், எனவும் பாலங்கள் கட்டிடங்கள் கட்டும் பொழுது திடீரென கட்டுமான பொருட்களின் விலை உயரும் அவ்வாறு விளைவு எறும் பொழுது நிதி என்பதும் சற்று உயரும் என தெரிவித்தார். மதுக்கரை மரப்பாலம் பணிகள் தாமதமாக நடைபெற்று வருவது தொடர்பான கேள்விக்கு, நிதி ஒதுக்கீட்டிற்கு ஆவணங்கள் அனுப்பப்பட்டிருப்பதாகவும் அந்த நிதி வரவேண்டும் என தெரிவித்தார்.

திராவிட மாடல் ஆட்சிக்கு அதிகம் செய்ய வேண்டும் என்று ஆசை தான் ஆனால் முந்தைய ஆட்சிகாரர்கள் கடனை வைத்து விட்டு சென்று விட்டார்கள் அதையெல்லாம் சமாளித்து நாங்கள் கூறியதையும் செய்து வருகிறோம் என தெரிவித்தார். கோவைக்கு ஒன்றிணைந்த பேருந்து நிலையம் தேவை என்று பலரும் கோரிக்கை விடுத்து வருவது தொடர்பான கேள்விக்கு இது குறித்து முதலமைச்சரின் கவனத்திற்கு கொண்டு செல்லப்படும், அந்தத் துறைக்கு சம்பந்தப்பட்ட அமைச்சர் நான் இல்லை இருப்பினும் பொதுமக்கள் நலனுக்காக இந்த கோரிக்கை முதலமைச்சரின் கவனத்திற்கு கொண்டு செல்லப்படும் என தெரிவித்தார்.

வைத்தியலிங்கம் திமுகவில் இணைந்தது தொடர்பான கேள்விக்கும் தேசிய ஜனநாயக கூட்டணியில் டிடிவி தினகரன் இணைந்தது தொடர்பான கேள்விக்கும், நாங்கள் பலமாக இருக்கிறோம் மீண்டும் 2026 இல் திராவிட மாடல் ஆட்சி தொடரும் தமிழ்நாட்டின் முதலமைச்சர் ஆக மீண்டும் மு க ஸ்டாலின் தான் வருவார் என தெரிவித்தார். திமுகவிற்கு OPS வருவாரா என்ற கேள்விக்கு பதில் அளிக்கவில்லை.

Prakash N
Prakash Nhttps://www.newscloudscoimbatore.com
Prakash is a journalist with 4 years of experience in the media field. Passionate about journalism, he has been working with Newsclouds Coimbatore for the past 2 years, focusing on Coimbatore-centric news. His reporting emphasizes ground-level stories, accuracy, and issues that directly impact the local community.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Recent News

கோவை மாநகரில் ஆலங்கட்டி மழை- உற்சாகமடைந்த குழந்தைகள்…

கோவை: கோவை மாநகரில் சரவணம்பட்டி, காளப்பட்டி, சின்னவேடம்பட்டி உள்ளிட்ட பகுதிகளில் ஆலங்கட்டி மழை பெய்ததால் குழந்தைகளும் பொதுமக்களும் மகிழ்ச்சி அடைந்தனர். தமிழ்நாட்டில் வெயில் வாட்டி வரும் நிலையில் கோவையில் கடந்த சில தினங்களாகவே அதிக...

Video

தடாகம் பகுதியில் கும்பலாக சுற்றித்திரியும் காட்டுப்பன்றிகள்…

தடாகம் அருகே வரப்பாளையத்தில் இரவு நேரத்தில் ஊருக்குள் புகுந்த காட்டுப்பன்றிகள் கூட்டம் வாழைமரங்கள், விவசாய நிலங்களை சேதப்படுத்திய சிசிடிவி காட்சிகள் வெளியாகின.