கோவை: தமிழக வெற்றி கழகம் பொதுக்கூட்டத்தில் பேசிய தவெக நிர்வாகிகள் திமுக, அதிமுக ஆகிய இரு கட்சிகள் பற்றியும் கடுமையாக விமர்சித்தனர்.
கோவை மலுமிச்சம்பட்டி பகுதியில் தமிழக வெற்றிக்கழகம் கோவை தெற்கு மாவட்டம் சார்பில் பொதுக்கூட்டம் நேற்று முன்தினம் மாலை நடைபெற்றது.
இதில் தமிழக வெற்றிக் கழகத்தின் பொதுச் செயலாளர் என்.ஆனந்த், தேர்தல் பிரசார மேலாண்மை பொதுச் செயலாளர் ஆதவ் அர்ஜுனா, தலைமை நிர்வாக குழு ஒருங்கிணைப்பாளர் செங்கோட்டையன் மற்றும் தவெக நிர்வாகிகள் பங்கேற்றனர்.
இக்கூட்டத்தில் உரையாற்றிய செங்கோட்டையன், இங்கே மேடைக்கு வரும்போதே நான் கவனித்தேன். இந்த மாவட்டத்தில் தற்போதைய ஆளுங்கட்சியின் அமைச்சர்கள் பலர் இருக்கிறார்கள். ஆனால், அந்த அத்தனை அமைச்சர்களுக்கும் சிம்ம சொப்பனமாக இந்தக் கூட்டம் இங்கே அமைந்திருப்பதை நான் காண்கிறேன் என்றார்.
50 ஆண்டு கால அரசியலுக்குப் பிறகு, புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர் அவரிடத்திலே அண்ணாயிசம் என்றால் என்ன? என்று கேட்டார்கள். அதற்குப் புரட்சித் தலைவர் மிகத் தெளிவாகச் சொன்னார்: ஒழுகாத வீடு, கிழியாத உடை, ஆறாத சோறு, இவற்றை இந்த மக்களுக்குத் தருவதுதான் அண்ணாயிசம் என்றார்.
நான் இதை இங்கே குறிப்பிடுவதற்கு ஒரு முக்கியமான காரணம் இருக்கிறது. அதற்கு பிறகு புரட்சிதலைவி அம்மா அவர்கள், அதனை செய்தார்கள். 50 ஆண்டு காலத்திற்கு பிறகு தூக்கிப்போட்ட மக்கள் நலனை தூக்கிப் பிடித்தவர்தான் நம்முடைய தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர், வெற்றித் தளபதி என்றார்..
அவரைப் பார்க்கும்போது எனக்கு இப்போது 20 வயது குறைந்திருக்கிறது என்றுதான் சொல்ல வேண்டும் என்றும் அந்த அளவிற்கு ஒரு இளைஞராகத் துடிப்புடன் ஓடுவதற்கு அவர் என்னை இன்று தயார்படுத்தி இருக்கிறார். இரவு பகல் பாராமல் தமிழகத்தின் முன்னேற்றத்திற்காக உழைப்பதற்கு நான் முழுமையாகத் தயாராகிவிட்டேன் என்றார். 2026-ல் நம் தலைவர் யாரைக் கை காட்டுகிறாரோ அவர்தான் சட்டமன்ற உறுப்பினர். அதை யாராலும் மாற்றிக்காட்ட முடியாது என்றார்
சிலர் தப்புக் கணக்குப் போடுகிறார்கள். இங்கே இருப்பவர்கள் அதிமுகவிலோ அல்லது திமுகவிலோ ஒரு காலை வைத்துக்கொண்டு இங்கே இருப்பதாகச் சொல்கிறார்கள். அவர்களுக்கு நான் ஒன்று சொல்லிக்கொள்கிறேன். இந்தக் கூட்டத்தைப் பார்த்த பிறகாவது புரிந்துகொள்ளுங்கள், இன்று இரவு முழுவதும் அவர்கள் தூங்கப் போவதில்லை என்றார்.
ஒரு நாட்டை மாற்றுவதற்குத் நல்ல தலைமை தேவை தற்போதைய இரண்டு தலைமைகளையும் மக்கள் பார்த்து சலித்துவிட்டார்கள். புரட்சித் தலைவர் மற்றும் புரட்சித் தலைவிக்கு பிறகு இன்று நடைபெறுகிற ஆட்சியைப் பார்த்தால், அது ஒரு அலங்கோல ஆட்சி நடைபெற்றுக் கொண்டிருக்கிறது என கூறிய அவர் எங்கு பார்த்தாலும் கொலைகள், கொள்ளைகள். சட்ட ஒழுங்கு என்பது முற்றிலுமாகச் சீர்குலைந்து போய்விட்டது என்றார். பெண்களுக்குப் பாதுகாப்பில்லை. வீதிகளில் குப்பைகள் மலைபோலக் குவிகின்றன. அதனைச் சரிசெய்யக் கூட இந்த அரசாங்கத்தால் முடியவில்லை என விமர்சித்தார்.
மரப்பாலத்திலே கட்டப்படுகிற ரயில்வே மேம்பாலங்கள் இன்னும் முடிக்கப்படாமல் பாதியிலேயே நிற்கின்றன. செக்போஸ்ட்களில் முறையான ஆட்கள் இல்லை. இந்த அவலங்கள் அனைத்தையும் மாற்றக்கூடிய ஒரே சக்தி, நம் தலைவராக இருக்கும் தளபதிக்கு மட்டும்தான் இருக்கிறது என்றார்.
எம்.ஜி.ஆர் அரசியல் பயணத்தைத் தொடங்கியபோது இதையேதான் சொன்னார்கள். நடிகர் நாடாள முடியுமா? என்று கேட்டார்கள். நடிகர் நாடாள மட்டுமல்ல, நாட்டை ஆண்டு கொண்டிருக்கிற வரலாற்றை படைக்கக்கூடிய தலைவராக நம் தளபதி வருவார். அதை யாராலும் மாற்றிக் காட்ட முடியாது என்றார்.
இதே அளவு கூட்டத்தைக் கூட்ட வேண்டுமென்றால், ஆளுங்கட்சி அமைச்சர்கள் குறைந்தது இரண்டு கோடி ரூபாய் செலவு செய்ய வேண்டும். ஆனால், இங்கே ஒரு பைசா கூடத் தேவையில்லை. தமிழகத்தை ஆளப்போகும் தளபதி வேண்டும் என்ற ஒற்றை இலட்சியத்திற்காக மக்கள் திரண்டிருக்கிறார்கள் என்றார்.
சமீபத்தில் ஒரு மாநாடு நடைபெற்றது. திமுக-வின் பெண்கள் மாநாடு. அதற்கு 110 கோடி ரூபாய் செலவு செய்தார்கள். ஒவ்வொருவருக்கும் 1000 ரூபாய் பணம், ஒரு சேலை, பேருந்து வசதி என அனைத்தையும் கொடுத்து ஆட்களைக் கூட்டி வந்தார்கள். அங்கே கூட்டத்தைப் பார்த்தோமே தவிர, எள்ளளவும் எழுச்சியைப் பார்க்கவில்லை. ஆனால், இங்கே பண பலம் இல்லாமல் திரண்டிருக்கும் உங்கள் முகங்களில் அந்த எழுச்சியைக் காண்கிறேன் என்றார்.
நேற்று முன்தினம் துபாயிலிருந்து வீடியோ கான்பரன்ஸ் மூலம் என்னை உரையாற்றச் சொன்னார்கள். 500-க்கும் மேற்பட்ட வெளிநாடு வாழ் தமிழர்கள் அதில் கலந்துகொண்டார்கள். அவர்கள் சொன்ன ஒரு விஷயம் என்னை நெகிழ வைத்தது. நாங்கள் மட்டுமல்ல, உலக நாடுகளிலே வாழுகிற சுமார் மூன்று லட்சம் தமிழர்கள், 2026 தேர்தலில் நம் தளபதிக்கு வாக்களிக்கப் போகிறோம்.
இதற்காக ஒரு லட்சம் ரூபாய் வரை செலவு செய்து தமிழகம் வந்து வாக்களிப்போம் என்றார்கள் என தெரிவித்தார். அறிஞர் அண்ணா, ஏழையின் கண்ணீர் கூர்வாளுக்குச் சமம் என்று சொன்னார். அந்த கூர்வாளுக்கு சமமாக இருக்கிற ஏழையுடைய கண்ணீரை துடைக்கிற ஒரே தலைவராக நாளை 234 தொகுதிகளும் நம்முடைய தளபதி யாரை விரல் காட்டுகிறாரோ அவர்தான் சட்டமன்ற உறுப்பினர் என்ற வரலாற்றை நாம் படைப்போம் என தெரிவித்து புறப்பட்டார்.
தொடர்ந்து பேசியதமிழக வெற்றிக் கழக தேர்தல் மேலாண்மை பொதுச்செயலாளர் ஆதவ் அர்ஜுனா அறிஞர் அண்ணாவிற்குப் பிறகு, கலைஞர் கருணாநிதி, அவருக்குப் பிறகு மு.க. ஸ்டாலின், இப்போது உதயநிதி என்று வரிசையாகக் குடும்பம் குடும்பமாக ஆரம்பித்துவிட்டார்கள். ஆனால், இறுதியாக இந்த 2026-ஆம் ஆண்டுத் தேர்தலோடு திராவிட முன்னேற்றக் கழகத்திற்கு ஒரு முற்றுப்புள்ளி வைக்க ஒரு நபர் வர வேண்டும் அல்லவா? என கேள்வி எழுப்பினார். எம்.ஜி.ஆருக்குப் பிறகு, அந்த இடத்தைப் பூர்த்தி செய்ய எங்கள் தலைவர் விஜய் வந்துவிட்டார், இத்தனை நாள் ஒரு சரியான தலைமை இல்லாமல் மக்கள் ஏங்கிக் கொண்டிருந்தீர்கள்; இப்போது தலைவர் வந்துவிட்டார் என்றார்.
கடந்த 2021-ஆம் ஆண்டின் வெற்றி என்பது ஒட்டுமொத்தமாக அதிமுகவிற்கும் பிஜேபிக்கும் கிடைத்தது. தமிழகத்தில் திமுக ஆட்சி அமைத்த பிறகு, இந்தச் சென்னை மற்றும் கோயம்புத்தூர் எப்படி இருக்கிறது என்று பாருங்கள் என்றார்.
திமுகவை பொறுத்தவரை டாஸ்மாக்கில் இருந்து செந்தில் பாலாஜிக்கு பத்து ரூபாய் அனுப்ப வேண்டும், அனுப்பவில்லை என்றால், மாவட்டச் செயலாளர் பதவியையே பிடுங்கிவிடுவார்கள். அந்தப் பணம் நேராக ‘மாப்பிள்ளைக்கும் மருமகனுக்கும்’ போய்ச் சேர வேண்டும். இதுதான் இன்றைய திமுக-வின் அரசியல். அவர்களுக்குக் ‘கட்டிங்’ மற்றும் ‘செட்டிங்’ மட்டுமே தெரியும். மீண்டும் தேர்தலின் போது பணத்தைக் கொடுத்து வாக்குகளை வாங்கிவிடலாம் என்பதுதான் அவர்களின் எண்ணம் என்றார்.
எப்பேர்ப்பட்ட கட்சியை அண்ணா உருவாக்கினார், தனது இரத்தத்தைச் சிந்தி எத்தனை தலைவர்கள் இந்த இயக்கத்தை உருவாக்கினார்கள்? அன்று ஒன்றிய அரசுக்கு எதிராக ‘இருமொழிக் கொள்கை’ என்று வரும்பொழுது அண்ணா எழுந்து நின்றார். தமிழகம் முழுவதும் இளைஞர்கள் ஒன்றாகத் திரண்டார்கள். இந்தி எதிர்ப்புப் போராட்டத்தை உருவாக்கினார். அதன் விளைவாக 1967-இல் ஆட்சியை அமைத்தார்கள். பின்னர், இந்தத் தீய சக்திக்கு எதிராக எம்.ஜி.ஆர் 1977-இல் போராட்டங்களை நடத்தி ஆட்சியை உருவாக்கினார். திமுக என்பது ஒரு காலத்தில் எவ்வளவு அழகான ஒரு கட்சியாக இருந்தது ஆனால், கலைஞர் கருணாநிதி அவர்களுக்குப் பிறகு இன்று அது எப்படி ஆகிவிட்டது.என்றார்.
இன்று அந்த திமுக ஆட்சியில் ஸ்மார்ட் சிட்டி என்று அறிவித்தார்கள், ஆனால் அது வெறும் காகித அளவில் மட்டுமே இருக்கிறது. கோயம்புத்தூர் முழுவதும் சிறு, குறு விவசாயிகள், விசைத்தறித் தொழிலாளர்கள் இன்று தத்தளிக்கிறார்கள் என்றார். எத்தனை தொழிற்சாலைகள் இன்று மூடப்பட்டு வருகின்றன? ஜிஎஸ்டி (GST) ஒரு பக்கம் பாதிப்பை ஏற்படுத்தினாலும், மிக முக்கியமான பிரச்சனை என்னவென்றால், இந்த ஆட்சியில் மின்சாரக் கட்டணத்தை (எலக்ட்ரிசிட்டி) கிட்டத்தட்ட 34 சதவீதம் உயர்த்தி இருக்கிறார்கள் இதையெல்லாம் மறைத்துவிட்டு நம்மிடம் வந்து வாக்குக் கேட்கிறார்கள் எனறஅர். பிஜேபி தமிழகத்திற்குள் வரக்கூடாது என்ற ஒரே ஒரு காரணத்தைச் சொல்லி, மக்களை நம்ப வைத்து வெற்றி பெற்றுவிட்டார்கள். ஆனால், ஆட்சிக்கு வந்த பிறகு என்ன நிர்வாகத்தைக் கொடுத்தார்கள்? இந்த நான்கு ஆண்டுகளில் கோயம்புத்தூர் மாவட்டத்தில் என்ன மாற்றம் வந்திருக்கிறது என கேள்வி எழுப்பினார்.
கரூரில் இருந்து செந்தில் பாலாஜி போன்றவர்களைக் கொண்டு வந்து, உள்ளாட்சித் தேர்தலில் பூத் ஒன்றிற்கு 5000 ரூபாய் கொடுத்து ஜெயிப்பதெல்லாம் இனிமேல் நடக்காது. அதிமுக-வில் எடப்பாடி பழனிச்சாமி போன்ற ஒரு தலைமை இருக்கும் வரை நீங்கள் ஜெயித்துக் கொண்டிருந்தீர்கள். ஆனால், எப்போது எங்கள் தலைவர் விஜய் அவர்கள் கட்சியைத் தொடங்கினாரோ, எப்போது அவர் ஒவ்வொரு மாவட்டமாகச் சுற்றுப்பயணம் மேற்கொண்டாரோ, அப்போதே மக்கள் மத்தியில் பெரும் எழுச்சி உருவாகிவிட்டது என்றார்.
திருச்சியில் தொடங்கி நாமக்கல் வழியாக வந்து நாகப்பட்டினத்தில் பரப்புரை முடிக்கும்போது, திமுக ஒரு பெரிய பிரச்சனையை உருவாக்கியது. அந்தப் பிரச்சனையை அவர்கள் ஏன் உருவாக்கினார்கள் என்று உங்களுக்குத் தெரியுமா, என கரூரை குறிபிட்டு பேசிய அவர் திமுக ஒவ்வொரு வாரமும் திங்கட்கிழமை தமிழகம் முழுவதும் இரகசியமாகச் சர்வே எடுப்பார்கள். திருவாரூர் மாவட்டத்தில், கலைஞர் பிறந்த ஊரில் தலைவர் விஜய் மேற்கொண்ட சுற்றுப்பயணத்தைப் பார்த்த பிறகு அவர்கள் அதிர்ந்து போனார்கள். 3 கிலோமீட்டர் தூரத்தைக் கடக்க 3 மணிநேரம் ஆனது. கடந்த 50 ஆண்டுகளில் எந்த ஒரு தலைவருக்கும் இவ்வளவு பெரிய மக்கள் ஆதரவு இருந்ததில்லை என்றார்.
விஜயின் மக்கள் செல்வாக்கை எவ்விதமாவது உடைக்க வேண்டும், அவர் ஊர்களுக்குச் செல்லக்கூடாது என்று திமுக திட்டமிட்டு அவர் மாசத்திற்கு ஒரு முறைதான் வருவார், பத்து நாளைக்கு ஒரு முறைதான் வருவார்” என்று அவர்கள் பரப்பிய பொய்களைத் தகர்த்து, அந்த எழுச்சியை முடக்கத்தான் கரூரில் ஒரு சூழ்ச்சியைச் செய்தார்கள் என்றார். 41 பேரை அடக்கம் செய்யும் பொழுது, தமிழக வெற்றிக் கழகத்தையும் சேர்த்து அரசியல் ரீதியாக அடக்கம் செய்ய நினைத்தார்கள். ஆனால், தமிழக மக்களும், குறிப்பாகத் தமிழகப் பெண்களும் விஜய்க்கு அரணாக வந்து நின்றார்கள் என்றார்.
விரைவில் கட்சியிலிருந்து இதற்கான முறையான அறிக்கை வரும். பாண்டிச்சேரியிலும் ஈரோட்டிலும் மக்களைத் திரட்டியது போல, இனி வரும் கூட்டங்களிலும் மக்களைத் திரட்டுவோம். ஆனால், பொதுக்கூட்டப் பாதுகாப்பிற்கு முதலமைச்சரும் காவல்துறையும்தான் பொறுப்பு. கரூரைப் போல இன்னொரு சூழ்ச்சியை நீங்கள் உருவாக்கிவிடக் கூடாது என்றார்.
திமுக-வின் கூட்டணி என்பது 12 கட்சிகள் இருந்தாலும், அது ஒரு பொருந்தாத கூட்டணி. அவர்கள் ஏன் ஜெயிக்க மாட்டார்கள் தெரியுமா? அந்தந்தக் கட்சிகளின் தொண்டர்கள் கூட்டணியிலிருந்து வெளியே வந்துவிட்டார்கள். தலைவர்கள் மட்டுமே ஸ்டாலினைச் சுற்றி வருகிறார்கள் என விமர்சித்தார். திமுகவிற்கு ஏழைகளோ, தலித் சகோதரர்களோ அதிகாரத்திற்கு வருவது பிடிக்காது. கலைஞருக்குப் பிறகு ஸ்டாலின் 40 வருடம் உழைத்தார் என்று சொல்லி அவரை முதல்வர் ஆக்கினோம். ஆனால் இப்போது மீண்டும் ஒரு மகன், ஆட்சி நிர்வாகம் சுத்தமாக ஜீரோ ஆகிவிட்டது. இவர்கள் நம்மைப் பார்த்து அரசியல் மூதிர்ச்சி, அரசியல் கொள்கை இருக்கிறதா என கேட்கிறார்கள் என்றார்.
தேர்தலுக்கு மொத்தம் 60 நாட்கள் தான் இருக்கிறது. இனி நேரடிப் போட்டி என்பது திமுக மற்றும் டிவிகே (TVK) இடையேதான். தலைவர் சொல்லிவிட்டார், யார் அசிங்கமாகப் பேசினாலும் கவலைப்படாதீர்கள். அண்ணாவையும் எம்.ஜி.ஆரையும் கூட இப்படித்தான் பேசினார்கள் என்றார்.
தமிழ்நாட்டில் அதிமுக கூட்டணியின் தலைமை நான் என அமிஷா சொல்லிவிட்டார் என எடப்பாடி பழனிச்சாமி கூறுகிறார். இதற்காகத்தான் உங்களை திமுக விமர்சனம் செய்துகொண்டு இருக்கிறது.
முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா இருந்தபோது அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் எப்படிப்பட்ட கம்பீரமான கட்சியாக இருந்தது? ஆனால், இன்று அந்த நிலைமை எப்படி ஆகிவிட்டது என்று பாருங்கள் என கூறிய அவர் அதிமுக கூட்டணியில் இருக்கக்கூடிய கட்சிகள் எல்லாம் இன்று டெல்லிக்குச் சென்று பாரதிய ஜனதா கட்சியோடு கைகோர்க்கிறார்கள். உண்மையில், பாஜகதான் இந்தத் தமிழகக் கூட்டணியை உருவாக்கிக் கொண்டிருக்கிறது. இதனை எடப்பாடி பழனிசாமி அவர்களோ அல்லது அதிமுகவோ உருவாக்கவில்லை.
நிலைமை இப்படி இருக்கும் பொழுது, எப்படி இ.பி.எஸ் அவர்கள் இந்தக் கூட்டணிக்குத் தலைமை என்று சொல்ல முடியும்? ஒரு கூட்டணியைத் தன்னிச்சையாக உருவாக்கவே முடியாத பொழுது, நீங்கள் எப்படி அதற்குத் தலைமை என்று மார்தட்டிக்கொள்ள முடியும்? என கேள்வி எழுப்பினார்.அதிமக கூட்டணியில் அங்கம் வகிக்கும் கட்சிகள் எல்லாம் நேராக பாஜகவிடம் சென்று, அங்கே அமர்ந்து பேரம் பேசிவிட்டு, அங்கிருந்து உத்தரவுகளைப் பெற்று வருகிறார்கள். உங்களை முதலமைச்சர் வேட்பாளர் என்று சொல்வதற்குக் கூட அவர்களுக்கு வாய் வரமாட்டேன் என்கிறது. நிலைமை இவ்வளவு மோசமாக இருக்கும் பொழுது, இந்த அதிமுக கூட்டணியைத் தமிழக மக்கள் எப்படி நம்புவார்கள்? என்றார்
அதிமுக கூட்டணிக் கட்சிகள் யாவும் டெல்லிக்குச் சென்று பியூஷ் கோயல் வீட்டிற்குத்தான் முதலில் செல்கிறார்கள். அண்ணன் அன்புமணி அவர்கள் யாரை முதலில் போய்ப் பார்த்தார்? பியூஷ் கோயல் அவர்களைத்தான் பார்த்தார். அண்ணன் டி.டி.வி. தினகரன் அவர்கள் யாரை முதலில் போய்ப் பார்த்தார்? அவரும் பியூஷ் கோயல் அவர்களைத்தான் பார்த்தார். இப்படி ஒவ்வொருவராக டெல்லிக்குக் காவடி தூக்கும்போது, இந்தக் கூட்டணியை யார் உருவாக்கியது? அதிமுகவா? என கேள்வி எழுப்பினார். நமது தற்போதைய வியூகம் மிகவும் தெளிவானது. திமுகவை இந்த ஆட்சியிலிருந்து தூக்கி எறிய வேண்டும்.
தேர்தல் நேரத்தில் 1000 ரூபாய் கொடுப்பார்கள். செந்தில் பாலாஜி போன்றவர்கள் ஓட்டுக்கு 2000 ரூபாய் கொடுப்பார்கள். ஆனால், பெண்களுக்கு ஆயிரம் ரூபாய் உரிமைத் தொகை வங்கிக் கணக்கில் வரவு வைக்கப்பட்ட அடுத்த வினாடியே, அது டாஸ்மாக் கடைக்குச் சென்றுவிடுகிறது. திமுக ஆட்சிக்கு வரும்போது டாஸ்மாக் விற்பனை 25,000 கோடியாக இருந்தது, இன்று அது 60,000 கோடியை நோக்கிச் சென்று கொண்டிருக்கிறது. திமுக கூட்டணியில் இன்று ஒருமைப்பாடு இல்லை. காங்கிரஸ் கட்சியை சுத்தமாக மதிக்கவே இல்லை.
கிரீஷ் சோடங்கர் என்ற பொறுப்பாளர் “ஆட்சியிலும் பங்கு, அதிகாரத்திலும் பங்கு” என்று கேட்டார். உடனே திமுக தலைமை அவரையே மாற்றச் சொல்லி அழுத்தம் கொடுத்தது என்றார். உதயநிதி நம்மைக் கொள்கை இல்லாத கூட்டம் என்கிறார். அவர் ஏதோ லொல்லு சபா நடத்துவது போல நம்மைக் கிண்டல் செய்கிறார். எங்கள் தலைவர் நடிப்புத் தொழிலை விட்டுவிட்டு மக்களுக்காக ஓடி வந்துவிட்டார். ஆனால், இவர்கள்தான் அரசியலில் இன்று நடித்துக் கொண்டிருக்கிறார்கள் என்றார்.திமுக இரண்டாவது முறை தேர்தலைச் சந்தித்தபோது ஒருபோதும் வென்றதில்லை. அன்று எம்.ஜி.ஆர் வந்தார், இன்று விஜய் வந்துவிட்டார் என்றார்.
பின்னர் பேசிய தமிழக வெற்றிக் கழக பொதுச்செயலாளர் என். ஆனந்த், நம் தலைவர் தமிழகத்தின் முதலமைச்சராகப் பொறுப்பேற்றவுடன், இந்த மக்கள் சந்திக்கும் அனைத்துப் பிரச்சனைகளும் போர்க்கால அடிப்படையில் தீர்த்து வைக்கப்படும். அதற்கு இன்னும் அதிக காலம் தேவையில்லை; இன்னும் 70 முதல் 75 நாட்களில் அது நடக்கும். தமிழக மக்கள் படும் துயரங்கள் நீங்கும் என்பதில் எந்தவிதச் சந்தேகமும் இல்லை என்றார்.
இந்திய அரசியல் வரலாற்றிலேயே ஒரு அதிசயம் இங்கு நடந்திருக்கிறது. வெறும் ஒன்றரை மணி நேரம் முதல் இரண்டு மணி நேரத்திற்குள்ளாகவே, சுமார் 10,000 விருப்ப மனுக்கள் ஒரு கட்சியில் பெறப்பட்டது என்று சொன்னால், அது நம் தமிழக வெற்றி கழகத்தால் மட்டும்தான் சாத்தியம். விருப்ப மனு வாங்குவதற்கே இவ்வளவு பெரிய எழுச்சி என்றால், தேர்தலைச் சந்திக்கும்போது எப்படி இருக்கும் என்று நீங்களே சிந்தித்துப் பாருங்கள் என்றார்.
தமிழக மக்கள் கடந்த காலங்களில் ஆண்ட இரண்டு பெரிய கட்சிகளையும் பார்த்துவிட்டார்கள். மக்கள் இப்போது ஒரு உன்னதமான, நேர்மையான, இளமைத் துடிப்புள்ள தலைவரைத் தேடுகிறார்கள். அந்தத் தலைவர் வேறு யாருமல்ல, அவர்தான் நம் விஜய் என்றார்.கோவை மாவட்டத்தின் சிறுவாணி நீருக்கு ஒரு தனிச் சுவை உண்டு என்பது உலகறிந்த விஷயம். அதேபோல், இந்த கோவை மண்ணின் அரசியலுக்கும் எப்போதும் ஒரு தனித் தனித்துவமும் சக்தியும் உண்டு. அந்தச் சக்தியை இன்னும் பலமாக்கி, தமிழகத்தின் அரசியலைச் சீரமைக்கத்தான் இன்று கோட்டையை நோக்கிப் புறப்பட்டிருக்கிறார் விஜய் என்றார்.
நாம் அடுத்த தலைமுறையின் வாழ்வாதாரத்திற்காகவும், அவர்களின் எதிர்காலத்திற்காகவும் களம் இறங்குகிறோம். இங்கே கூடியிருக்கும் இந்த மக்கள் எழுச்சிதான் தமிழகத்தின் தலையெழுத்தை மாற்றப் போகிறது என்றார்.
கோவை மண்டலம் என்பது தமிழக அரசியலில் கோட்டையின் சாவி போன்றது என்றும் அந்தச் சாவியைச் சரியான தலைமையிடம் ஒப்படைக்க வேண்டிய நேரம் நெருங்கிவிட்டது என்று தெரிவித்தார்
பதவிக்காக யாரிடமும் அடிபணிந்து செல்பவர் அல்ல நம் தலைவர். அவர் மக்களுக்காகச் சிந்திப்பவர். பதவி அவரைத் தேடி வர வேண்டும் என்று நினைப்பவர் என்றார். பல இடங்களில் நம் கொடிப் பறக்கும் போது மற்ற கட்சிக்காரர்களுக்கு வயிற்றெரிச்சல் ஏற்படுகிறது என்றும் எல்லா கொடிகளும் ஒரே உயரத்தில் இருக்கும்போது, நம் கொடி மட்டும் இரண்டு அடி உயரத்தில் பறப்பதைப் பார்த்துப் பொறுக்க முடியாமல் அதை அகற்ற 40, 50 பேர் திரண்டு வந்திருக்கிறார்கள் என்றார்.
கூட்டணி குறித்து நீங்கள் கவலைப்பட வேண்டாம். அந்தக் கூட்டணியில் 10 பேர் இருக்கிறார்கள், இந்தக் கூட்டணியில் 15 பேர் இருக்கிறார்கள் என்று பேசுவதைக் கண்டு பயப்படத் தேவையில்லை. நீங்கள் தனியாக, சிங்கிளாக, நம் தலைவரின் விசில் சின்னத்தைப் பதித்த துண்டைப் போட்டுக்கொண்டு நின்றால், நீங்கள் 500 பேருக்குச் சமம் என்றார்.
விசில் சின்னம் என்பது இன்று உலகம் முழுவதும் மிகக் குறுகிய காலத்தில் பிரபலமான ஒரு சின்னம். சேப்பாக்கத்தில் விசில் ஊதத் தடை போட்டார்கள் என்று ராஜ்மோகன் சொன்னார். எந்தத் தடை போட்டாலும் விசிலை ஒன்னும் செய்ய முடியாது. 5000 ரூபாய் கொடுத்தாலும் சரி, 10,000 ரூபாய் கொடுத்தாலும் சரி, ஒரு ஐந்து ரூபாய் விசிலுக்கு இருக்கும் சக்தி அந்தப் பணத்திற்கு இருக்காது. ஏனெனில் விசில் என்பது நம் தலைவரின் வெற்றிச் சின்னம் என்றார்
2026-ல் கோயம்புத்தூரில் உள்ள அனைத்துச் சட்டமன்றத் தொகுதிகளும் தமிழக வெற்றி கழகத்தின் கோட்டையாக மாறும். குறிப்பாகக் கொங்கு மண்டலம் முழுவதும் நமது வெற்றிக் கொடி பறக்கும். நாம் இதுவரை உழைத்தது ஒரு பக்கம் இருக்கட்டும், இன்னும் மீதமிருக்கும் சில மாதங்கள் கடுமையாக உழைக்க வேண்டும் என்றார்.

