கோவை: கோவை மாநகராட்சியில் 106 கோடி ரூபாய் மதிப்பில் சாலைகளை சீரமைக்கும் பணிகள் தொடங்கப்பட்டுள்ளது.
தமிழ்நாடு முதலமைச்சர் வழிகாட்டுதலின்படி, கோயம்புத்தூர் மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் ரூ.106.55 கோடி மதிப்பீட்டில் 1,847 சாலைகக்லை சுமார் 255.30 கி.மீட்டர் நீளத்திற்கு சீரமைக்கும் பணிகளை மாவட்ட ஆட்சித்தலைவர் பவன்குமார் தொடங்கி வைத்தார்.
மாநகராட்சி மத்திய மண்டலம் வார்டு எண்.83-க்குட்பட்ட ஆடிஸ் வீதி பகுதியில் நடைபெற்ற நிகழ்ச்சியில், கோயம்புத்தூர் மாநகராட்சிக்கு உட்பட்ட கிழக்கு, மேற்கு, வடக்கு, தெற்கு மற்றும் மத்தியம் ஆகிய ஐந்து மண்டலங்களுக்குட்பட்ட பகுதிகளில் ரூ.106.55 கோடி மதிப்பீட்டில் 1,847 எண்ணிக்கையிலான சாலைகள் சுமார் 255.30 கி.மீட்டர் நீளத்திற்கு சீரமைக்கும் பணிகளை மேயர் ரங்கநாயகி மற்றும் மாநகராட்சி ஆணையாளர் சிவகுரு பிரபாகரன் முன்னிலையில் மாவட்ட ஆட்சித்தலைவர் துவக்கி வைத்து கூறியதாவது:-
தமிழ்நாடு முதலமைச்சர் வழிகாட்டுதலின்படி, கோயம்புத்தூர் மாநகராட்சிக்குட்பட்ட கிழக்கு, மேற்கு, வடக்கு, தெற்கு மற்றும் மத்தியம் ஆகிய மண்டலங்களுக்குட்பட்ட வார்டு பகுதிகளில் பொதுமக்கள் பயன்பெறும் வகையில் பல்வேறு வளர்ச்சித் திட்டப்பணிகள் சிறப்புடன் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
குறிப்பாக தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள், கோயம்புத்தூர் மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் அமைந்துள்ள 3456 எண்ணிக்கையிலான சுமார் 503.67 கிமீட்டர் நீளத்திற்கு மண் சாலைகள் மற்றும் பழுதடைந்த சாலைகளை புதுப்பிக்கும் வகையில் ரூ.200 கோடியினை ஒதுக்கி தந்துள்ளதைத் தொடர்ந்து, சுமார் 3367 பணிகள் 487.91 கிமீட்டர் நீளத்திற்கு முடிக்கப்பட்டு, மீதமுள்ள 89 எண்ணிக்கையிலான சாலைகள் 16.83 கிமீட்டர் நீளத்திற்கு நடைபெற்று வருகிறது.
மேலும், இப்பணிகள் விரைவில் முடிக்கும் வகையில் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. கோயம்புத்தூர் மாநகராட்சிக்குட்பட்ட தெற்கு மண்டலத்தில் ரூ.18,09 கோடி மதிப்பீட்டில், சுமார் 44.41 கிமீட்டர் நீளத்திற்கு 383 எண்ணிக்கையிலான பணிகளும், கிழக்கு மண்டலத்தில் ரூ.23.07 கோடி மதிப்பீட்டில்சுமார் 55.17 கி.மீட்டர் நீளத்திற்கு 307 எண்ணிக்கையிலான பணிகளும், மேற்கு மண்டலத்தில் ரூ.27.26 கோடி மதிப்பீட்டில், சுமார் 60.06 கிமீட்டர் நீளத்திற்கு 468 எண்ணிக்கையிலான பணிகளும்
வடக்கு மண்டலத்தில், ரூ.24.00 கோடி மதிப்பீட்டில், சுமார் 6248 கிமீட்டர் நீளத்திற்கு 458 எண்ணிக்கையிலான பணிகளும் மற்றும் மத்திய மண்டலத்தில் ரூ.13.05 கோடி மதிப்பீட்டில் சுமார் 33.18 கி.மீட்டர் நீளத்திற்கு 241 எண்ணிக்கையிலான பணிகளும் என மொத்தம் 1847 எண்ணிக்கையிலான சாலைகள் 255.30 கிமீட்டர் நீளத்திற்கு, ரூ.106.55 கோடி மதிப்பீட்டில், தார்சாலைகள் மற்றும் சிமெண்ட் சாலைகளை புதுப்பிக்க ஒதுக்கீடு செய்யப்பட்டு, இன்றைய தினம் சாலைகள் சீரமைக்கும் பணிகள் தொடங்கப்பட்டுள்ளது.
மேலும், அனைத்து சாலை சீரமைக்கும் பணிகளும் பொதுமக்கள் பயன்பெறும் வகையில் விரைவாக முடிக்கப்படும். என்றார்
இந்நிகழ்ச்சியில், துணை மேயர் வெற்றிசெல்வன், தலைமைப் பொறியாளர் விஜயகுமார், மற்றும் மாநகராட்சி அலுவலர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

