Coimbatore Crime: கோவையில் முதியவரிடம் உதவுவதுபோல் நடித்து ரூ.45 ஆயிரம் மோசடி செய்த மர்ம நபர் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
பேரூர் அருகே உள்ள சின்னகோயில் வீதியை சேர்ந்தவர் சிவக்குமார். தனியார் நிறுவன ஊழியர். இவர் நேற்று முன்தினம் டவுன்ஹால் பகுதியில் சென்று கொண்டு இருந்தார்.
அப்போது தனது தாயாரின் ஏ.டி.எம். கார்டு மூலம் பணம் எடுப்பதற்காக பிபி வீதியில் உள்ள ஏ.டி.எம். மையத்திற்கு சென்றார். அங்கு உள்ளே சென்று கார்டை எந்திரத்தில் விட்டு பணத்தை எடுக்க முயற்சி செய்தார். ஆனால் பணம் வரவில்லை.
உதவுவது போல் நடிப்பு
பல முறை முயற்சி செய்து பணம் வராததால் சிவக்குமார் குழம்பி நின்றார். இதனைப் பார்த்து கொண்டு இருந்த மர்ம நபர் ஒருவர், சிவகுமாரிடம் தான் பணம் எடுத்து தருவதாக கார்டை வாங்கினார். அந்த நபர் சிவக்குமாரிடம் கார்டின் பின் நம்பரை வாங்கி பணத்தை எடுப்பது போல செய்தார்.
பின்னர் ஏதோ பிரச்னை என்று கூறி பணம் வரவில்லை என்று சிவகுமாரிடம் ஏ.டி.எம். கார்டை திருப்பிக் கொடுத்தார். சிவகுமாரும் அதைப் பெற்றுக் கொண்டு வீட்டிற்கு சென்று விட்டார்.
அப்போது அவரது தாயாரின் செல்போனை எடுத்து பார்த்த போது வங்கி கணக்கில் இருந்து ரூ.45 ஆயிரம் எடுக்கப்பட்டதாக மெசேஜ் வந்திருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.
உடனே தன்னிடம் இருந்த ஏ.டி.எம். கார்டை எடுத்து சிவக்குமார் பார்த்தார். அதில், அந்த கார்டு போலி கார்டு என்பதும், தன்னிடம் இருந்த கார்டை மாற்றி அந்த மர்ம நபர் எடுத்து சென்று பணத்தை திருடியதும் சிவக்குமாருக்கு தெரியவந்தது.
மோசடி புகார்
இதுகுறித்து பெரிய கடை வீதி போலீசில் புகார் அளித்தார். புகாரின் பேரில் போலீசார் வழக்குப் பதிவு செய்து ஏ.டி.எம். மையத்தில் சிவக்குமாரிடம் உதவுவது போல் நடித்து பணத்தை திருடி சென்ற நபர் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
தொடர்ந்து போலீசார் எ.டி.எம் மையத்தில் பொருத்தப்பட்டுள்ள சிசிடிவி கேமிராவில் பதிவான மர்ம நபரின் உருவத்தை வைத்து அவரை தேடி வருகின்றனர்.

