சந்திர கிரகணம் 2026: நடப்பு ஆண்டின் முதல் சந்திர கிரகணம் மார்ச் 3ம் தேதி நிகழ உள்ளது. இந்த நாளில் ரத்த நிலவு தோன்ற உள்ளது.
சந்திர-சூரிய கிரகணங்கள் வேறுபாடு
சந்திர கிரகணம் என்பது சூரியன், பூமி மற்றும் சந்திரன் ஒரே நேர்க்கோட்டில் வரும்போது ஏற்படும் ஒரு இயற்கை வானியல் நிகழ்வு. அதாவது, சூரியனுக்கும் சந்திரனுக்கும் இடையே பூமி ஒரே நேர்க்கோட்டில் வருவதை சந்திர கிரகணம் என்கின்றனர்.
சூரிய கிரகணம் என்பது சூரியனுக்கும், பூமிக்கும் இடையே சந்திரன் தோன்றும் நிகழ்வு. சந்திரன் சூரியனை மறைத்து சூரியக் கதிர்களை பூமி மீது விழாமல் தடுக்கும்போது ஏற்படும் வானியல் நிகழ்வு இது.
இதில் சூரிய கிரகணம் கடந்த பிப்ரவரி 17ம் தேதி நிகழ்ந்தது. ஆனால், இது இந்தியாவில் தென்படவில்லை. இதனிடையே சந்திர கிரகணம் மார்ச் மாதம் நிகழ உள்ளது.

சந்திர கிரகணம் 2026
நடப்பு ஆண்டின் முதல் சந்திர கிரகணம் மார்ச் 3ம் தேதி நடைபெற உள்ளதாக வானியல் ஆர்வலர்கள் தெரிவித்துள்ளனர். அதன்படி, மார்ச் 3ம் தேதி இந்திய நேரப்படி மாலை 4.45 மணிக்கு சந்திர கிரகணம் தொடங்குகிறது; பூமியில் இருந்து மாலை 5.10 மணிக்கு சந்திரன் முழு நிலவாகத் தென்படும்.
அதன்பின்னர், மாலை 5.40க்குள் சந்திர கிரகணம் முடிவடையும் என்று கூறப்பட்டுள்ளது. பௌர்ணமி நாளில் ஏற்படும் இந்த முழு சந்திர கிரகண நிகழ்வின் போது, பூமியின் நிழல் நிலவின் மீது விழும்போது நிலவு அடர் சிவப்பு நிறத்தில் தென்படும்.
Blood Moon
இந்த அரிய வானியல் நிகழ்வை Blood Moon என்று அழைக்கின்றனர். பூமியின் நிழல் முழுவதும் சந்திரனை மறைத்தால் அதை முழு சந்திர கிரகணம் என்று கூறுவார்கள். பகுதி மட்டும் மறைந்தால் அது பகுதி சந்திர கிரகணம் ஆகும்.

இந்த நிகழ்வு நடைபெறும் போது, சந்திரன் தென்படும் வான்பகுதியும் வெளிர் சிவப்பு மற்றும் ஆரஞ்சு வண்ணத்தில் பார்ப்பதற்கு ரம்யமாக இருக்கும்.
சந்திர கிரகணம் பார்க்கலாமா?
சந்திர கிரகணத்தை வெறும் கண்களால் கூட பார்க்கலாம். கண்களுக்கு எந்த பாதிப்பும் இல்லை. சூரிய கிரகணத்தைப் போல பாதுகாப்புக் கண்ணாடி தேவையில்லை. இது ஒரு சாதாரண வானியல் நிகழ்வு என்பதால் அச்சப்பட வேண்டாம் என்று விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.
பண்டைய காலங்களில் கிரகணங்களைப் பற்றி பல நம்பிக்கைகள் இருந்தாலும், இன்றைய விஞ்ஞானம் இதன் காரணத்தை தெளிவாக விளக்கி உள்ளது. பள்ளி மாணவர்கள் இந்த நிகழ்வை அறிவியல் ஆர்வத்துடன் கவனித்து பார்க்கலாம் என ஆசிரியர்களும் கூறுகின்றனர்.
சந்திர கிரகணம் ஐதீகம்
பொதுவாக கிரகண நேரத்தில் வெளியில் செல்லக்கூடாது என்று பெரியவர்கள் கூறுவார்கள். மேலும், கிரகண நேரத்தில் வீட்டில் இருப்பவர்கள் அமைதியாக பிரார்த்தனை செய்யலாம். சிலர் மந்திரம் ஜபிப்பதும், தியானம் செய்வதையும் கடைபிடிக்கின்றனர்.

சந்திர கிரகணம் குறித்து கர்ப்பிணிகள் தேவையற்ற பயத்தை தவிர்த்து, அமைதியாக ஓய்வெடுக்கலாம். கிரகண நேரத்தில் உணவு சமைப்பதை தவிர்ப்பது நல்லது என்ற நம்பிக்கை நாடு முழுவதும் உள்ளது.
சிலர் கிரகணத்திற்கு முன் சமைத்த உணவில் துளசி இலை அல்லது அருகம்புல் வைத்து பாதுகாக்கும் பழக்கத்தையும் பின்பற்றி வருகின்றனர். மேலும், கிரகணம் முடிந்த பின் குளித்து வழிபாடு செய்யும் முறையும் பின்பற்றப்படுகிறது.
பயப்பட வேண்டாம்
சந்திர கிரகணம் குறித்த நம்பிக்கைகளை விட அறிவியல் பூர்வமாக அணுக வேண்டும் என்றும், இதுகுறித்து பொதுமக்கள் அச்சப்படத் தேவையில்லை என்றும் வானியல் ஆய்வாளர்கள் அறிவுறுத்துகின்றனர். எனவே பயப்படாமல் இந்த சந்திர கிரகண நிகழ்வை கண்டுகளிக்கலாம் மக்களே.
இந்த பயனுள்ள செய்தியை உங்கள் உறவுகளுடன் பகிர்ந்திடுங்கள்…

