Coimbatore news today: கோவையின் முக்கிய அடையாளங்களில் ஒன்றான உக்கடம் வாலாங்குளம் பகுதியில் இன்று காலை அடையாளம் தெரியாத ஆண் ஒருவரின் சடலம் கண்டெடுக்கப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
உக்கடம் வாலாங்குளத்தின் ஒரு பகுதியில் ஆண் ஒருவரின் உடல் மிதப்பதைக் பொதுமக்கள் கண்டு அதிர்ச்சி அடைந்தனர். உடனடியாக இது குறித்து உக்கடம் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். சம்பவ இடத்திற்கு வந்த போலீசார், தீயணைப்புத் துறையினரின் உதவியுடன் சடலத்தை மீட்டு கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
உயிரிழந்த நபருக்கு சுமார் 40 முதல் 45 வயது இருக்கலாம் எனக் கூறப்படுகிறது. அவர் யார்? எந்த ஊரைச் சேர்ந்தவர்? என்பது குறித்துப் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
காணாமல் போனவர்கள் குறித்த புகார்களை வைத்து அடையாளம் காணும் பணி நடந்து வருகிறது.
குடும்பப் பிரச்னை அல்லது மன உளைச்சல் காரணமாக அவர் குளத்தில் குதித்துத் தற்கொலை செய்து கொண்டாரா? அல்லது யாரேனும் மர்ம நபர்கள் அவரை அடித்துக் கொலை செய்து குளத்தில் வீசிச் சென்றனரா? அல்லது தவறி விழுந்து உயிரிழந்தாரா? என்ற கோணத்தில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
சம்பவம் நடந்த அந்த பகுதியில் உள்ள சி.சி.டி.வி. கேமரா காட்சிகளை ஆய்வு செய்து வழக்குப் பதிந்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

