கோவை: கோனியம்மன் தேரோட்ட நிகழ்வில் லட்சக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு தேரை வடம்பிடித்து இழுத்தனர்.
கோவையின் காவல் தெய்வமாக விளங்கி வரும் கோனியம்மன் கோயில் தேரோட்டம் இன்று வெகு விமர்சையாக நடைபெற்றது. கடந்த 24ஆம் தேதி கொடியேற்றம் நடைபெற்று, அதனைத் தொடர்ந்து ஒவ்வொரு நாளும் கோனியம்மனுக்கு சிறப்பு அலங்காரங்கள் செய்யப்பட்டு பூஜைகள் நடைபெற்றன.
அதனைத் தொடர்ந்து முக்கிய நிகழ்வான தேரோட்ட நிகழ்வு இன்றைய தினம் நடைபெற்றது. திருத்தேரானது ராஜவீதி தேர்நிலைத் திடலில் இருந்து புறப்பட்டு ராஜவீதி, ஒப்பணக்கார வீதி, பிரகாசம் வழியாக மீண்டும் தேர் நிலைத்திடலை சென்றடையும்.
ஓம் சக்தி

இந்த தேரோட்ட நிகழ்வில் கோவை மட்டுமின்றி பல்வேறு மாவட்டங்களில் இருந்து பக்தர்கள் திரளாக வருகை புரிந்து தேரோட்ட நிகழ்வை கண்டு களித்து வருகின்றனர். நூற்றுக்கணக்கான பக்தர்கள் தேரை வடம் பிடித்து இழுத்து, “ஓம் சக்தி பராசக்தி என்ற பக்தி” முழக்கத்துடன் ஆர்ப்பரித்து வருகின்றனர்.
மேலும் தேரோட்டத்தைக் காண வந்த பக்தர்கள் தேரின் மீது உப்பு வீசி அவர்களது வேண்டுதலை வேண்டி கொண்டனர். தேரோட்ட நிகழ்வை முன்னிட்டு இப்பகுதியில் சுமார் 500க்கும் மேற்பட்ட காவல்துறையினர் பாதுகாப்பு பணிகளை மேற்கொண்டனர்.
மேலும் இப்பகுதியில் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது. இந்த நிகழ்வில் பல்வேறு தன்னார்வலர்களும், நிறுவனத்தாரும் பக்தர்களுக்கு அன்னதானம் குடிநீர் குளிர்பானங்கள் ஆகியவற்றை வழங்கினர்.



