கோவை: கோவையில் சட்டமன்ற தேர்தல் பாதுகாப்பு மற்றும் கண்காணிப்பு நடவடிக்கைகள் தீவிரமடைந்துள்ள நிலையில், பொதுமக்கள் புகார் அளிக்க மாநகர் மற்றும் மாவட்ட போலீஸ் சார்பில் தேர்தல் பிரிவு கட்டுப்பாட்டு அறைகள் தொடங்கப்பட்டுள்ளன.
தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் ஏப்ரல் 23ஆம் தேதி நடைபெற உள்ளது. கோவை மாவட்டத்தில் 10 சட்டமன்ற தொகுதிகள் உள்ளன. இதில், கோவை மாநகர காவல் எல்லைக்குட்பட்ட 333 பகுதிகளில் 1,775 வாக்குச்சாவடிகள் உள்ளன.
அந்த வாக்குச்சாவடிகளில் 46 வாக்குச்சாவடிகள் பதற்றமானவையாகவும், 6-க்கும் மேற்பட்ட வாக்கு மையங்கள் கொண்ட 78 வாக்குச்சாவடிகளும் கண்டறியப்பட்டுள்ளன.
கோவையில் பறக்கும்படை அதிகாரிகள் தீவிர சோதனை Read News..!
அதேபோல், கோவை மாவட்ட போலீஸ் எல்லைக்குட்பட்ட 2,046 வாக்குச்சாவடிகளில் 107 வாக்குச்சாவடிகள் பதற்றமானவையாக கண்டறியப்பட்டுள்ளன.
பதற்றமான மற்றும் சாதாரண வாக்குச்சாவடிகள் என தனித்தனியாக வகைப்படுத்தப்பட்டுள்ளன. பதற்றமான வாக்குச்சாவடிகளில் தேர்தல் நாளன்று துப்பாக்கி ஏந்திய துணை ராணுவத்தினர் மற்றும் போலீசார் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்படுவார்கள். சாதாரண வாக்குச்சாவடிகளில் போலீசார் மற்றும் ஊர்க்காவல் படையினர் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுவார்கள்.
இந்த நிலையில், போலீசார் சார்பில் தேர்தல் பிரிவு கட்டுப்பாட்டு அறை தொடங்கப்பட்டுள்ளது. இதில் 1 உதவி கமிஷனர், 1 இன்ஸ்பெக்டர், 1 எஸ்.ஐ., 1 சிறப்பு எஸ்.ஐ. உள்ளிட்ட 10 போலீசார் பணியில் ஈடுபட்டுள்ளனர்.
மேலும், கோவை மாநகர காவல் கட்டுப்பாட்டு அறைக்கு 0422-2305758 என்ற தொலைபேசி எண் வழங்கப்பட்டுள்ளது.
கோவையில் சொகுசு காரில் பிடிபட்ட வெளிநாட்டு மதுபானங்கள்- தேர்தல் பறக்கும் படை அதிரடி… Click Here to Read News
இந்த எண்ணில் பொதுமக்கள் தேர்தல் தொடர்பான புகார்கள், பரிசுப் பொருட்கள் விநியோகம், பணம் விநியோகம் உள்ளிட்ட குற்றச்சாட்டுகள் குறித்து புகார் அளிக்கலாம்.
அதேபோல், புறநகர் பகுதிகளைச் சேர்ந்த மக்கள் புகார் அளிக்க கோவை மாவட்ட போலீசார் 95000 82767 என்ற எண்ணையும் வெளியிட்டுள்ளனர்.

