கோவை: வரத்து குறைவால் கோவையில் மீன்கள் விலை கிடு கிடுவென உயர்ந்துள்ளது.
உக்கடம் லாரிப்பேட்டை பகுதியில் உள்ள மொத்த மீன் மார்க்கெட் செயல்பட்டு வருகிறது. இந்த மார்க்கெட்டிற்கு தூத்துக்குடி, ராமேஸ்வரம், நாகப்பட்டினம் உள்ளிட்ட மாவட்டங்களில் இருந்தும், கேரளா, கர்நாடகா மாநிலங்களில் இருந்தும் மீன்கள் வருகிறது.
ஒவ்வொரு நாளும் காலை செயல்படும் இந்த மொத்த மீன் மார்க்கெட்டிற்கு கோவை மாநகர் மற்றும் புறநகரில் உள்ள மீன் வியாபாரிகள் வந்து மீன்களை வாங்கிச் செல்கின்றனர்.
Read also தொழுகைக்கு சென்ற சிறுவன் பலி! கோவையில் சோகம்
மேலும், மீன் விலை குறைவாக கிடைக்கும் என்பதால் பல்வேறு பகுதிகளில் இருந்தும் பொதுமக்களும் இங்கு மீன் வாங்க வருகின்றனர்.
இந்த நிலையில் தமிழக, கேரளாவில் இருந்து வரக்கூடிய மீன்களின் வரத்து தற்போது குறைந்துள்ளது. மேலும், ரம்ஜான் முடிந்து முதல் ஞாயிற்றுக்கிழமை என்பதாலும் நேற்று வழக்கத்தை விட மீன் மார்க்கெட்டில் கூட்டம் அதிகரித்து காணப்பட்டது.
வரத்து குறைவு, கூட்டம் அதிகரிப்பு உள்ளிட்ட காரணங்களால் இந்த மீன் மார்க்கெட்டில், மீன்கள் விலை அதிகரித்து இருந்தது.
மீன் விலை

அதன்படி, நேற்று வஞ்சிரம் கிலோவிற்கு ரூ.900, சின்ன ஊழி ரூ.400, அயிலை ரூ.300, மத்தி ரூ.300, இறால் ரூ.550, அயிலை ரூ.300, கிளி மீன் ரூ.500, விலை மீன் ரூ.300, திருக்கை ரூ.250, கொடுவாய் ரூ.600, கண்ணாடி பாறை ரூ.130 என விற்பனையானது.
Read also கோவையில் குடியிருப்பு பகுதியில் கஞ்சா செடி- வட மாநில தொழிலாளர்களிடம் விசாரணை…
இதுகுறித்து பொதுமக்கள் கூறுகையில், “வழக்கமாக வாங்கும் விலையை விட மீன்கள் விலை அதிகரித்துள்ளது. இது தவிர கிலோவிற்கு ரூ.20 முதல் ரூ.30 வரை சுத்திகரிப்புக் கட்டணமும் செலுத்த வேண்டி உள்ளது. இதனால் ஏமாற்றமே மிஞ்சியது” என்றனர்.
இதுகுறித்து வியாபாரிகள் கூறுகையில், “கேரளாவில் இருந்து வரும் மீன்கள் குறைவாக உள்ளது. வரத்து குறைந்துள்ளதால் மட்டுமே விலை அதிகரித்துள்ளது. ஒரு சில வாரங்களில் மீன்கள் விலை கணிசமாகக் குறைய வாய்ப்புள்ளது” என்றனர்.

