கோவை: கோவை சிவா டெக்ஸ்டைல் கடையில் வருமான வரித்துறையினர் சோதனை மேற்கொண்டுள்ளனர்.
கோவையில் செயல்பட்டு வரும் சிவா டெக்ஸ்டைல்ஸ் நிறுவனத்தில், வரி ஏய்ப்பு புகார் தொடர்பாக வருமான வரித்துறையினர் ஆய்வு மேற்கொண்டுள்ளனர்.
கரூரை தலைமையிடமாக கொண்டு செயல்பட்டு வரும் சிவா டெக்ஸ்டைல்ஸ் நிறுவனத்திற்கு, கோவை, நீலகிரி, திருப்பூர் உள்ளிட்ட பகுதிகளில் கிளைகள் செயல்பட்டு வருகிறது.
கோவை காந்திபுரம் பகுதியில் உள்ள இந்த நிறுவனத்தின் கடையில், உணவகம் உள்ளிட்ட கடைகளும் இயங்கி வருகிறது. இந்நிறுவனத்தின் உரிமையாளர் சிவகுமார் மீது கடந்த 2022ம் ஆண்டு வருமான வரி ஏய்ப்பு குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டது.
இதையடுத்து, அந்நிறுவனத்திற்கு சொந்தமான கிளைகளில் வருமான வரித்துறையினர் சோதனை மேற்கொண்டனர். இந்நிலையில், கோவை காந்திபுரத்தில் உள்ள சிவா டெக்ஸ்டைல்ஸ் நிறுவனத்திற்கு வருகை தந்த வருமானவரித்துறை அதிகாரிகள் கொண்ட குழுவினர் அதிரடியாக சோதனை நடத்தி வருகின்றனர்.
இதையடுத்து கடையில் இருந்த வாடிக்கையாளர்களை வெளியேற்றிவிட்டு, கடையின் ஷட்டர்களை சாத்திவிட்டு, அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.

