கோவை: ஆசியன் பேட்மின்டன் சாம்பியன்ஷிப் போட்டிக்கு தேர்வாகியுள்ள கோவை வெங்கீஸ் பயிற்சி மைய மாணவி அனு ஸ்ரீ, இந்தியாவிற்காக பதக்கங்கள் வெல்வதே இலக்கு என்று உறுதியுடன் தெரிவித்துள்ளார்.
சேலம் மாவட்டத்தைச் சேர்ந்த 10-ம் வகுப்பு மாணவி அனு ஸ்ரீ, தற்போது கோவை காளப்பட்டியில் செயல்பட்டு வரும் வெங்கீஸ் பேட்மின்டன் பயிற்சி மையத்தில் தீவிர பயிற்சி பெற்று வருகிறார்.
தனது விடாமுயற்சி மற்றும் தொடர்ச்சியான பயிற்சியின் பலனாக, செப்டம்பரில் சீனாவில் நடைபெறவுள்ள ஆசியன் பேட்மின்டன் சாம்பியன்ஷிப் போட்டிக்கான இந்திய அணியில் இடம்பிடித்துள்ளார்.
கடந்த ஆறு ஆண்டுகளாக பேட்மின்டன் விளையாட்டில் முழு கவனத்துடன் பயிற்சி மேற்கொண்டு வரும் அனு ஸ்ரீ, மாநில மற்றும் தேசிய அளவிலான பல்வேறு போட்டிகளில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தியுள்ளார்.

குறிப்பாக ஜெய்ப்பூர் மற்றும் பெங்களூருவில் நடைபெற்ற 15 வயதுக்குட்பட்டோருக்கான பேட்மின்டன் போட்டிகளில் வெற்றி பெற்று தனது திறமையை நிரூபித்துள்ளார்.
இதுகுறித்து அனு ஸ்ரீ கூறுகையில், “இந்தியாவை பிரதிநிதித்துவப்படுத்தி ஆசியன் பேட்மின்டன் சாம்பியன்ஷிப் போட்டியில் பங்கேற்கும் வாய்ப்பு கிடைத்தது மிகவும் பெருமையாக உள்ளது. தினமும் 6 மணி நேரம் கடுமையான பயிற்சி பெற்று வருகிறேன்.
Also Read: கோவையில் நாளை மின்தடை | Coimbatore Power Cut july 24
இந்த போட்டியில் இந்தியாவுக்காக பதக்கம் வெல்ல வேண்டும் என்பதே எனது மிகப்பெரிய இலக்கு. அதன்பிறகு மேலும் பல சர்வதேச போட்டிகளில் கலந்து கொண்டு நாட்டிற்கு பெருமை சேர்க்க விரும்புகிறேன்,” என்றார்.
அனு ஸ்ரீயின் பயிற்சியாளர் செல்வராஜ் கூறுகையில், “இந்தியா முழுவதும் இருந்து வெறும் 22 வீரர், வீராங்கனைகள் மட்டுமே இந்தப் போட்டிக்குத் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். கோவையிலிருந்து இரண்டு பேர் தேர்வாகியுள்ள நிலையில், அனு ஸ்ரீ மட்டுமே ஒற்றையர் மற்றும் இரட்டையர் என இரு பிரிவுகளிலும் தகுதி பெற்றுள்ளார்.
இது மிகப்பெரிய சாதனை. ஏற்கனவே பல போட்டிகளில் வெற்றி பெற்றுள்ள அவரை அடுத்த கட்டமாக சர்வதேச தரத்திற்கு தயார்படுத்தி வருகிறோம். இந்தியாவுக்காக விளையாடும் இந்த வாய்ப்பு எங்கள் பயிற்சி மையத்திற்கும் பெருமை சேர்க்கிறது. தொடர்ந்து சர்வதேச போட்டிகளிலும், எதிர்காலத்தில் ஒலிம்பிக் போட்டியிலும் பங்கேற்கும் திறன் அவருக்கு உள்ளது.
Also Read: ரசிகன் என்பதே முதல் அடையாளம்- ஜனநாயகனுக்கு வந்த அமைச்சர் சம்பத்குமார் பேட்டி…
எங்கள் மையத்தில் ஏற்கனவே ஒரு மாணவி இந்தப் போட்டிக்குத் தேர்வாகிச் சென்ற நிலையில், இரண்டாவதாக அனு ஸ்ரீ தேர்வாகியுள்ளார். இம்மையத்தின் இயக்குநர் வெங்கடேசின் முறையான வழிகாட்டுதலில் இன்னும் தீவிர பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது,” என்றார்.
விடாமுயற்சி, கடின உழைப்பு மற்றும் தன்னம்பிக்கையுடன் முன்னேறி வரும் அனு ஸ்ரீ, சீனாவில் நடைபெறவுள்ள ஆசியன் பேட்மின்டன் சாம்பியன்ஷிப் போட்டியில் இந்தியாவுக்காக சிறப்பாக விளையாடி பதக்கம் வென்று, தமிழகத்திற்கும் நாட்டிற்கும் பெருமை சேர்ப்பார் என்ற நம்பிக்கை விளையாட்டு ஆர்வலர்களிடையே அதிகரித்துள்ளது.





