கோவை: வரி புத்தகம் வழங்க ரூ.25,000 லஞ்சம் பெற்ற மாநகராட்சி ஊழியரை லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் கையும் களவுமாக கைது செய்தனர்.
கோவையில் வரி புத்தகம் கொடுக்க ரூபாய் 25,000 லஞ்சம் வாங்கிய மாநகராட்சி ஊழியரை லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் கைது செய்தனர்.
கோவை, காந்திமா நகரைச் சேர்ந்தவர் அருண் பிரசாத். தனியார் நிறுவனத்தில் வேலை செய்து வருகிறார். இவர் அதே பகுதியில் வீடு மற்றும் சிறிய அளவிலான வணிக வளாகம் கட்டி உள்ளார். அதற்கு வரி செலுத்துவதற்காக கோவை வடக்கு மண்டல அலுவலகத்தில் வரி வசூலிப்பவராக பணியாற்றி வரும் தர்மராஜ் என்பவரை அணுகினார்.
தான் கட்டி உள்ள வீடு மற்றும் சிறிய அளவிலான வணிக வளாகத்துக்கு மாநகராட்சியில் என்ன விதிக்கப்பட்டுள்ளதோ, அந்த வரியை செலுத்தினார். அதைத்தொடர்ந்து வணிக வளாகத்துக்கு ஒரு வரி புத்தகம், வீட்டுக்கு மற்றொரு வரி புத்தகமும் போடப்பட்டது.
இந்தப் பணிகள் முடிந்ததும், அருண் பிரசாத் வடக்கு மண்டல அலுவலகத்திற்கு சென்று வரி புத்தகத்தை கொடுக்குமாறு தர்மராஜிடம் கேட்டார். அதற்கு அவர் ரூபாய் 25 ஆயிரம் லஞ்சம் கொடுத்தால் தான் வரி புத்தகத்தை கொடுப்பேன் என்று கூறியதாக தெரிகிறது.
இதனால் லஞ்சம் கொடுக்க மனம் இல்லாத அருண் பிரசாத் கோவை மாவட்ட லஞ்ச ஒழிப்புத்துறை அலுவலகத்திற்கு சென்று கூடுதல் காவல் கண்காணிப்பாளர் ராஜேஷை சந்தித்து புகார் தெரிவித்தார். இதை அடுத்து தர்மராஜை பொறி வைத்து பிடிக்க போலீசார் முடிவு செய்தனர்.
இதற்காக அவர்கள் ரசாயனம் தடவிய ரூபாய் 25 ஆயிரத்தை அருண் பிரசாதிடம் கொடுத்து, அதை தர்மராஜிடம் கொடுக்க கூறினர். இதைத் தொடர்ந்து அருண் பிரசாத் ரசாயனம் தடவிய ரூபாய் நோட்டுக்களுடன் வடக்கு மண்டல அலுவலகத்திற்கு சென்றார்.
பின்னர் அவர் தர்மராஜை சந்தித்து அந்த பணத்தை கொடுத்தார். அப்போது அங்கு பதுங்கி இருந்த கூடுதல் காவல் கண்காணிப்பாளர் ராஜேஷ், ஆய்வாளர் ஷீலா உள்ளிட்ட போலீசார் விரைந்து வந்து தர்மராஜை கையும் களவுமாக பிடித்து கைது செய்தனர்.
பின்னர் தர்மராஜ் பணியாற்றிய அலுவலகம் மற்றும் அவருடைய வீட்டில் காவல் துறையினர் சோதனை நடத்தினர். அதில் சில முக்கிய ஆவணங்கள் கைப்பற்றப்பட்டதாக கூறப்படுகிறது.



Enna punishment??oru suspension…the aquest must serve to the complaint for one year whatever the work assigned by him