கோவை: கோவை கோட்டை சங்கமேஸ்வரர் கோயிலில் சித்திரைத் தேரோட்டம் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு மேளதாளங்கள் முழங்க விமரிசையாக நடைபெற்றது.
கோவை மாநகரின் மிகப் பழமையான மற்றும் பிரசித்தி பெற்ற ஆன்மீகத் தலங்களில் ஒன்றான கோட்டை அருள்மிகு சங்கமேஸ்வரர் கோயில் தேரோட்டம் இன்று காலை பக்திப் பெருக்குடன் மிக விமரிசையாக நடைபெற்றது.
சித்திரை திருவிழாவின் சிகர நிகழ்வான இந்தத் தேரோட்டத்தில், ஆயிரக்கணக்கான பக்தர்கள் “சிவ சிவ” கோஷமிட்டு வடம்பிடித்து இழுத்தனர். தேவாரப் பாடல்களின் இன்னிசையும், கயிலாய வாத்தியங்களின் முழக்கமும் பக்தர்களுக்கு ஆன்மீக அனுபவத்தை வழங்கியது.
இன்று காலை சரியாக 9.30 மணி அளவில் கோயிலில் இருந்து தேரோட்டம் புறப்பட்டது. அலங்கரிக்கப்பட்ட தேரில் சுவாமி சங்கமேஸ்வரர் எழுந்தருள, அவருக்கு முன்னால் 63 நாயன்மார்களின் சிலைகளும், செங்கோலும் திருவீதி உலாவாக எடுத்து வரப்பட்டன.
பாரம்பரிய சிவ வாத்தியங்கள் முழங்க, ஓதுவார்கள் தேவாரப் பாடல்களைப் பாட, பக்தர்கள் பரவசத்துடன் தேரை இழுத்துச் சென்றனர்.
இந்தத் தேரோட்டம் கோட்டைமேடு வீதி வழியாகச் சென்று, உக்கடம் என்.எச். சாலை மற்றும் பெரிய கடைவீதி வழியாக வலம் வந்து, சரியாக 11.30 மணி அளவில் மீண்டும் கோயிலை வந்தடைந்தது. அப்போது கூடியிருந்த பக்தர்கள் கற்பூர ஆரத்தி எடுத்து சுவாமியை தரிசித்தனர்.
மாநகரின் முக்கிய பகுதியாகிய கோட்டைமேடு வழியாகத் தேர் சென்றதால், கோவை மாநகர காவல்துறை சார்பில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன. துணை ஆணையாளர் கார்த்திகேயன் தலைமையில் நூற்றுக்கணக்கான போலீசார் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டனர்.
அசம்பாவிதங்களைத் தவிர்க்கும் பொருட்டு, வெடிகுண்டு கண்டறியும் நிபுணர்கள் (BDS) மற்றும் மோப்ப நாய் பிரிவு அதிகாரிகள் தேரோட்டம் நடைபெற்ற பாதையெங்கும் முன்னதாகவே தீவிர சோதனைகளை மேற்கொண்டனர்.
வீடியோ


