கோவை: கோவையில் பல்வேறு பகுதிகளில் ஆலங்கட்டி மழை பெய்ததால் பொதுமக்கள் மகிழ்ச்சியடைந்தனர்.
தமிழகத்தில் கடந்த சில தினங்களாகவே வெயில் வாட்டி வருகிறது. கோவையில் 100 டிகிரி பாரன்ஹீட் வெப்பம் பதிவாகி வந்த நிலையில், கோவை உட்பட பல்வேறு மாவட்டங்களில் இன்று முதல் மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை மையம் அறிவித்திருந்தது.
அந்த செய்தியை இங்கே கிளிக் செய்து படிக்கலாம்…
இதனிடையே கோவையில் இன்று காலை முதல் மாலை வரை வெயில் வாட்டி வந்த நிலையில், மாலைக்கு மேல் வானிலை மாறியது. பல்வேறு பகுதிகளில் வானிலை மேகமூட்டத்துடன் காணப்பட்ட நிலையில், புறநகர் பகுதிகளான துடியலூர், நரசிம்மநாயக்கன்பாளையம், தடாகம் சாலை, இடையர்பாளையம், கணுவாய், சோமயனூர் உள்ளிட்ட பகுதிகளில் மாலை பலத்த சூறைக் காற்றுடன் மழை பெய்தது.
இதில், தடாகம், நரசிம்மநாயக்கன்பாளையம், துடியலூர் சுற்றுவட்டாரப் பகுதிகளில் ஆலங்கட்டி மழை பெய்தது. நீண்ட நாட்களாக வெயில் வாட்டி வந்த நிலையில், இன்று திடீரென கோவை மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் பெய்த மழை குளிர்ச்சியான சூழலை உருவாக்கியது.
ஆலங்கட்டி மழை வீடியோ
மேலும், ஆலங்கட்டி மழை பெய்ததால் சிறுவர்கள் உற்சாகமடைந்தனர். பலரும் ஆலங்கட்டிகளை கையில் எடுத்து விளையாடி மகிழ்ந்தனர்.


