கோவை: 30 ஆண்டுகளுக்குப் பின் செந்தில் பாலாஜி மூலம் திமுக வசம் சென்றுள்ளது கோவை தெற்குத் தொகுதி.
கோவை தெற்கு தொகுதியில் செந்தில் பாலாஜி வெற்றி; 30 ஆண்டுகளுக்கு பிறகு திமுக கைப்பற்றி சாதனை!
கோவை தெற்கு தொகுதியில் திமுக சார்பில் போட்டியிட்ட முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி வெற்றி பெற்றுள்ளார். இதன் மூலம் 30 ஆண்டுகளுக்கு பிறகு இந்த தொகுதியை திமுக கைப்பற்றியுள்ளது.
இந்த தொகுதியில் அதிமுக சார்பில் அம்மன் அர்ஜுனன், தமிழக வெற்றி கழகம் சார்பில் செந்தில்குமார், நாம் தமிழர் கட்சி சார்பில் பேரறிவாளன் போட்டியிட்டனர். நேற்று நடைபெற்ற வாக்கு எண்ணிக்கையில், திமுக வேட்பாளர் செந்தில் பாலாஜி 59,724 வாக்குகள் பெற்று, 2,271 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார்.
கடந்த 2008 ஆம் ஆண்டு நடைபெற்ற தொகுதி மறுசீரமைப்பில், கோவை மேற்கு தொகுதியாக இருந்தது, பின்னர் கோவை தெற்கு தொகுதியாக மாற்றப்பட்டது.
30 ஆண்டுகளுக்குப் பின்
இந்த தொகுதியில் 1996 ஆம் ஆண்டு நடைபெற்ற தேர்தலில் திமுக சார்பில் சி.டி. தண்டபாணி வெற்றி பெற்றிருந்தார். அதன் பின்னர் 2001 ஆம் ஆண்டு தேர்தலில் காங்கிரஸ் வெற்றி பெற்றது.
அதனைத் தொடர்ந்து 2006 ஆம் ஆண்டிலிருந்து இந்த தொகுதி அதிமுக வசம் சென்றது. தொகுதி மறுசீரமைப்பிற்கு பின்னர் 2011 மற்றும் 2016 ஆம் ஆண்டுகளில் நடைபெற்ற தேர்தல்களிலும் அதிமுகவே வெற்றி பெற்றது. 2021 ஆம் ஆண்டு நடைபெற்ற தேர்தலில் அதிமுக கூட்டணி கட்சியான பாரதிய ஜனதா கட்சி வெற்றி பெற்றது.
தற்போது நடைபெற்ற தேர்தலில் திமுக வேட்பாளராக போட்டியிட்ட செந்தில் பாலாஜி வெற்றி பெற்றுள்ளார். இதன் மூலம் 1996 ஆம் ஆண்டுக்குப் பிறகு, அதாவது 30 ஆண்டுகள் கழித்து கோவை தெற்கு தொகுதியில் திமுக மீண்டும் வெற்றி பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.



