கோவை: கோவை போத்தனூரில் வீட்டின் சமையலறைக்குள் புகுந்த கொம்பேறி மூக்கன் பாம்பை பாம்பு பிடி வீரர் பாதுகாப்பாக மீட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கோவை போத்தனூர் அருகே அன்பு நகர் பகுதியில் உள்ள ஒரு வீட்டின் சமையலறைக்குள் கடந்த 9ஆம் தேதி திடீரென பாம்பு ஒன்று நுழைந்தது. சமையலறையில் பாம்பு நெளிந்து செல்வதை பார்த்த வீட்டினர் அதிர்ச்சியடைந்து அலறியடித்து வெளியே ஓடினர்.
Read news :LPG சிலிண்டர் டெலிவரியில் புதிய கட்டுப்பாடுகள்… இது இல்லையெனில் சிலிண்டர் இல்லை!
இதையடுத்து பாம்பு பிடிப்பதில் அனுபவமுள்ள மோகன் மோனா குழுவினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்துக்கு விரைந்து வந்த பாம்பு பிடி வீரர், சமையலறை பொருட்களுக்கு இடையே பதுங்கியிருந்த கொம்பேறி மூக்கன் பாம்பை கவனமாக தேடி பிடித்தார்.
விஷத்தன்மை அற்ற இந்த வகை பாம்பு மிகவும் வேகமாக நகரும் தன்மை கொண்டதால் அதை பிடிப்பது சவாலாக இருந்தது. இருப்பினும், பாம்பு பிடி வீரர் எவ்வித பதற்றமும் இன்றி பாம்பை பாதுகாப்பாக மீட்டுச் சென்றார்.
இந்த மீட்பு நடவடிக்கையை அங்கிருந்தவர்கள் செல்போனில் வீடியோவாக பதிவு செய்தனர். அந்த காட்சிகள் தற்போது சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது.
Read news :16 ஆண்டுகள் சிகிச்சை…வாழ்க்கையில் விரக்தி; விஷம் குடித்து ஜவுளிக்கடை ஊழியர் உயி**ப்பு
கோடைக்காலத்தில் குளிர்ச்சியான இடங்களை தேடி பாம்புகள் குடியிருப்பு பகுதிகளுக்குள் நுழையும் சம்பவங்கள் அதிகரித்து வருவதாக வன உயிரின ஆர்வலர்கள் தெரிவித்துள்ளனர். இதுபோன்ற சூழலில் பொதுமக்கள் பாம்புகளை தாக்க முயலாமல், உடனடியாக மீட்பு குழுவினருக்கு தகவல் தெரிவிக்க வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.



