கோவை: ரஷ்யாவில் உயர்கல்வி பயில விரும்பும் இந்திய மாணவர்களுக்கான அகில இந்திய ரஷ்ய கல்விக் கண்காட்சி கோவையில் நாளை (மே 15) நடைபெற உள்ளது.
2026-27 கல்வியாண்டிற்கான இந்த கல்விக் கண்காட்சி கோவை அவிநாசி சாலையில் உள்ள ஹோட்டல் தி கிராண்ட் ரீஜென்டில் காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை நடைபெறுகிறது. ரஷ்ய அரசுக்கு சொந்தமான 7 முன்னணி பல்கலைக்கழகங்கள் இதில் நேரடியாக பங்கேற்கின்றன.
இந்திய மாணவர்களுக்காக 10 ஆயிரம் எம்.பி.பி.எஸ் இடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளதாகவும், ஆண்டுக்கு ரூ.3.5 லட்சம் முதல் மருத்துவக் கல்வி பயில வாய்ப்பு உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், 200-க்கும் மேற்பட்ட இந்திய மாணவர்களுக்கு 100 சதவீத கல்வி உதவித்தொகையும் வழங்கப்பட உள்ளது.
இக்கண்காட்சியில் எம்.பி.பி.எஸ் மட்டுமின்றி பயோடெக்னாலஜி, செயற்கை நுண்ணறிவு, டேட்டா சயின்ஸ் உள்ளிட்ட நவீன படிப்புகளுக்கான சேர்க்கையும் நடைபெற உள்ளது. தமிழ் வழியில் படித்த மாணவர்களும் விண்ணப்பிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
ரஷ்யப் பல்கலைக்கழகங்களில் சேருவதற்கு IELTS, CET போன்ற கூடுதல் தகுதித் தேர்வுகள் தேவையில்லை என்றும், NEET தேர்வில் தகுதி பெற்ற மாணவர்கள் விண்ணப்பிக்கலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து சென்னை ரஷ்யன் ஹவுஸின் துணைத் தூதரும் இயக்குநருமான அலெக்சாண்டர் டோடோனோவ் கூறுகையில், “இந்திய தேசிய மருத்துவ ஆணையத்தின் விதிமுறைகளை முழுமையாக பின்பற்றும் வகையில் ரஷ்ய பல்கலைக்கழகங்கள் செயல்பட்டு வருகின்றன. அதனால் இந்திய மாணவர்களின் தேர்வாக ரஷ்யா தொடர்ந்து உள்ளது” என்றார்.
ஸ்டடி அப்ராட் எஜூகேஷனல் கன்சல்டன்ட்ஸ் நிறுவனத்தின் மேலாண்மை இயக்குநர் ரவி சந்திரன் கூறுகையில், “ரஷ்யாவில் தற்போது சுமார் 25 ஆயிரம் இந்திய மாணவர்கள் மருத்துவம் பயின்று வருகின்றனர்” என்றார்.
இக்கண்காட்சியில் மாணவர்கள் நேரடியாக சேர்க்கை பெறவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.



