கோவை: பிரதமர் கிசான் (PM-Kisan) திட்டத்தின் கீழ் உதவித்தொகை பெற்று வரும் விவசாயிகள் கட்டாயம் விவசாய அடையாள எண் பெற வேண்டும் என்று தமிழக அரசு அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
இதுதொடர்பாக கோவை மாவட்ட வேளாண்துறை வெளியிடப்பட்டுள்ள அறிவிப்பில் கூறியிருப்பதாவது:-
தமிழகத்தில் உள்ள அனைத்து விவசாயிகளும் நில விவரங்களை பதிவு செய்து, விவசாய அடையாள எண் பெறுவதற்கான சிறப்பு முகாம்கள் நடத்தப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மே 9ஆம் தேதி முதல் கோயம்புத்தூர் மாவட்டத்தின் அனைத்து வட்டாரங்களிலும் இந்த சிறப்பு முகாம்கள் நடைபெற்று வருகிறது. இதில் விவசாயிகள் தங்களது ஆதார் அட்டை மற்றும் நில சர்வே எண் விவரங்களை கொண்டு வர வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.
Read news: கோவையில் எத்தனை டாஸ்மாக் கடைகள் மூடப்படுகின்றன தெரியுமா?
மேலும், வட்டார வேளாண்மை உதவி இயக்குநர் அலுவலகங்கள், தோட்டக்கலை உதவி இயக்குநர் அலுவலகங்கள் மற்றும் பொது சேவை மையங்கள் (CSC) மூலமாகவும் பதிவு செய்யலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
விவசாய அடையாள எண் பெறுவதன் மூலம் ஆண்டுக்கு ரூ.6,000 பிரதமர் கிசான் உதவித்தொகை, மத்திய மற்றும் மாநில அரசின் மானியங்கள், பயிர் காப்பீடு மற்றும் இயற்கை பேரிடர் நிவாரண திட்டங்கள் உள்ளிட்ட பல்வேறு நலத்திட்டங்களை பெற முடியும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
எனவே, விவசாயிகள் இந்த சிறப்பு முகாம்களில் கலந்து கொண்டு பயன் பெற வேண்டும். இவ்வாறு வேளாண்துறை தெரிவித்துள்ளது.



