கோவை: கோவையில் உள் மதுவிலக்கு மற்றும்
ஆயத்தீர்வைத்துறை செயல்பாடுகள் குறித்து மாவட்ட ஆட்சித்தலைவர், தலைமையில் ஆய்வு கூட்டம் நடைபெற்றது.
கோயமுத்தூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டஅரங்கில்உள் மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத்துறை செயல்பாடுகள் குறித்து மாதாந்திர ஆய்வு கூட்டம் மாவட்ட ஆட்சித்தலைவர் பவன்குமார் தலைமையில் நடைபெற்றது.
இக்கூட்டத்தில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் கார்த்திகேயன் துணை ஆணையர்கள் கார்த்திகேயன், தேவநாதன், கலால் ஆணையர் முருகேசன், முதுநிலை மண்டல மேலாளர் தமிழ்நாடு மாநில வாணிபக் கழகம் (டாஸ்மாக்) கோவிந்தராஜ் உட்பட அரசு துறை அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.
இக்கூட்டத்தில் மாவட்ட ஆட்சித்தலைவர் தெரிவித்ததாவது, தமிழ்நாடு முதலமைச்சர் ஆட்சிப் பொறுப்பேற்றதும், பொதுமக்கள் நலன் கருதி வழிப்பாட்டுத் தலங்கள், பள்ளிகள், பேருந்து நிலையங்கள் அருகிலிருந்து 500 மீட்டர் வரை அமைந்துள்ள 717 மதுபான சில்லறை விற்பனைக் கடைகளை இரண்டு வாரத்திற்குள் மூட உத்தரவிட்டதன் அடிப்படையில் கோயமுத்தூர் மாவட்டத்தில் அவ்வாறு செயல்பட்டு வந்த 69 கடைகள் மூடப்பட்டுள்ளது.
இந்நிலையில், போதைப் பொருட்கள் போதை மருந்துகள் மற்றும் கள்ளச்சாராயத்தின் விற்பனை மற்றும் விநியோகத்தை கட்டுப்படுத்தும் வகையில் பள்ளிகள், கல்லூரிகள், விடுதிகள் பேருந்து நிலையங்கள், ரயில் நிலையங்கள் உள்ளிட்ட பொது இடங்களுக்கு அருகில் தொடர் சோதனைகள் மேற்கொள்ள வேண்டும்.
மதுபான சில்லறை விற்பனை கடைகளில் அதிகபட்ச சில்லறை விலையை (MRP) மீறி மதுபானங்கள் விற்பனை செய்யப்படாததை உறுதி செய்ய வேண்டும், 21 வயது நிறைவடையாத நபர்களுக்கு டாஸ்மாக் கடைகள் மற்றும் FL2, FL3 பார்கள் மூலம் மதுபானங்கள் விற்பனை செய்யப்படவோ வழங்கப்படவோ கூடாது என்பதை கடுமையாக கண்காணிக்க வேண்டும்.
சட்டவிரோதமாக செயல்படும் பார்களை கண்டறிந்து உடனடி நடவடிக்கை எடுத்து மூடுவதுடன், சிறு கடைகள் ள்ளிட்ட இடங்களில் நடைபெறும் கள்ளச் சந்தை விற்பனையையும் தடுக்க வேண்டும். பார்களில் சட்டவிரோதமாக கள்ள மதுபானங்கள் மற்றும் பிற மாநில மதுபானங்கள் விநியோகிக்கப்படுவதை தடுக்கும் வகையில் கண்காணிப்பை தீவிரப்படுத்த வேண்டும்.
பள்ளிகள், கல்லூரிகள் மற்றும் கல்வி நிறுவனங்களில் மது மற்றும் போதைப்பொருள் பயன்பாட்டிற்கு எதிராக விழிப்புணர்வு நிகழ்ச்சிகளை தொடர்ந்து நடத்த வேண்டும். போதை மீட்புத் திட்டங்களை செயல்படுத்துவதில் சுகாதாரத் துறையுடன் ஒருங்கிணைந்து பணியாற்ற வேண்டும். சமூக நலன் மற்றும் இளைஞர்களின் எதிர்காலத்தை பாதுகாக்க அனைத்து துறைகளும் ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும் என தெரிவித்தார்.



