கோவை: கோவை மாவட்டத்தில் 20 காவல் நிலையங்களுக்கு ஐ.எஸ்.ஓ. சான்றிதழ் வழங்கப்பட்டுள்ளது.
கோவை மாவட்ட காவல்துறை சார்பில் பொதுமக்களுக்கு தரமான, விரைவான மற்றும் மக்கள் நட்பு காவல் சேவைகளை வழங்க பல்வேறு முன்னேற்ற நடவடிக்கைகள் தொடர்ந்து மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. அதன் ஒரு பகுதியாக, காவல் நிலையங்களின் நிர்வாகம், சேவைத் தரம், புகார் பராமரிப்பு, ஆவண மேலாண்மை, சுத்தம் மற்றும் பொதுமக்கள் அணுகுமுறை போன்ற அம்சங்களில் சிறப்பாக செயல்பட்டதற்காக, கோவை மாவட்டத்திலுள்ள 15 காவல் நிலையங்களுக்கு ஐ.எஸ்.ஓ. சான்றிதழ் வழங்கப்பட்டுள்ளது.
அதன்படி ஆனைமலை, வால்பாறை, பேரூர், கே.ஜி. சாவடி, மதுக்கரை, காருண்யா நகர், ஆலந்துறை, தொண்டாமுத்தூர், செட்டிப்பாளையம், பெரியநாயக்கன்பாளையம், கோமங்கலம், சிறுமுகை, நெகமம், கருமத்தம்பட்டி மற்றும் வடக்கிப்பாளையம் காவல் நிலையங்களுக்கு வழங்கப்பட்டுள்ளது.
இதற்கு முன்பு கோவை மாவட்டத்தில் சூலூர், பொள்ளாச்சி தாலுகா, பொள்ளாச்சி கிழக்கு, மகாலிங்கபுரம் மற்றும் தொண்டாமுத்தூர் காவல் நிலையங்கள் ஐ.எஸ்.ஓ. சான்றிதழ் பெற்றிருந்தன. இதன் மூலம், கோவை மாவட்டத்தில் மொத்தம் 20 காவல் நிலையங்கள் தற்போது ஐ.எஸ்.ஓ. சான்றிதழ் பெற்ற காவல் நிலையங்களாக உயர்ந்துள்ளன.
இதுகுறித்து போலீசார் கூறியதாவது, இந்த சாதனை, கோவை மாவட்டபோலீசாரின் அர்ப்பணிப்பு மிக்க சேவை மற்றும் பொதுமக்கள் நலன் சார்ந்த செயல்பாடுகளுக்கான அங்கீகாரமாக கிடைத்துள்ளது.
இந்த பெருமைக்குரிய சாதனையை ஏற்படுத்திய காவல் நிலைய இன்ஸ்பெக்டர்கள், அதிகாரிகள் மற்றும் போலீசாரை கோவை மாவட்ட போலீசார் பாராட்டி, வாழ்த்தி வருகின்றனர்.
கோவை மாவட்ட போலீசார், இனியும் மக்கள் நம்பிக்கையை நிலைநிறுத்தும் வகையில் உயர்தர காவல் சேவைகளை தொடர்ந்து வழங்க உள்ளனர்.
கோவை மாவட்ட எஸ்பி., வழிகாட்டுதலின்படி, மாவட்ட போலீசார் தொடர்ந்து பொதுமக்களுக்கு தரமான காவல் சேவைகள் மற்றும் பாதுகாப்பு நடவடிக்கைகளை வழங்க உறுதி அளிக்கிறோம் என கூறியுள்ளனர்



