கோவை: கோவையில் நள்ளிரவு நேரத்தில் ஓய்வு பெற்ற வங்கி ஊழியரின் வீட்டில் திருட முயற்சித்த நபர் கையும் களவுமாக சிக்கியுள்ளார்.
கோவைபுதூர் சரவணா நகர் பகுதியைச் சேர்ந்தவர் ஓய்வு பெற்ற வங்கி ஊழியர் திருஞானசம்பந்தம்.
இவர் தனது மனைவியுடன் வசித்து வருகிறார். இந்த தம்பதியினருக்கு இரண்டு மகன்கள் உள்ள நிலையில், மூத்த மகன் துபாயில் பணியாற்றி வருகிறார்.
இளைய மகன் அதே வீட்டின் முதல் தளத்தில் வசித்து வருகிறார். நேற்று நள்ளிரவு திருஞானசம்பந்தம் தனது மனைவியுடன் உறவினர் வீட்டிற்கு சென்றிருந்தார்.
அப்போது நள்ளிரவு 2 மணி அளவில் வீட்டில் உள்ள தென்னை மரத்தின் கிளையை யாரோ இழுப்பது போன்ற சத்தம் கேட்டுள்ளது.
வீடியோ
இதனைக் கேட்டு திருஞானசம்பந்தத்தின் இளைய மகன் வெளியே வந்து பார்த்தபோது, தனது தந்தையின் வீட்டின் பூட்டை மர்ம நபர்கள் இருவர் உடைப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்துள்ளார்.
உடனடியாக அவசர போலீஸ் எண்ணுக்கு அழைத்துள்ளார். சம்பவ இடத்திற்கு வந்த போலீசாரை பார்த்ததும் இருவரும் தப்பியோடிய நிலையில், உடுமலையை சேர்ந்த சூர்யா என்பவரை போலீசார் கையும் களவுமாக பிடித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.



