கோவை: கால்நடைகளுக்கு அடையாள எண் பணிகளுக்கு ஒத்துழைப்பு வழங்குமாறு மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.
கோயம்புத்தூர் மாவட்டத்தில் வளர்க்கப்பட்டு வரும் கால்நடைகளுக்கு 12 இலக்கு அடையாள வில்லை எண் பதிவு செய்து அதன் முழுவிவரம் மற்றும் உரிமையாளர் விவரம் மின்னணு தகவல் மூலம் பதிவேற்றம் செய்திட தேசிய மின்னணு கால்நடை இயக்கம் (National Digital Livestock Mission – NDLM) எனும் திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டு வருகிறது.
இத்திட்டத்தில் கால்நடைகளுக்கான செயற்கை முறை கருவூட்டல் கால்நடை காப்பீடு விவரம், கன்று பிறப்பு விவரம், தடுப்பூசிகளான கோமாரிநோய், அடைப்பான் நோய், கன்று வீச்சு நோய், ஆகியவற்றுக்கான பதிவுகள் அடங்கிய விவரங்கள் சேகரிக்கப்பட்டு கால்நடை பராமரிப்புத்துறை மூலம் பதிவேற்றம் செய்யப்படுகிறது.
இத்தகைய தரவுகள் கால்நடைகள் கொள்முதல் விற்பனை மேற்கொள்ளும்போது கால்நடைகள் பற்றிய முழுவிவரம் கால்நடை வளர்ப்போர் தெரிந்துகொள்ள பயனுடையதாக உள்ளது. தரவுகளை பதிவேற்றம் செய்யும்போது உரிமையாளரின் கைபேசி எண், ஆதார் எண் ஆகியவற்றை ஒருங்கிணைத்து விவசாயிகளின் கைபேசிக்கு வருகின்ற கடவுச்சொல் மூலம் கால்நடைகளின் முழுவிவரம் பதிவேற்றம் செய்யப்படுகிறது.
அனைத்து கால்நடைகளுக்கும் தனித்துவ 12 இலக்கு எண் கொண்ட காதுவில்லை அணிவித்து, கால்நடை தொடர்பான விவரங்கள் மற்றும் கால்நடை உரிமையாளர்களின் விவரங்களை பாரத் பசுதன் தளத்தில் (Bharat Pashudhan Portal) பதிவேற்றுவது ஒன்றிய அரசாங்கத்தால் கட்டாயமாக்கப்பட்டுள்ளது
இந்த பணி தற்போது நடைபெற்றுக்கொண்டிருப்பதால் பணி தொடர்பாக கிராமங்களுக்கு கால்நடை பராமரிப்புத்துறை அலுவலர்கள் தங்கள் கிராமத்திற்கு வருகை புரியும் போது அல்லது கால்நடை நிலையங்களுக்கு விவசாயிகள் செல்லுகையில், கால்நடை வளர்ப்போர் தங்களுக்கு வரும் கடவுச்சொல்லை கால்நடை பராமரிப்புத்துறையினரிடம் தெரிவித்து, கோரும் விவரங்களை அளிக்க வேண்டும் என மாவட்ட ஆட்சித்தலைவர் பவன்குமார் தெரிவித்துள்ளார்.


