கோவை: பெண்கள் பாதுகாப்பில் தவெக அரசு கவனம் செலுத்த வேண்டுமென முன்னாள் அமைச்சர் ரவிசங்கர் பிரசாத் தெரிவித்துள்ளார்.
பிரதமர் மோடி அரசின் 12 ஆண்டு கால சாதனைகளை விளக்கும் நிகழ்ச்சி நாடு முழுவதும் நடைபெறுகிறது. அதன் ஒரு பகுதியாக கோவையில் உக்கடம் பகுதியில் உள்ள பெரியகுளம் ஸ்மார்ட் சிட்டி திட்ட குளக்கரையில் முன்னாள் மத்திய அமைச்சரும் பாராளுமன்ற உறுப்பினருமான ரவிசங்கர் மரக்கன்றுகளை நட்டு வைத்தார்.

இந்நிகழ்வில் செய்தியாளர்களை சந்தித்த அவர்,பிரதமர் மோடி அவர்களின் 12 ஆண்டு கால ஆட்சியில் புரிந்த சாதனைகளை விளக்குவதற்காக கோயம்புத்தூரில் பல்வேறு பகுதிகளுக்கு இன்று செல்கிறேன் என்றார்.
இன்று காலை மகாகாளி ஆலயத்திற்கு சென்று வழிபட்டேன், அங்கு தூய்மை பாரத பணிகளை மேற்கொண்டு, இந்த பகுதியில் மரக்கன்றுகள் நடப்பட்டது. தொடர்ந்து, கட்சி நிர்வாகிகளுடன் ஆலோசனைக் கூட்டம் நடைபெறுகிறது என்றார். நாடு முழுவதும் இது போன்ற நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வருகிறது. எனது பாராளுமன்ற தொகுதியிலும் நிகழ்ச்சிகள் நடத்தப்படுகிறது என்றார்.
கோவை ஒரு அருமையான நகரம் என்றும் இங்கு தொழில் மற்றும் உள்நாட்டு உற்பத்தி ஆகியவற்றில் முக்கிய பங்கு வகிக்கிறது என்றார். நாடு முழுவதும் உள்ள பாரதிய ஜனதா கட்சியினர் இந்த நிகழ்ச்சிகளை உற்சாகத்தோடு முன்னெடுத்து வருகின்றனர். தமிழ்நாட்டிலும் அந்த எழுச்சியை என்னால் காண முடிகிறது. வருங்காலத்தில் தமிழ்நாட்டிலும் பாரதிய ஜனதா கட்சி முன்னிலை வகிக்கும் என்பது உறுதியாகியுள்ளது என தெரிவித்தார்.
கரப்பான்பூச்சி கட்சி குறித்து கருத்து கூற முடியாது என்றார். தமிழ்நாட்டில் தவெக அரசின் செயல்பாடுகள் குறித்து இப்போது விமர்சிப்பது சரியாக இருக்காது எனவும், ஆனால் பெண்கள் பாதுகாப்பு சார்ந்த பிரச்சினைகள் இருப்பதாகவும் அதில் கவனம் செலுத்த வேண்டும் என்று தெரிவித்தார்.


