கோவை: பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு வந்த எளிய மக்களை உள்ளே அனுமதிக்காமல், ஆட்சியர் அலுவலகத்தின் வாயிலில் தரையில் அமர வைத்திருப்பது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வாரந்தோறும் திங்கட்கிழமைகளில் மக்கள் குறைதீர்ப்பு கூட்டம் நடைபெறுவது வழக்கம்.
அந்த வகையில், இன்றும் மக்கள் குறைதீர்ப்பு கூட்டம் நடைபெற்று வருகிறது.
பொதுமக்கள் தங்களது பல்வேறு கோரிக்கைகளை மனுவாக எழுதி, மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் அளிப்பதற்காக வந்த வண்ணம் உள்ளனர்.
வழக்கமாகவே, மனு அளிப்பதற்காக கூட்டமாக வரும் பொதுமக்களை போலீசார் ஆட்சியர் அலுவலக வளாகத்திற்குள் அனுமதிப்பதில்லை.
மனு அளிக்க வருபவர்களில் நான்கு முதல் ஐந்து பேரை மட்டுமே போலீசார் உள்ளே அனுமதித்து வருகின்றனர்.

வளாகத்திற்குள் இடப்பற்றாக்குறை இருப்பதால் குறைந்த எண்ணிக்கையிலான நபர்களே உள்ளே அனுமதிக்கப்படுவதாக மாவட்ட நிர்வாகம் தரப்பில் தெரிவிக்கப்படுகிறது.
அதே நேரத்தில், வெளியே காத்திருக்கும் மக்களுக்கு இருக்கை வசதி கூட ஏற்படுத்தப்படுவதில்லை.
இதனால், கைக்குழந்தைகளுடன் வரும் பெண்கள் மற்றும் முதியவர்கள் நீண்ட நேரம் நிற்க முடியாமல், ஆட்சியர் அலுவலகத்தின் வெளியே சாலையோரத்தில் காத்திருக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.
நீண்ட நேரம் நின்று கால் வலி ஏற்படுவதால், பொதுமக்கள் சாலையோரத்திலேயே அமர்ந்துவிடும் அவலமும் தொடர்ந்து வருகிறது.
இதனிடையே, சூலூர் குமாரபாளையம் பகுதியைச் சேர்ந்த நூற்றுக்கும் மேற்பட்ட பெண்கள், தங்களுக்கு வீட்டுமனை பட்டா வழங்க வேண்டும் என்று வலியுறுத்தி இன்று மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு வந்தனர்.
அவர்களில் ஒரு சிலரை மட்டும் வளாகத்திற்குள் அனுமதித்த போலீசார், மற்றவர்களை வெளியிலேயே நிறுத்தினர். நீண்ட நேரம் நின்றதால் சோர்வடைந்த பெண்கள் மற்றும் முதியவர்கள், மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தின் நுழைவு வாயில் அருகிலேயே சாலையோரத்தில் அமர்ந்திருக்கின்றனர்.
அதேபோல், ஆட்சியர் அலுவலக வளாகத்திற்குள் மனு அளிக்கச் செல்பவர்களுக்கும் போதுமான இட வசதியும், இருக்கை வசதியும் ஏற்படுத்தப்படவில்லை. நீண்ட நேரம் நின்றும் படிகளில் அமர்ந்தும் மட்டுமே தங்களது குறைகளை மாவட்ட நிர்வாகத்திடம் தெரிவித்து வருகின்றனர்.
மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் போதுமான இட வசதி இருந்தும் அங்கு இருக்கைகள் அமராததால் இந்த அவலநிலை தொடர்கிறது.
சென்னைக்கு அடுத்த இரண்டாவது பெரிய நகரமாக இருக்கும் கோவையில், தங்களது குறைகள் தீரும் என்ற நம்பிக்கையோடு மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு மனுவோடு வரும் பொது மக்களை தரையில் அமர்த்துவது நியாயமா? என்றும் பொதுமக்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர்.



