கோவை: எம்.எல்.ஏக்கள் கட்சி மாறுவது குதிரை பேரமல்ல என காங்கிரஸ் எம்.பி பிரவீன் சக்கரவர்த்தி பேட்டி அளித்துள்ளார்.
சட்டமன்ற உறுப்பினர்கள் தங்களது பதவியை ராஜினாமா செய்துவிட்டு சுய விருப்பத்தின் பேரில் மாற்று கட்சிக்கு செல்வது குதிரை பேரம் ஆகாது என்றும், தேர்தல் முடிவுகளை ஏற்க மறுத்து திமுக குறுக்குவழியில் ஆட்சியைப் பிடிக்கத் துடிப்பதாகவும் காங்கிரஸ் நாடாளுமன்ற உறுப்பினர் பிரவீன் சக்கரவர்த்தி விமர்சித்துள்ளார்.
கோவை விமான நிலையத்தில் செய்தியாளர்களைச் சந்தித்த அவர்,
அதிமுக எம்.எல்.ஏக்கள் தமிழக வெற்றிக் கழகத்தில் இணைவது என்பது அந்த இரு கட்சிகளுக்கு இடையிலான உள்கட்சி விவகாரம் என்றும் சட்டமன்ற உறுப்பினர்கள் தாமாக முன்வந்து பதவியை ராஜினாமா செய்துவிட்டு வேறொரு கட்சியில் இணைவது என்பது குதிரை பேரம் ஆகாது என்றர்.
சமீபத்தில் திமுகவைச் சேர்ந்த முன்னாள் அமைச்சரும், எம்.எல்.ஏவும் தமிழக வெற்றிக் கழக எம்.எல்.ஏ ஒருவருக்குப் பணம் கொடுத்து சபாநாயகர் மீதான நம்பிக்கையில்லாத் தீர்மானத்திற்கு எதிராக வாக்களிக்கக் கோரிய விவகாரத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
இதுதான் உண்மையான குதிரை பேரம். பதவியை ராஜினாமா செய்துவிட்டுச் செல்வது ஜனநாயக ரீதியான நகர்வு, ஆனால் பணத்தைக் கொடுத்து விலைக்கு வாங்குவது முற்றிலும் சட்டவிரோதமானது. இதை விடுத்து, இடைத்தேர்தலை நிறுத்தக் கோரி இன்பதுரை தேர்தல் ஆணையத்தில் மனு அளித்திருப்பதில் எந்த அடிப்படை நியாயமும் இல்லை என குறிபிட்டார்.
முதலமைச்சர் விஜய் தலைமையிலான த.வெ.க – காங்கிரஸ் கூட்டணி அரசின் 50 நாள் ஆட்சி ஒரு மாபெரும் புரட்சியைத் தமிழகத்தில் ஏற்படுத்தியுள்ளது என்றும் அரசு அலுவலகங்களில் லஞ்சம், ஊழல் என்ற வார்த்தைக்கே இடமில்லாத நிலை உருவாகியிருப்பதை சாதாரண மக்களே கூறுகின்றனர்.
சட்டம் ஒழுங்கு சீர்கெட்டுவிட்டதாகக் கூறப்படும் குற்றச்சாட்டுகள் முற்றிலும் தவறானவை என்றார்.
பெண்களுக்கு எதிரான குற்றங்களைத் தடுக்க சிங்கப் பெண் என்ற பிரத்யேகத் திட்டம் உடனடியாக முன்னெடுக்கப்பட்டுள்ளது. கடந்த 5 ஆண்டுகளில் நடந்தவற்றை வெறும் 50 நாட்களோடு ஒப்பிடுவது நியாயமற்றது. குறுகிய காலத்திலேயே இந்த அரசு மக்களுக்கான திட்டங்களில் சிறப்பான கவனத்தைச் செலுத்தி வருகிறது என்றார்.
2026 சட்டமன்றத் தேர்தலில் திமுக எதிர்க்கட்சி வரிசையில் அமர வேண்டும் என்பதே மக்களின் தெளிவான தீர்ப்பாக இருந்தது. ஆனால், அந்த மக்கள் தீர்ப்புக்குத் துரோகம் செய்யும் வகையில், அதிமுகவுடன் மறைமுகப் பேச்சுவார்த்தை நடத்தி ஆட்சியைக் கவிழ்க்க திமுக முயற்சிக்கிறது.
அவர்கள் எதைக் கண்டு இவ்வளவு பயப்படுகிறார்கள்? ஆட்சி நிர்வாகத்தில் தாங்கள் செய்த என்னென்ன தவறுகள் அம்பலமாகிவிடும் என்ற அச்சத்தில் இப்படிப் பதறுகிறார்கள் என்ற கேள்வி எழுகிறது. மற்ற கட்சிகளில் இருந்து வருபவர்கள் மீதான குற்றச்சாட்டுகள் குறித்து த.வெ.க தலைமை முறையாகப் பரிசீலித்து முடிவெடுக்கும்.
காங்கிரஸ் கட்சி இந்த அரசுக்கு முழுமையான ஆதரவை அளித்து வருகிறது. சமீபத்தில் கோவளத்தில் நடைபெற்ற தேநீர் விருந்தில் பங்கேற்றபோது, கூட்டணிக் கட்சிகளுக்கு இடையே உள்ள பரஸ்பர மரியாதையையும் கண்ணியத்தையும் காண முடிந்தது.
கடந்த 60 ஆண்டு கால தமிழக அரசியல் வரலாற்றில் இப்படி ஒரு ஆரோக்கியமான கூட்டணி தர்மம் அமைந்தது கிடையாது. கிரிக்கெட் வீரர் வைபவ் சூரியவம்சியின் சிறப்பான ஆட்டத் தொடக்கத்தைப் போல, இந்த ஆட்சியின் முதல் 50 நாட்கள் மிகச் சிறப்பாக அமைந்துள்ளது என பிரவீன் சக்கரவர்த்தி தெரிவித்தார்.


