கோவை: கோவையில் ஆட்டோவில் பணத்தைத் தொலைத்து மூதாட்டி ஒருவர் தவித்துக்கொண்டிருந்த நிலையில், இன்ஸ்டாகிராமில் வீடியோ பதிவிட்ட ஆட்டோ ஓட்டுநர்கள் அந்தப் பணத்தை மூதாட்டியிடம் சேர்த்த சம்பவம் சமூக வலைதளங்களில் பாராட்டுகளைப் பெற்று வருகிறது.
கோவை கே.என்.ஜி புதூரைச் சேர்ந்த கமலா என்ற மூதாட்டி நாகர்கோவிலில் இருந்து இன்று காலை பேருந்து மூலம் கோவை காந்திபுரம் பேருந்து நிலையத்திற்கு வந்தார். அப்போது தனது கையில் இருந்த மணிபர்ஸை எங்கோ தவறவிட்டுவிட்டார்.
அதனைத் தேடி அலைந்தபோதும் கிடைக்காததால் வேதனையுடன் வீடு திரும்பினார். இதனிடையே, காந்திபுரம் பேருந்து நிலையம் அருகே செயல்பட்டு வரும் ஆட்டோ ஸ்டாண்டில் இருந்த ஆட்டோ ஓட்டுநர் மணிகண்டன் என்பவர் அந்த மணிபர்ஸைக் கண்டெடுத்தார். அதில் ரூ.3,500 பணம், ஆதார் அட்டை மற்றும் ஒரு சிறுவனின் புகைப்படம் இருந்தது.
இதையடுத்து, அந்த ஆதார் அட்டையைக் காட்டி இன்ஸ்டாகிராமில் ஒரு வீடியோவை பதிவிட்டார். இதனைப் பார்த்த மூதாட்டியின் பேத்தி, ஆட்டோ ஓட்டுநரைத் தொடர்புகொண்டு விவரங்களைக் கூறினார்.
தொடர்ந்து காந்திபுரம் சென்ற மூதாட்டி, பெரும் மகிழ்ச்சியுடன் அந்த மணிபர்ஸை வாங்கிவிட்டு, ஆட்டோ ஓட்டுநர்களுக்கு மனதார நன்றி தெரிவித்தார். தொடர்ந்து ஆட்டோ ஓட்டுநர்கள் அந்த மூதாட்டியுடன் புகைப்படங்கள் எடுத்துக்கொண்டனர்.
இதுகுறித்து மூதாட்டி கூறுகையில், “எனது பேத்திகள் கோவையில் கல்லூரிகளில் படிக்கின்றனர். இதற்கான செலவுக்காக எனது மகன் பணம் கொடுத்தார். மேலும், மணிபர்ஸில் எனது பேரனின் படத்தையும் வைத்திருந்தேன்.
வீடியோ
அனைத்தும் தொலைந்ததால் மனவேதனையில் இருந்தேன். இப்போது எனது பணத்துடன், பேரனின் புகைப்படத்தையும் ஆட்டோ ஓட்டுநர்கள் மீட்டுக் கொடுத்துள்ளனர். அவர்களுக்கு நன்றி தெரிவிக்கிறேன்” என்று நெகிழ்ச்சியுடன் கூறினார்.
இதனைப் பார்த்த அப்பகுதி மக்கள் ஆட்டோ ஓட்டுநர்களை வெகுவாகப் பாராட்டி வருகின்றனர். சமூக வலைதளங்களை சிலர் தவறாகப் பயன்படுத்தி மோசடி செயல்களில் ஈடுபட்டு வரும் அதே நேரத்தில், அதே சமூக வலைதளம் மூலம் ஒரு மூதாட்டியின் மகிழ்ச்சியைத் திரும்பக் கொடுத்த ஆட்டோ ஓட்டுநர்களுக்கு பாராட்டுகள் குவிந்து வருகின்றன.vவி





